முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > சுதந்திர தினம்
 
இந்திய விடுதலைக்கு வித்திட்ட நிகழ்வுகள்! - பகுதி 1
Webdunia
இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைந்துவிட்ட இந்நாளில், 200 ஆண்டுக்காலம் நமது நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளையர்களை எதிர்த்து நடந்த போர்களையும், போராட்டங்களையும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டம் எப்பொழுது, எங்கு துவங்கியது? என்பதை எந்த வரலாற்றாளரும் அருதியிட்டுக் கூறவில்லை. இந்தியாவை ஆண்ட அரசர்களை அடிமைப்படுத்தியும், அவர்களின் அதிகாரத்தை ஏற்க மறுத்த அரசர்கள் மீது படையெடுத்து அழித்தும் சற்றேறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் காலனி ஆட்சியை நமது நாட்டின் மீது திணித்த வெள்ளையர்கள், 1639 ஆம் ஆண்டு சென்னையில் கோட்டை எழுப்பி பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி என்ற பெயரில் வணிகத்தைத் துவக்கிய நாளில் இருந்தே அவர்களை எதிர்க்கும் இயக்கமும் சூல்கொண்டது.

சிறு சிறு ராஜ்ஜியங்களாக இந்தியாவை ஆண்ட அரசர்களை அணுகி அவர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு தங்களது வணிகத்தை விரிவாக்கிக்கொண்ட பிரிட்டிஸ் கிழக்கிந்தியக் கம்பெனி, இந்நாட்டின் அரசர்களுக்கிடையே நிலவிவந்த சிறு சிறு பிரச்சனைகளை ஊதி அவர்களுக்கிடையே போரை உருவாக்கி தங்களுக்கு சாதகமான அரசர்களுக்கு (பணத்தை வாங்கிக் கொண்டு) படைகளை வழங்கி தங்கள் எதிரியை வென்று அதன் மூலம் தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொண்டு பிறகு அந்த அரசர்களையே அடிமைப்படுத்தி அவர்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வரி வசூல் செய்யும் உரிமை பெற்று தங்கள் வணிக வளையத்தை அதிகார வளையமாக்கி ஆதிக்கம் செய்யத் துவங்கினர்.

இப்படி நேரடியாக வரி வசூலில் வெள்ளையர்கள் ஈடுபடத் துவங்கியதுமே அவர்களுக்கு எதிரான எதிர்ப்பும் முளைவிடத் துவங்கியது. அதுவே இந்நாட்டு விடுதலைக்கு விதைக்கப்பட்ட முதல் விதைகளாயின.

வெள்ளையரை வணிகராக ஏற்ற இந்தியச் சமூகம் அவர்களை ஆட்சியாளர்களாக ஏற்க மறுத்தது. வந்தேறிகள் நாட்டை ஆள்வதா? என்ற கேள்வி பலமடைந்து விடுதலை வேட்கையாக உருப்பெறத் துவங்கியது.

அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு அடாவடியாக திரை வசூலிக்க வந்த வெள்ளையரை எதிர்த்து ஆங்காங்கு சிற்றரசர்கள் தனித்தனியாகவும், ஒன்று சேர்ந்தும் எதிர்த்தனர். இந்த எதிர்ப்புகள் போரில் முடிந்தது. அந்தப் போர்கள்தான் இந்திய விடுதலை எனும் பெரும் போருக்கு வித்திட்டது. போர்கள் பல நடந்தன. பேரழிப்பு ஏற்பட்டாலும் வெற்றி பெற்றது வெள்ளையர்களே. பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி பிரிட்டிஷ் இந்திய அரசாக மாறி இந்தியாவை பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பெரும் பகுதியாக மாற்றியது.

ஆனால், எதிர்ப்புகனல் அணைந்துவிடவில்லை. அது பல்வேறு வடிவங்களைப் பெற்று பிரிட்டிஷ் அரசைத் தொடர்ந்து தாக்கியது. இப்படிப்பட்ட தாக்குதல்களே இந்திய விடுதலை வரலாறானது. 200 ஆண்டுக்கால தொடர் போராட்டத்திற்குப் பின் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை வீழ்த்திய அந்த வரலாற்றில் குறிப்பிடத்தக்க 60 நிகழ்வுகளை இங்கே மூன்று பகுதிகளாக தொகுத்தளித்துள்ளோம்.


1. பூலித் தேவன் (1715 - 1767)

இந்திய விடுதலைப் போரின் முதல் விதை தென்னாட்டில், அதுவும் தமிழ்நாட்டில் விதைக்கப்பட்டது. வெள்ளையரை எதிர்த்த முதல் பாளையக்காரர். சங்கரன்கோயில் அருகே உள்ள நெற்கட்டுச் சேவல் பகுதியை ஆண்ட பூலித் தேவன் ஆவார். ஆர்க்காடு நவாப்பிடம் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டு அப்பகுதியில் வரி வசூலிக்க நிர்ப்பந்தம் செய்ய படையுடன் வந்து பூலித் தேவன் கோட்டையை வெள்ளைய ஆளுநர் கர்னல் ஃபெரோன் முற்றுகையிட்டான். அவனுடன் வெள்ளையர் வைத்திருந்த கூலிப்படையின் தளபதி கான்சாஹிப்பும் சேர்ந்து பூலித்தேவனை எதிர்த்தான். அந்த முற்றுகையை உடைத்து வெள்ளையரை விரட்டியடித்து வாகை சூடினார் பூலித் தேவன். இது நடந்தது 1755.

இந்த வெற்றிக்குப் பிறகு நெல்லைச் சீமையில் உள்ள மற்ற பாளையக்காரர்களைத் திரட்டி வெள்ளையருக்கு எதிராக போராடினார் பூலித்தேவன். 1750 முதல் 1761 வரை வெள்ளையர்களை எதிர்த்து பூலித்தேவன் போராடியதாக வரலாறு கூறுகிறது.

இந்தப் போருக்குப் பிறகுதான் பிளாசிப் போர் நடந்து அதில் ராபர்ட் கிளைவ் தலைமையிலான பிரிட்டிஷ் படை, ஃபிரெஞ்ச் படையை வென்றது. அதுவரை கிழக்கிந்திய கம்பெனி எனும் வணிக நிறுவனமாக இருந்த நிலை மாறி 1757 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்திய அரசாக மாறியது.
1| 2| 3| 4| 5