மாதங்களிலே மார்கழியும் தையும் ஒரு மகிழ்ச்சியான, குதூகலமான மனோ நிலைகளை உருவாக்கவல்லது. குறிப்பாக தை மாதம் பண்டிகைகளுக்கான மாதம், விவசாயிகள் மட்டுமல்லாது அனைவருமே மகிழ்ச்சியுடன் கொண்டாடும் ஒரு பண்டிகைதான் பொங்கல்.
கிரிக்கெட் ரசிகர்களைப் பொறுத்தவரை, குறிப்பாக சென்னை ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகை குதூகலம் பொங்கல் கிரிக்கெட் டெஸ்ட் குதூகலத்துடன் இணைந்துவிடும். சேப்பாக்கம் மைதானம் அதற்கு முன்னரே களை கட்டிவிடும். பொங்கல் தினத்தன்று சேப்பாக்கம் மைதானத்தில் நேரில் சென்று தங்களது ஹீரோக்களின் விளையாட்டை பார்த்து மகிழ்ந்தது இன்னமும் பலரது நினைவில் பசுமையாக பதிந்திருக்கும். அதுபோன்ற பசுமையான நினைவுகளை எழுப்பும் இந்திய-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே 1975ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியை நாம் நினைவுகூர்வோம்.
கிளைவ் லாய்ட் தலைமையிலான மேற்கிந்திய அணியில் அதிரடி வீரர்களான ராய் ஃப்ரெட்ரிக்ஸ், கிரீனிட்ஜ், ரிச்சர்ட்ஸ், காளிச்சரண், ஆல் ரவுன்டர்கள் ஜூலியன், பாய்ஸ் உட்பட ராபர்ட்ஸ், ஹோல்டர் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் சுழற்பந்து வீச்சாளர் கிப்ஸும் அந்த பலமான அணியில் இருந்தார்.
நினைவில் நின்ற விஸ்வநாத் ஆட்டம்!
இந்திய ரசிகர்களுக்கு இன்று வரை அதிரடி பேட்ஸ்மென் என்றால் ஒரு பெயரைத்தான் குறிப்பிடுவார்கள். அந்த பெயர் விவியன் ரிச்சர்ட்ஸ். உலகப் பந்து வீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த விவ் ரிச்சர்ட்ஸ் இந்த தொடரில்தான் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகமாகிறார். ஏற்கனவே 2 டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்திய அணியை சகல விதத்திலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிருந்தது. அதில் விவ் ரிச்சர்ட்ஸ் மிகப்பெரிய சதம் ஒன்றையும் (டெல்லி டெஸ்டில்) எடுத்திருந்தார்.
கொல்கத்தா டெஸ்டில் இந்திய சுழற்பந்து வீச்சிற்கு சுருண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 2- 1 என்று முன்னிலை பெற்றிருந்தபோதும், தோல்வியால் ஆத்திரத்துடன் இருந்தனர். ஏனெனில் அப்போதெல்லாம் மேற்கிந்திய அணியை வெல்வது என்பதே அரிதான விஷயம்.
இந்த நிலையில்தான் அதிக எதிர்பார்ப்புடன் சென்னை டெஸ்ட்... அல்ல... பொங்கல் டெஸ்ட் ஜனவரி 11ம் தேதி துவங்கியது. ரசிகர்கள் மத்தியில் ஆரவாரம்மும் குதூகலமும் பொங்கிய அதே வேளையில் ஆட்டக்களத்தை பார்த்த கேப்டன்களுக்கோ சோர்வு. ஏனெனில் காய்ந்து போன, தூசியும் தும்பட்டையுமான ஒரு ஆட்டக்களமாக அது இருந்தது. பேட்ஸ்மென்கள் இதில் கஷ்டப்படவேண்டியிருக்கும் என்று கேப்டன்களான பட்டௌடி மற்றும் கிளைவ் லாய்ட் நினைத்தனர். ஆனால் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. இந்தப்போட்டியில் அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்த சுனில் காவஸ்கர் இல்லாதது கூட ரசிகர்களுக்கு அவ்வளவு ஏமாற்றம் அளிப்பதாக இல்லை. ஏனெனில் கம்பீரமான மேற்கிந்திய அணியின் ஆட்டத்தை பார்ப்பதற்கென்றே அன்று சேப்பாக்கம் நிரம்பி வழிந்தது.
|