பொது மக்கள் புரட்சிகள்
இந்தியாவைப் பிரிட்டன் ஆக்ரமித்துப் பிரிட்டிஷ் ஆட்சி நிலை நாட்டப்பட்டதையொட்டி, நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் மூண்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இந்தியப் போர் வீரர்களிடையே கூட இந்த அதிருப்தி பரவியது.
ஆட்சியுரிமையை இழந்த சிற்றரசர்களும், அவர்கள் வழித்தோன்றல்களும் உறவினரும், ஜமீன்தாரர்களும், பாளையக்காரர்களும், இந்திய ஆதரவாளர்களும் தலைமை தாங்கி நடத்திய ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகளின் வாயிலாக, பொதுமக்கள் அதிருப்தி ஏறக்குறைய நூறு ஆண்டுகளாக தொடர்ந்து வெளிடப்படலாயிற்று. குடியானவர்கள், கைவினைத் தொழிலாளர் ஆகியோரில் பெரும்பகுதியினர் தங்களுக்கு ஏற்பட்ட இடுக்கண்களையும் குறைகளைவும் எதிர்த்துப் போராட, இந்த எழுச்சிகளில் முக்கிய பங்கு கொண்டு இப்புரட்சிக்கு முதுகெலும்பாய் விளங்கினர். பிரிட்டிஷ் ஆட்சி வங்காளத்திலும் பீகாரிலும் நிலை நாட்டப்பட்ட காலம் முதற்கொண்டே இந்தப் பொதுமக்கள் புரட்சிகள் ஏழலாயின. நிலவரி உயர்த்தப்பட்டதும், கைவினைக் கலைஞர்கள் கிழக்கிந்தியக் கம்பெனியாலும், அதன் பரிவாரங்களாலும் சுரண்டப்பட்டதும், பழைய ஜமீன்தாரர்கள் கவிழ்க்கப்பட்டதும், புரட்சி உணர்வுக்கு எரியூட்டின. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் பொதுமக்களிடையே புரட்சிக் கிளர்ச்சிகள் தோன்றின.
சமயத் துறவிகளும், உடைமை பறிபோன ஜமீன்தாரர்களும், தலைமை தாங்கி நடத்திய, புகழ்பெற்ற சன்னியாசப் புரட்சியில், வங்காளத்தில் இராணுதிலிருந்து வெளியேற்றப்பட்ட போர்வீரர்களும், நிலங்களிலிருந்து விரட்டப்பட்ட குடியானவர்களும் பங்கு கொண்டனர். சந்தியாசிப் புரட்சி 1763 முதல் 1800 ம் ஆண்டு வரை நடந்தது. அதற்குப் பின்பு, 1766 முதல் 1772 வரை வங்காளத்திலும் பீகாரிலும் ஐந்து மாவட்டங்களில் சூயார் புரட்சி எழுந்தது. மற்றொரு சூயார் புரட்சி 1795 முதல் 1816 வரை நடந்தது.
நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் பிரிட்டிஷ் ஆட்சி விரிவாக்கப்பட்டதையொட்டி இதுபோன்ற புரட்சிகள் அப்பகுதிகளிலும் தோன்றின. 1804 முதல் 1817 வரை, ஒரிசா ஜமீன்தாரர்களின் புரட்சி நடந்தது. தென்னிந்தியாவில் விஜயநகரம் ராஜா 1794 ல் புரட்சி செய்தார். தமிழ்நாட்டில் பாளையக்காரர்கள் 1790 ம் ஆண்டு வாக்கிலும், மலையாளத்திலும் திண்டுக்கல்லிலும் 1801 ம் ஆண்டிலும், ஆந்திரக் கடலோரப் பகுதியில் 1801 முதல் 1805 வரையிலும், பார்லாகி மிடியில் 1813 முதல் 1834 வரையிலும், புரட்சி செய்தனர். மைசூரில் 1800 ம் ஆண்டிலும், மீண்டும் 1831 ம் ஆண்டிலும், புரட்சிகள் எழுந்தன. விசாகப்பட்டினம் புரட்சி 1830 முதல் 34 வரை தோன்றியது. திருவாங்கூரைச் சேர்ந்த திவான் வேலுத்தம்பி 1805 ல் புரட்சி செய்தார். மேற்கு இந்தியாவில், சௌராஷ்டிர ஆட்சித் தலைவர்கள் 1816 - 32 ஆண்டுகளிடையே பலமுறை புரட்சி செய்தனர்.
|