முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > பொ‌ங்க‌ல்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பொங்கப்படி
-மு‌கில‌ன் ‌பி.
pongal
webdunia photoWD
ராஜி அக்காவுக்கு பொங்கல்படி கொடுக்க வேண்டும், பொங்கலுக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாகவே ஊருக்கு வர முடியுமா எனக் கேட்டு அம்மாவிடமிருந்து போன் வந்ததிலிருந்து சங்கரானந்துக்கு பொங்கல்படி குறித்த பழைய நினைவுகள் சுற்றிச் சுழலத் தொடங்கிவிட்டன.

சங்கரானந்த் வீட்டோட தெரு நீளமானது.தெருவில் இரு பக்க வரிசையில் இருக்கும் ஒவ்வொரு வீடும் பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே வெள்ளை பூசிக்கொண்டு, மினுக்கிக் கொண்டிருக்கும்.சிலரது வீடுகளில் ஜன்னல், கதவுகளில் மட்டுமல்லாது சுவற்றிலும் காணப்படும் பெயிண்ட் பூச்சு, அந்த வீட்டு பவுசைக் காட்டும்.

அப்பவெல்லாம் தெருவோட தோற்றமே மாறிப்போய்விடும்.பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமிருந்தாலும் அப்பவே பொங்கல் பண்டிகை கொண்டாட்ட எண்ணம் வந்துவிடும்.

ஆனால் பொங்கலுக்கு நாலைந்து நாட்களுக்கு முன்னதாகவே தெருவில் இருக்கும் பல வீடுகளுக்கு வேனிலும், டேக்சியிலுமாக கட்டுக்கட்டான கரும்புகளுடன் பொங்கல் படி வந்திறங்குவதை பார்த்து சங்கரானந்துக்கு ஏக்கமாக போய்விடும்!

போதும்போதாதற்கு பொங்கல்படி வந்திறங்கும் வீட்டிலிருக்கும் இவனது சேக்காளிகள், " பாத்தியாடே ?!... எங்க வீட்டுல எவ்வளோ கரும்புன்னு " சொல்லி வெறுப்பேத்துவார்கள்.அந்த வாண்டுகள் சொல்வதும் உண்மைதான் !

பொங்கல்படி என்றால் அந்த தெருவில் வாக்கப்பட்டு வந்த பெண் குடும்பத்தினருக்கு இருக்கும் வசதியை பொறுத்து, பொங்கல்படியின் பவுசு வெளிப்படும்.வசதிபட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களென்றால் மெட்டடார் வேனின் மேல் நாலைந்து கரும்பு கட்டுகள்.அரைக்கோட்டை, ஒரு கோட்டை என சாக்கு மூட்டையில் பச்சரிசியும், புழங்கலரிசியும்.அது போல வெல்லமும் சிப்பமாக வரும். அப்புறம் இருக்கிற காய்கறிகள் எல்லாம் ரகத்திற்கு ஒரு கிலோ வீதம் தனியா ஒரு சாக்கு மூட்டையில். அப்புறம் பயறு, பருப்பு வகைகள், மசாலா சாமான்கள், தேங்காய், வாழைப்பழத்தார், இலைக்கட்டு, சப்பு சவறு என இறக்க முடியாமல் இறக்குவார்கள்.

இப்படி கொண்டாந்து இறக்கினால்தான் அந்த தெருவில் வாக்கப்பட்ட வந்த பெண்ணுக்கு கவுரதையாக இருக்கும். பார்ப்பவர்களும் மூக்கில் மேல் ஒற்றை விரலை வைத்து, "பாத்தியாடி, புஷ்பக்கா மருமவளுக்கு வந்திருக்கிற பொங்கப்படிய!" என பெருமை பேசுவார்கள்.

அதிலும் தலப்பொங்கப்படி என்றால் கேட்கவே வேண்டாம்.இன்னும் அமளிதுமளிப்படும். அண்டா, கொப்பரை என பாத்திர சீரும், பொண்ணு மாப்பிள்ளைக்கு புதுத் துணியும், இன்னும் வசதிபட்டால் செயின், மோதிரம் எனப் போகும்.

