1824-25, 1828, 1839, 1849 ஆண்டுகளில் குஜரத்தைச் சேர்ந்த கோலிகள் புரட்சி செய்தனர். மகாராஷ்டிரத்தில் எண்ணற்ற புரட்சிகள் தோன்றின. மகாராஷ்டிரத்தில் புரட்சி ஓயாது, அடங்காது, ஓங்கி வந்தது என்று கூறலாம். கிட்டூர் புரட்சி (1824-29), கோலாப்பூர் புரட்சி (1824), சத்தாரா புரட்சி (1841), கத்காரிகளின் புரட்சி (1824), ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. வட இந்தியாவிலும் புரட்சிக்கனல் கொழுந்துவிட்டெரிந்தது. மேற்கு ஐக்கிய மகாணத்தையும் ஹரியானாவையும் சேர்ந்த ஜாட்கள், 1824 ல் பெரும் கலவரத்தை உண்டாக்கினர். 1805 ல் பிலாஸ்பூரில் இராஜபுத்திரர் புரட்சி1814-17 ல் அலிகாரில் தாலுக்காரர்கள் புரட்சி, 1842 ல் ஜபல்பூரில் பண்டேலாக்கள் புரட்சி ஆகியவை முக்கியமாக குறிப்பிடத்தக்கவை.
இவற்றால் பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பெரும் ஆபத்து ஏற்பட்டது என்று சொல்வதற்கில்லை. அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் உணர்வையும் சூழ்நிலையையும் ஆங்காங்கு உருவாக்கியதே இவற்றின் முக்கிய சாதனை ஆகும்.
பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து இந்திய மக்கள் நடத்திய மரபு வழிப் போராட்டத்தின் உச்சகட்டமாய் அமைந்தது 1857 ம் ஆண்டின் சுதந்திரப் புரட்சி. அதில் குடியானவர்கள், கைவினைக் கலைஞர், போர் வீரர்கள், ஆகியோர் இலட்சக் கணக்கில் பங்கு கொண்டனர். 1857 ம் ஆண்டுப் புரட்சி, பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஆணிவேரையே அசைத்தது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய சிப்பாய்களின எழுச்சியுடன் அப்புரட்சி தொடங்கியது. ஆனால் வெகு விரைவிலேயே, அது மற்ற பகுதிகளுக்கும் மற்ற மக்கள் தொகுதிகளுக்கும் பரவியது. அன்னிய ஆட்சி மீது மக்களுக்கு எழுந்திருந்த அதிருப்தி அனைத்தும் திரண்டு அந்தப் புரட்சியில் வெளிப்பட்டது.
அரசாங்கத்தின் வரி விதிப்புக் கொள்கையையும், அதன் விளைவாய் தங்கள் நிலங்கள் பறிபோனதையும், காவலர்கள், சில்லரை அதிகாரிகள், கீழ்மட்ட நீதிமன்றங்கள் ஆகியவற்றின் அடக்குமுறையும் ஊழல் மலிந்த நடவடிக்கைகளையும் கண்டு, வேளாளக் குடிமக்கள் பெரிதும் அதிருப்தி கொண்டிருந்தனர். இந்திய சமுதாயத்தில், நடுமட்ட உயர்மட்ட வர்க்கத்தினரும், குறிப்பாக நாட்டின் வடபகுதியில், அரசாங்க நிர்வாகத்தில் உயர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டிருந்தால், பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தியச் சிற்றரசர்கள், மன்னர்கள், ஜமீன்தாரர்கள் ஆகியோரின் அதிகாரம் பறிபோனதை ஒட்டி, அவர்கள் ஆதரவை இழந்த சமய குருக்கள், புரோகிதர்கள், மவுல்விக்கள், பண்டிதர்கள், ஆகியோரும், சமயக் கலாச்சாரத் துறை அதிருப்தி கொண்டிருந்தனர்.
|