1856 ல் அவுத் பகுதி பிரிட்டிஷாரால் கைப்பற்றப்ட்டதை ஒட்டி, நாடெங்கிலும் பொதுவாகவும், குறிப்பாக அவுத் பகுதியிலும், மிகுந்த ஆத்திரம் மூண்டிருந்தது. கம்பெனியின் சிப்பாய்களில் பலர் அவுத் பகுதியிலிருந்து வந்தவர்களாதலால், அவர்களும் இதுபற்றி ஆத்திரமும் சீற்றமும் கொண்டனர். மேலும், அவுத் பகுதியில் தங்கள் குடும்பங்களுக்குச் சொந்தமாயிருந்த நிலங்களுக்காக, அவர்கள் இப்பொழுது உயர்ந்த வரிகள் செலுத்த வேண்டியருந்தது. தாலுக்காரர்கள், ஜமீன்தாரர்கள் ஆகியோரில் பெரும்பான்மையினரின் நிலச் சொத்துக்களையும் பிரிட்டிஷார் பறிமுதல் செய்திருந்தனர். நிலத்தைப் பறிகொடுத்த தாலுக்தாரர்கள், பிரிட்டிஷ் ஆட்சியின் கடும் எதிரிகளாக மாறினர். சுதேச மன்னர் ஆண்ட பகுதிகளை பிரிட்டிஷ் இந்திய அரசின் அதிகாரத்தின் கீழ்க் கொண்டுவர வைஸ்ராய் டல்ஹவுசி பிரபு பின்பற்றி வந்த கொள்கை, சுதேச மன்னர்களிடையே பெரும் கலக்கத்தையும் கவலையையும் உண்டுபண்ணியிருந்தது.
அன்னிய ஆட்சிக்கு அடிபணிந்து, தங்கள் அவமானத்தையும் பொருட்படுத்தாமல் செய்த விசுவாசப் பிரகடனங்கள், தங்கள் ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் உத்தரவாதமாக அமையாது என்பதைச் சுதேச மன்னர்கள் உணரலாயினர். சுதேச மன்னர்களின் ஆட்சியைக் கவிழ்த்து, அப்பகுதிகளைப் பிரிட்டிஷ் அரசுடன் இணைத்த கொள்கையின் காரணமாக, நானா சாகிப், ஜான்ஸி ராணி, பகதூர் ஷா ஆகியோர், பிரிட்டிஷ் அதிகாரிகள் தங்களைக் கேவலமாக நடத்தியதாலும், கம்பெனியின் போர் வீரர்களும் சிப்பாய்களும் அதிருப்தி கொண்டிருந்தனர்.
"சிப்பாய், தாழ்ந்த பிறவியாகக் கருதப்பட்டு, ஏச்சுக்கும் பழிப்பேச்சுக்கும் ஆளாக்கப்பட்டு, கேவலமாக நடத்தப்பட்டு, "நிக்கர்" என்றும் "பன்றி" என்றும் அழைக்கப்படுகின்றான். தாழ்ந்த விலங்கினத்தைச் சேர்ந்தவன் போல் சிப்பாய், இளைய அதிகாரிகளால் நடத்தப்படுகின்றான்," என்று அக்காலத்திய பிரிட்டிஷ் விமர்சகர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பதவி உயர்வு பெறுவதற்குச் சிப்பாய்க்குச் சிறிதும் வாய்ப்பு இல்லை. மாதம் அறுபது அல்லது எழுபது சம்பளம் பெற்ற சுபேதார் பதவியை விட மேல் பதவி எதற்கும் இந்தியச் சிப்பாய் செல்ல முடியாத நிலை இருந்தது.
இவ்வாறாக, 1857 வாக்கில், பொதுமக்கள் புரட்சி எழுவதற்குச் சாதகமான சூழ்நிலைகள் எங்கும் பரவியிருந்தன. தோட்டக்கள் மேல் கொழுப்பு தடவப்பட்டிருந்த நிகழ்ச்சி, குமுறிக் கொண்டிருந்த இந்த கசப்பு உணர்ச்சி, கொழுந்துவிட்டு எரியச் செய்த தீப்பொறியாயிற்று. புதிய என்ஃபீல்ட் துப்பாக்கித் தோட்டாக்கள் மேல் கொழுப்பு தடவிய ஒரு காகித உறை சுற்றப்பட்டிருந்தது. தோட்டாவைப் பயன்படுத்துவதுவதற்கு முன், உறையின் நுனியை வாயினால் கடித்தெறிய வேண்டியிருந்தது. சில உறைகள், மாட்டுக் கொழுப்பும் பன்றிக் கொழுப்பும் சேர்ந்த கலவையினால் தடவப்பட்டிருந்தன. தங்கள் சமய உணர்வுகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்பினால், சிப்பாய்கள் சீற்றம் கொண்டிருந்தனர். அவர்கள் புரட்சி செய்யச் சித்தமாயிருந்தனர். இந்திய சமுதாயத்தில் மற்ற பிரிவினரும் புரட்சி செய்ய, சிப்பாய்களின் புரட்சி வாய்ப்பினை நல்கியது.
|