ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் ஆட்சி அமைத்து அமைச்சரவை பட்டியல் வெளியான போது லாலு பிரசாத் பெயர் இரயில்வே துறை அமைச்சராக இடம் பெற்ற போது ஊடகங்கள், அரசியல் கட்சிகள், அரசியல் நோக்கர்கள், ஏன் பெரும்பாலான மக்களும் கூட லாலு இந்திய இரயில்வேயை பீகாரைப் போன்று ஆக்கிவிடுவார் என்றெல்லாம் ஆருடம் கூறியதை எல்லாம் தூள் தூளாக்கி தனக்கே உரித்தான பாணியில் ஆருடம் கூறியவர்கள் உள்ளிட்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.
பயணிகள் இரயில் கட்டணத்தை உயர்த்தாத நிலையிலும் இந்திய இரயில்வே 21,000 கோடி உபரி நிதியை கையிருப்பில் வைத்திருக்கும் அளவுக்கு லாலு திறமையாகத்தான் இரயில்வே நிர்வாகத்தைக் கையாண்டுள்ளார். வருவாய் பெருக்கம், பயணிகளுக்கு தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் வசதிகள் செய்து தருவது என 2007 ஆம் ஆண்டில் இரயில்வே பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
70 நாள் ஊக்கத் தொகை ஊழியர்களுக்குவழங்கப்பட்டிருப்பது இதுவரை இரயில்வே வரலாற்றில் இல்லாத ஒர் புதிய சாதனை. இதன் மூலம் இரயில்வேயின் மணிமகுடத்தில் லாலு மற்றொரு வைரக்கல்லை பதித்துள்ளார். இந்நிலையில் வரப்போகும் 2008 -ஆம் ஆண்டுக்கான இரயில்வே நிதி நிலை அறிக்கை தாம் இதற்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தவற்றை எல்லாம் விட பயணிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது ஆண்டாக 2008 ஆம் ஆண்டிலும் இரயில் கட்டணம் உயர்த்தப்படாது என்ற மக்களின் எதிர்பார்ப்பை லாலு நிறைவேற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதனைகளின் ஆண்டு மட்டுமல்ல 2007, பல்வேறு பயணிகள் நலன் சார்ந்த வசதிகளை 2008 -ல் அறிமுகப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகளும் இரயில்வேயால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
|