நாம் எத்தனையோ பண்டிகைகளை ஆண்டுதோறும் கொண்டாடினாலும், எந்த பண்டிகைக்கும் இல்லாத ஒரு சிறப்பு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே உண்டு.
ஜாதி, மத பேதங்களை மறந்து சமத்துவம் வளர்க்கும் ஒரே பண்டிகை பொங்கல்தான் என்றால் அது மிகையில்லை.
காரணம், பிற பண்டிகைகள் ஒரு குறிப்பிட்ட கடவுளையோ, மதத்தையோ அல்லது மத குருவையோ மையமாக கொண்டதாக இருக்கும்.
ஆனால், உழைப்பையும், இயற்கையையும் வழிபடுவதை மையமாக வைத்து கொண்டாடப்படும் ஒரே பண்டிகை பொங்கல் பண்டிகை மட்டும்தானே!
உழைப்பை போற்றுவதற்கும், இயற்கையை வணங்குவதற்கும் ஜாதி, மத பேதம் ஏது? இதனால்தான் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்பட்டாலும், தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும்... அவ்வளவு ஏன், உலகம் முழுவதுமே கொண்டாடப்படுகிறது இந்த பொங்கல் பண்டிகை.
தமிழகத்தில் பொங்கல்!
தமிழகத்தில் உழவர்களின் திருநாளாகவும், அறுவடை திருநாளாகவும் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டிகை உழைப்பை போற்றும் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மொத்தம் 4 தினங்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாள் போகிப் பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்...' என்பதற்கேற்ப போகித் தினத்தில் பழையப் பொருட்களை தீயிட்டு எரித்து அழிக்கின்றனர். வீடுகளுக்க்கு புது வண்ணம் பூசி, புதுப் பொருட்களை சேர்க்கின்றனர்.
இதன் மறுநாள் பொங்கல் பண்டிகை. புதுப்பானையில், புது அரிசியிட்டு கரும்பு, கிழங்கு மற்றும் அனைத்து வகை காய்கறிகளை கொண்டு பொங்கல் வைக்கின்றனர். இதை சூரியக்கடவுளுக்கு படைத்து வழிபடுகின்றனர்.
3வது நாள் மாட்டுப்பொங்கல். உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும் கால்நடைகளுக்காக கொண்டாடப்படும் பொங்கல் இது. அன்று அதிகாலையிலேயே, கால்நடைகளை குளிப்பாட்டி, கொம்புகளில் வண்ணம் பூசி அவற்றுக்கு பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
இறுதி நாளாக கொண்டாடப்படும் காணும் பொங்கல் மற்றொரு முக்கிய அம்சம். இன்றைய தினத்தில் அனைவரும் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு இனிப்பு மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து கல்ந்துரையாடும் நாள். இதன்மூலம் உறவுகள் வலுப்படுகிறது.
பெரும்பாலான ஊர்களில் இன்றைய தினத்தில்தான் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஆண்களுக்கான வீர விளையாட்டுகள், பெண்களுக்கு என சில பிரத்யேக போட்டிகள் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சி.
இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் எங்கு நடந்தாலும், ஜாதி மத பேதமின்றி அனைவரும் இதில் பங்கேற்று மகிழ்கின்றனர். முன் விரோதம், கருத்து வேறுபாடுகள் கொண்டிருப்பவர்கள் கூட இந்த தினத்தில் ஒன்றிணைந்து போட்டிகளில் பங்கேற்று மகிழ்வதை காண முடியும். ஜாதி, மத, இன, மொழி என எந்த வேறுபாடுகளுக்கும் இந்த பொங்கல் விளையாட்டு களத்தில் இடமில்லை என்பது கண்கூடு.
பொதுவாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இப்படித்தான் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது, சமத்துவம் வளர்கிறது என்றாலும் வேறு சில மாவட்டங்களில் நடைபெறும் விசேஷ அம்சங்கள் உலக பிரசித்தி பெற்றவை. அவற்றில் சில:
'ஜல்லிக்கட்டு' பொங்கல்!
மதுரை பொங்கல் இந்தியா மட்டுமல்ல, உலக பிரசித்தம். காரணம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. மதுரை மாவட்டம் பாலமேட்டில் தை மாதம் 2ம் தேதியும், அலங்காநல்லூரில் தை 3ம் தேதியும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உலகம் முழுவதிலுமிருந்தும் ரசிகள் வந்து குவிவதைக் காணலாம்.
இந்த பொங்கல் தினத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்காக, ஆண்டு முழுவதும் மாடுகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருவது இப்பகுதி மக்களின் வழக்கம். அவர்களை பொருத்தவரை இது ஒரு கவுரவமும் கூட.
இதற்காக, நல்ல இனத்தை சேர்ந்த மாடுகளை கன்றுகளாக இருக்கும் போதே வாங்கி வளர்ப்பர். தினமும் பச்சரிசி மற்றும் சின்ன பருத்திக்கொட்டை கலவையை அரைத்து கொடுப்பர். தினந்தோறும் 50 லிட்டர் வரை தண்ணீர் கண்டிப்பாக உண்டு. இதன் மூலம் இளம் பருவத்திலேயே காளை மாடுகள் தெம்பாக வளரும். அதோடு, தினமும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த காளைகளுக்கு சண்டை பயிற்சியும் உண்டு. அதாவது, மனித உருவில் ஒரு பொம்மையை தயார் செய்து அதை வேகமாக குத்திக் கிழிக்கும்படி மாடுகளுக்கு தினமும் பயிற்சி அளிப்பர்.
இதில் சின்னாபின்னமாகி சரியும் மனிதப் பொம்மையின் வயிற்றுப்பகுதியில் இருந்து சிவப்பு நிறத்தில் ஒரு இனிப்புக்கலவை வெளியே வரும்படி செய்வர். இதை அந்த காளைகள் ரசித்து சுவைக்கும். இதன் மூலம் காளைகளுக்கு உருவாகும் வெறிதான், ஜல்லிக்கட்டு களத்தில் தன்னை அடக்க வரும் இளம்காளையர்களை கொம்புகளால் தூக்கி அலாக்காக வீசியெறிவதற்கு காரணம்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை ஒரு வீர விளையாட்டாக மட்டுமே எடுத்துகொள்ள முடியாது. அவை சமத்துவம் வளர்க்கும் ஒரு நல்ல விழாவும் கூட.
காளையை அடக்கும் வலு படைத்த எந்த இளம் காளையரும், எந்த ஜல்லிக்கட்டிலும் களம் இறங்கலாம். ஜாதி, மத பேதம் எதுவும் இதில் கிடையாது என்பதுதான் இதற்குக் காரணம்.
இரு கிராமங்களுக்கு இடையே, இரு பிரிவினருக்கு இடையே முன் விரோதங்கள் இருந்தால் கூட, அவர்களை கருத்து ஒருமித்து சேர்த்து வைக்கும் ஒரு களமாகவே ஜல்லிக்கட்டுகள் திகழ்கின்றன.
சமத்துவம் வளர்க்கும் இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் போன்ற பல மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. (இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கு நீதிமன்றம் தடைவிதித்திருப்பது இந்த மாவட்ட மக்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.)
|