தலைமையின் எல்லா மாவட்டங்களிலும் இந்துக்களும் முஸ்லீம்களும் பொறுப்பேற்றிருந்தனர். "இந்த ஒரு கட்டத்தில், இந்துக்களுக்கு எதிராக முகமதியர்களே நாம் தூண்டிவிட இயலவில்லை", என்று உயர்தர பிரிட்டிஷ் அதிகாரி ஒருவர் பின்னர் அங்கலாய்த்தார். 1858 ஆம் ஆண்டுக்கு முன்பும், வரலாற்றின் நடுப்பகுதியிலும், இந்தியாவில் மக்களிடையேயும் அரசியலிலும் வகுப்பு வாத உணர்வு ஓங்கியிருக்கவில்லை என்பதற்கு, 1857 ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தெளிவான சான்றாகும்.
இறுதியில், உலகெங்கும் ஆதிக்கத்தின் உச்ச கட்டத்திலிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், இந்திய சிற்றரசர்கள், பாளையக்காரர்கள், ஆகியோரில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன், தன்னுடைய இராணுவ பலத்தைக் கண்டு, புரட்சியை அடக்கி ஒடுக்க முடிந்தது. புரட்சிக்காரர்களிடம் போதிய ஆயுதங்களும், கட்டுக்கோப்பான அமைப்பும், கட்டுப்பாடு உறுதியும், ஒன்றுபட்ட தலைமையும் இல்லாதது பெரும் குறையாக இருந்தது. அக்குறைகளை அவர்கள் ஈடுசெய்வதற்கு முன்பாக, பிரிட்டிஷ் அரசாங்கம், தன்னுடைய எல்லையற்ற வளங்களையும் வசதிகளையும் ஒன்றுதிரட்டி, புரட்சியை மிகக் கடுமையாக அடக்கியது.
1857 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி, பிரிட்டிஷார் டில்லியைக் கைப்பற்றி, மாமன்னர் பகதூர்ஷாவைச் சிறையெடுத்தபோது, புரட்சிக்காரர்களுக்குப் பெரும் தோல்வி ஏற்பட்டது. மற்ற தலைவர்கள் சிறிது காலம் துணிச்சலாகப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்கள். ஆனால் ஒருவர் பின்பு ஒருவராக, அவர்களும் வீழ்ச்சியடைந்தனர். நானாசாகிப் கான்பூரில் தோல்வியடைந்தார். அவருடைய விசுவாசமான தளபதியான தாந்தியா தோப், தொடர்ந்து, தலை மறைவாக வீரப் போராட்டம் நடத்தினார். ஆனால் 1859 ஆம் ஆண்டு ஏப்ரலில், அவருடைய ஜமீன்தார் நண்பர் ஒருவர் அவரை எதிரிக்குக் காட்டிக் கொடுத்துவிட்டார்.
1858 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் தேதி, வாளேந்தி வீரப்போராட்டம் நடத்துகையில் ஜான்சிராணி வீர மரணம் எய்தினார். 1859 ஆம் ஆண்டுக்குள்ளாக, பீகாரைச் சேர்ந்த குன்வார்சிங், டில்லி புரட்சிக்காரர்களின் ராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற வீர சிப்பாய் பக்தர்கள், பெரேலியைச் சேர்ந்த கான் பகதூர் ஷா, பெய்சாபாடைச் சேர்ந்த மவுல்வி அகமதுல்லா ஆகியோர் வீரமரணம் எய்தினர். அவுத் பேகம் நேப்பாளத்துக்குத் தப்பி ஓட வேண்டிய தாயிற்று.
1859 ஆம் ஆண்டு இறுதியில், இந்தியா முழுவதிலும் பிரிட்டிஷ் ஆதிக்கம் மீண்டும் உறுதியாக நிலை நாட்டப்பட்டு விட்டது. ஆனால் புரட்சி பயனற்றதாய்ப் போயிருக்கவில்லை. பழமையான வழியிலும், மரபு வழி வந்த பரம்பரைத் தலைமையின் கீழும், இந்தியாவைக் காப்பாற்ற வெற்றிக்கு வாய்ப்பின்றி மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்ற போதிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து நாட்டை விடுவிக்க இந்திய மக்கள் நடத்திய முதல் வீரப் போராட்டமாக அது அமைந்தது. புரட்சித் தலைவர்களைப் பற்றிப் பேசுவதே ஆட்சியாளரின் சீற்றத்தை மூட்டியது. புரட்சித் தலைவர்களின் பெயர்கள் நாடெங்கும் மக்களின் நெஞ்சிலே நீங்காத இடம் பெற்றுவிட்டன.
|