ஏரோதுவின் விசாரணை :
மதவாதிகளையும், மக்கள் கூட்டத்தினரையும், பிலாத்து பார்த்து நான் இயேசுவிடம் ஒரு குற்றமும் காணவில்லை என்றான். அதற்கு அவர்கள் கலிலேயா தொடங்கி யூதேயா தேசம் வரை உபதேசம் பண்ணி ஜனங்களை கலகப்படுத்துகிறான் என்று கூறினார். இயேசு கலிலேயாவை சேர்ந்தவர் என்பதை கேட்ட பிலாத்து, கலிலேயா நாடு ஏரோது ராஜாவின் அதிகாரத்திற்குள் வருகிறது என்று கூறி ஏரோதுவிடம் அனுப்பி வைத்தான்.
பிலாத்துவின் விசாரணை தொடர்கிறது :
ஏரோது இயேசுவை இதுவரைக் கண்டதில்லை. அவரை பார்க்க சமயம் கிடைத்தது. பல காரியங்களை இயேசுவிடம் கேட்டான். மதவாதிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டினர். ஏரோது ராஜா இயேசுவுக்கு மினுக்கான உடை அணிவித்து பிலாத்துவிடம் திரும்ப அனுப்பி வைத்தான்.
முன்பு ஏரோதுவும் பிலாத்துவும் பகைவர். ஆனால் இயேசுவின் விசாரணையில் நண்பர்களானார்கள். பிலாத்து யாவரையும் அழைத்து நீங்கள் கூறிய குற்றச்சாட்டை உங்கள் முன் விசாரித்தேன். நான் ஒரு குற்றமும் காணவில்லை. ஏரோதும் ஒரு குற்றமும் காணவில்லை. ஆகவே விடுதலையாக்குகிறேன் என்று பிலாத்து கூறினான். பரபாஸ் விடுதலை :
பரபாஸ்என்பவன் ஒரு கொலை குற்றவாளியாக காவலில் வைக்கப்பட்டிருந்தான்.
அந்நாட்களில் பண்டிகை தோறும் ஒருவனை விடுதலையாக்குவது வழக்கம். இதன்படி பிலாத்து இயேசுவை விடுதலையாக்க முனைந்தான். இதனைக் கேட்ட ஜனங்கள் பரபாஸை விடுதலையாக்கும் என்றனர். பிலாத்துவோ, இயேசு மரணத்துக்கு கேதுவான ஒரு குற்றமும் செய்யவில்லையே என்று கூறியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. மாறாக சிலுவையில் அறையும் என்று உறத்த சத்தத்தோடு கூறினார்கள். பிலாத்துவும் மக்களின் எண்ணத்திற்கிசைய மனம் மாறினான்.
இயேசுவின் மேல் பழி :
கலகம் வலுவடைவதை பிலாத்து கண்டான். தன் பிரயாசத்தினால் பிரயோசனமில்லை என்று கண்டு, பிலாத்து தண்ணீரை அள்ளி ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி, இந்த நீதிமானுடைய இரத்தப் பழிக்கு நான் குற்றமற்றவன். நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி பரபாஸை விடுதலை செய்தான். இயேசுவை வாரினால் அடிப்பித்து சிலுவையில் அறைய ஒப்புக் கொடுத்தான்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த இவ்வழக்கின் முடிவே உலக வரலாற்றை இரண்டாக பிரித்து விட்டது.
|