சிப்பாய்கள் வெள்ளைய அதிகாரிகளை எதிர்த்து நடத்திய இந்தப் புரட்சிக்கு வித்திட்டது மாவீரன் மங்கள் பாண்டேயின் வீரமும், அவன் தூக்கிலிடப்பட்டதும்தான்.
1857 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி டில்லயிலிருந்து 36 மைல்கள் தூரத்திலிருந்த மீரட்டில், புரட்சி தொடங்கியது. அங்கு சிப்பாய்கள் செய்த புரட்சி, வடக்கில் பாஞ்சாலம் முதற்கொண்டு தெற்கில் நர்மதா வரையிலும், கிழக்கில் பீகார் முதற்கொண்டு மேற்கில் ராஜபுதனம் வரை, பல இடங்களிலும் பரவியது.
மீரட் சிப்பாய்கள் தங்கள் மேலதிகாரிகளைக் கொன்றுவிட்டு டில்லி நோக்கிப் புறப்பட்டனர். மறுநாள் அவர்கள் டில்லி வந்து சேர்ந்ததும், டில்லி சிப்பாய்களும் புரட்சி செய்து, நகரத்தைக் கைப்பற்றி, மூப்பு எய்திருந்த பகதூர் ஷாவை இந்திய சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்தனர். இவ்வாறு சிப்பாய்கள் தங்கள் எழுச்சியைப் புரட்சிப் போராகவே மாற்றினர். அது முதற்கொண்டு, புரட்சியில் பங்கு கொண்ட சிப்பாய்கள், இந்திய பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்கள் ஆகியோர் அனைவரும், மொகலாய மாமன்னர்க்குத் தங்கள் விசுவாசத்தைப் பிரகடனம் செய்தனர். மொகலாய மாமன்னர் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒரு சின்னமாக விளங்கினர்.
வடக்கிந்தியாவிலும் மத்திய இந்தியாவின் எல்லா இடங்களிலும் சிப்பாய்கள் எழுச்சியைத் தொடர்ந்து குடி மக்களும் புரட்சி செய்தனர். ஈட்டி, கோடாரி, அம்பு, வில், குண்டாந்தடி, கைவாள், நாட்டுக் குண்டுகள் ஆகிய போர்க் கருவிகளைப் பாமர மக்கள் தங்கள் போராட்டத்தில் பயன்படுத்தினர். குறிப்பாக, இன்றைய உத்தரப்பிரதேசம், பீகார் பகுதிகளில், அப்புரட்சிக்கு உறுதியும் வலிமையும் தந்தது, வேளாளர் குடிமக்களும் கைவினைக் கலைஞர்களும் அப்புரட்சியில் பரவலாகப் பங்கு கொண்டது தான். ஒரு மதிப்பீட்டின் படி, அவுத் பகுதியில், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்த ஒன்றரை இலட்சம் பேரில், ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் சிப்பாய்கள் அல்லாத குடிமக்களேயாவர்.
1857 ஆம் ஆண்டுப் புரட்சிக்கு வலிமை ஊட்டிய முக்கிய சக்தி, இந்து - முஸ்லீம் ஒற்றுமையேயாகும். சிப்பாய்களிடையேயும், பாமர மக்களிடையேயும், தலைவர்களிடையேயும், இந்து - முஸ்லீம் ஒற்றுமை பரிபூரணமாகக் காணப்பட்டது. முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த பகதூர் ஷாவைப் புரட்சிக்காரர்கள் அனைவரும் தங்கள் மாமன்னராக ஏற்றுக்கொண்டனர். புரட்சிக்காரர்களிடையேயும் சிப்பாய்களிடையேயும், இந்துக்களும், முஸ்லீம்களும், ஒருவரொருவர் உணர்ச்சிகளைப் பரஸ்பரம் மதித்தனர். எடுத்துக்காட்டாக, புரட்சி வெற்றி பெற்ற இடங்களில் எல்லாம், இந்து உணர்ச்சிகளை மதித்துப் பசு வதையைத் தடுத்து உடனடியாக உத்தரவுகள் வெளியிடப்பட்டன.
|