"ஷிவா..."
ராதாவின் குரலொளியில் எழுந்தான்.
"என்ன நைட் பார்டி எஃபக்ட் இன்னும் குறையலயா?"
"நோ டா... ஸ்மிதா ஸ்கூல் போயாச்சா?" மெத்தைக் கட்டிலில் இருந்து எழுந்தவன், பேஸ்டை எடுக்க பாத்ரூமுக்குள் நுழைந்தான்.
"போய் ஒன்னவர் ஆகுது. புது 'ஆப்பிள்' லாப் டாப் கேட்டிருந்தாளாமே! என்னாச்சு?"
"ம்... நான் ஸ்கூல் போனப்ப 5 கிலோ புக்ஸ் மூட்டை எடுத்துட்டுப் போவேன். ஆனா... இப்ப..." பேஸ்டைப் பிதிக்கியபடி கண்ணாடியைப் பார்த்தான்.
"அது 2001... இப்ப 2033. நியாபகம் இருக்கா? இல்ல நைட் பார்டி எஃபக்ட்ல மறந்துபோச்சா?"
"போதும்... சாலட் ரெடி பண்ணு."
சமையலில் சுறுசுறுப்பானாள் ராதா. ஷிவாவால் ஈடுபாட்டுடன் பல்துலக்க முடியவில்லை. யோசனையில் மூழ்கினான். திருச்சி அரசு பள்ளியில் படித்த 2001, 02 -ம் வருடங்கள் நினைவலையில் வந்து சென்றன. வந்த வேகத்தில் சென்றும் விட்டன.
"ரா..?"
"ம்..."
"கம்மிங் ஃபிஃப்டீன்த் பொங்கல் ஃபெஸ்டிவல்."
"தெரியும்... லீவ் ஷெட்யூல்ல பார்த்தேன்"
"ஊருக்கு போலாம்னு தோணுது"
"இஸ் இட்? கிரேட்... லாஸ்ட் 10 இயர்ஸா தோணவே இல்லையே. நோ ப்ராப்ளம் போயிட்டு வா. என்னால முடியாது. அசைன்ட்மென்ட்ஸ் இருக்கு. ஸ்மிதாவை, அவ ஸ்கூல்ல எஸ்கர்ஷன் கூட்டிட்டு போராங்களாம். ஏதோ... மெல்போர்ன்னு சொன்னா..."
"நான் மட்டும்தான் போனுன்னு தோணிச்சு"
"நைஸ்... அப்ப இந்த மந்த் உங்க அப்பா அக்கவுன்ட்ல காஷ் டிரான்சாக்ட் பண்ணாதா. டைரக்டா கொடுத்துடு"
சென்னை வந்து 20 வருடமாகிவிட்டது. அப்பா, அம்மாவைப் பார்க்க வேண்டுமானால், அவர்கள் வந்தால்தான் உண்டு. வேலை... வேலை... வேலை... இந்த மூன்றும் தான் ஷிவாவுக்குத் தெரிந்தவை. அமெரிக்க முதலாளிக்கு சென்னையில் இருந்து செய்து மாதம் ஒன்றரை லட்ச ரூபாய் ஊதியம் ஈட்டும் தொழிலாளி.
சுண்டு விரலால் தூக்கக் கூடிய மெல்லிய, நீல செல்பேசியை எடுத்தான். அதில், மின்னஞ்சல் அனுப்பி அலுவலகத்துக்கு விடுப்பு அறிவித்தான். பின், அதிலேயே ஏர் டெக்கானில் திருச்சிக்கு முன்பதிவு செய்தான்.
|