நமது நாட்டின் மீது தங்களது காலனி ஆதிக்கத்தை நிலைநாட்டிய வெள்ளைய மேலாதிக்கத்தை எதிர்த்து 1857ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி முதல் சுந்திரப் போர் வெடித்தது.
பாரத நாடு முழுவதும் தங்களது நிர்வாக எந்திரத்தை பலமாக நிலைநிறுத்திய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், தங்கள் மேலாதிக்கத்தின் அடித்தளமாக திகழ்ந்த பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்த சிப்பாய்களுக்கு இழைத்துவந்த அநீதிகளைக் கண்டு கொதிப்படைந்தும், தங்கள் நாட்டு மக்கள் மீது வெள்ளைய ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட அராஜக நடவடிக்கைகளால் கோபமடைந்திருந்த அவர்கள் வெள்ளையனை எதிர்த்து கிளர்ந்தெழ வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
அப்படிப்பட்ட நேரத்தில்தான் பிரிட்டிஷ் - இந்திய ராணுவத்தினருக்கு வழங்கப்பட்ட புதிய என்ஃபீல்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்படும் தோட்டாக்களின் மீது தடவப்பட்ட மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு, பிரச்சனைக்கு காரணமானது.
அதையே காரணமாக்கி, வெள்ளையனை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் - சாதி, மத பேதமின்றி, இந்தியன் என்கின்ற ஒரே அடிப்படையில் ஒன்றிணைந்து கிளர்ச்சியைத் தொடங்கினர்.
இதனை மத நம்பிக்கையின் மீது ஏற்பட்ட கலகமாக அன்றைய வெள்ளைய அரசும், பின்னாளில் வெள்ளைய சரித்திர ஆரிசியர்களும் சித்தரித்தனர்.
ஆனால் அது சிப்பாய்க் கலகமாக . . . வெள்ளையனுக்கு எதிராக வெடித்த சுதந்திரப் போர் அது என்பதனையும், மதப் பாகுபாடின்றி வெடித்த சுதந்திரப் போர் அது என்பதையும் உங்களுக்கு கொண்டு வருகிறோம்.
மரபு வழி வந்த எதிர்ப்பு
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி தொடங்கிய காலம் முதற்கொண்டே, இந்திய மக்கள் அதை எதிர்த்து வந்தார்கள். 1857 க்கு முன், அநேகமாக ஒவ்வோர் ஆண்டும், நாட்டின் ஏதாவதொரு பகுதியில் இராணுவப் புரட்சி பீறிட்டெழுந்தது. தொடர்ச்சியான இந்த எதிர்ப்பு, பொதுவாக மூன்று வழிகளில் - மூன்றும் முற்றிலும் நாட்டு மரபை ஒட்டிய வழிகளில் - வெளியிடப்பட்டது. அவை, பொது மக்கள் புரட்சிகள், ஆதிகுடி மக்கள் எழுச்சிகள், குடியானவர் இயக்கங்கள், புரட்சிகள் என நடந்துவந்தன.
|