தலப்பொங்கப்படியோடு சேர்த்து குறைஞ்சது மூணு பொங்கலுக்காவது இதே மாதிரி கொடுத்தாவணும்.தலப்பொங்கப்படிக்கு மெட்டடார் வேனில் வருபவர்கள்,ரெண்டாம் பொங்கப்படிய பிளசர் காரிலும், மூணாம் பொங்கப்படிய ஆட்டோவிலுமா கொண்டாருவாங்க !அப்படித்தான் பொங்கப்படியோட வரிசை குறைஞ்சுக்கிட்டு போகும்.

அதுக்குப் பிறகு கட்டிக் கொடுத்த பொண்ண புருஷங்காரன் வச்சு வாழுற லட்சணத்தை பொறுத்து இந்த பொங்கப்படி தொடரும்.மூணு பொங்கலுக்கு முன்னாடியே மாப்பிள்ளையோட குட்டு வெளிப்பட்டு போனால், "அந்த மூதிக்கு பொங்கப்படி ஒரு கேடா" என பொண்ணு வீட்டிலிருந்து வசவுப்படிதான் வரும்.

ஒழுங்கா வச்சு வாழ்ந்தால், பொங்கப்படி சாமான் வராட்டாலும் ஆயிரமோ அல்லது ஐநூறோ என பணமாக மகள் பெயருக்கு மணியார்டராக வந்து சேரும்.அல்லது பக்கத்து ஊரென்றால் நேரில் வந்து கொடுத்து விட்டுப் போவார்கள்.

இந்த வகையான பொங்கப்படி பொண்ணு வீட்டுக்காரவுங்களே மனசு நெறஞ்சு செழிப்பாக் கொடுக்கறது. இன்னொண்ணு வகையும் இருக்கு.வாக்கப்பட்டு வந்த பொண்ணோட மாமியார் பொங்கப்படிக்கு என்னவெல்லாம் கொண்டு வரணும் , எதது எத்தனை படி... எத்தனை கிலோ வேணுமுன்னு லிஸ்ட்டு போடாத குறையாக வாயாலேயே அடுக்கிவிடுவார்.இதில் ஒரு சாமான் குறைந்தாலோ அல்லது கிலோ குறைந்தாலோ போச்சு ! பங்கராட்டம் ஆடி விடுவாள் மாமியாக்காரி!

"வக்கத்தவ வீட்டுல பொண்ணு எடுத்தா இதான்! மேல வீட்டு நீலாவப் பாரு... என்னப்போலத்தான் இட்டடியில இருந்து பொண்ணு எடுத்திருக்கா... வந்து இறங்குது பாரு பொங்கப்படி, சனம் மூக்கு மேல விரல வைக்காப்ல!

நமக்கும் வந்து வாச்சிருக்கே...! இவங்கிட்ட அப்பவே சொன்னேன்... இந்த பொண்ணு வேண்டாம்டா பாக்கத்தான் சேப்பு தோலா இருக்கா ...முழிக்கிற முழி சரியில்லைன்னு. கேட்டானா ? தோலு சேப்பா இருக்குனு மயங்கி கெட்டிக்கிட்டான்.இப்ப... ? ஒழுங்கா ஒரு பொங்கப்படியக் கூட கொடுக்க வக்கில்லன்னு காட்டிப்புட்டாங்க !
  1 | 2  >> 
மேலும்
பொ‌ங்கலு‌ம் ஒடை‌ஞ்ச பானையு‌ம்...(‌சிறுகதை)
மாற்றம்! (சிறுகதை)
விரைவில் தமிழருடைய புத்தாண்டாக தை முதல் நாள்: கருணாநிதி!
தடையை மீறி ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு பாதுகாப்பு குழு அறிவிப்பு!
மஞ்சளின் மகத்துவம்!
பொ‌ங்கலு‌க்கு ‌ 5 கா‌ட்‌சி: த‌மிழக அரசு அனு‌ம‌தி!