மனிதகுலம் வாழ போராடியவர் :
இ°ரேல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்தனர். இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு பிறந்தார் என்பதை நாம் அறிவோம். இதற்கு முன், இம்மக்கள் தங்களுக்கென்று அரசர்களால் ஆளப்பட்ட காலம் 200 ஆண்டுகளே. மிஞ்சிய காலமெல்லாம் அந்நியர் ஆட்சியிலும் நாடு கடத்தப்பட்டவர்களாகவும், சிறைக் கைதிகளாகவுமே வாழ்ந்தனர். இந்த கடினமான, துயரமான நாட்களில் அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவர்களுக்கென்று ஒரு ராஜா பிறக்கப்போகிறார் என்பதே.
இந்த நீண்ட நாள் நம்பிக்கை நிறைவேற, ஒரு ராஜா பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த உலகத்திற்குறிய ராஜாவாக அவர் இல்லை. இது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த ராஜா தான் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு.
அந்த மாட்டுத் தொழுத்தில் தான் உலக வரலாறு மறுபடியும் உருவாக்கப்படப் போகிறது என்பதை அவர்கள் அன்று சிறிதும் நினைக்கவில்லை. இந்த மாட்டுத் தொழுவத்தில் எளிமை கோலமெடுத்த இயேசு இவ்வுலகில் எவருமே செய்திராத புரட்சியை செய்தார் என்பதை மாற்கு அடியார் அவர் எழுதிய புத்தகத்தின் முதற் பகுதியிலேயே இயேசு இவ்வாறு கூறியதை காணலாம். "காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று" (மாற்கு 1 : 15)
இது இவ்வுலக ஆட்சிக்கு விட்ட சவாலாகும். அன்றிருந்த ரோம ஆட்சிக்கும் சாத்தனின் நாட்களுக்கும் முடிவு வந்து விட்டது என்பதையும் தேவனுடைய விடுதலையின் அரசாட்சி ஆரம்பமாகும் வேளை வந்து விட்டது என்பதை வெளிப்படுத்துகிறார். அந்நாட்களில் சமூக விரோதிகள் மதவாதிகள், சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றுபவர்கள், அடக்கமுறையாளர்கள் என்றெல்லா தீயசக்திகளையும் தனிமையாக எதிர்த்துப் போராடினார். இதனால் பழிவாங்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். இந்தத் தனிமை போராட்டத்தினால் தான் இன்று மனித குலம் - நாம் வாழ்கிறோம் என்ற செய்தியையும் மாற்கு கூறியுள்ளார்.
|