2007 ஆம் ஆண்டு கிரிக்கெட் மட்டுமின்றி பிற விளையாட்டுகளிலும் இந்தியா குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது மகிழ்ச்சிக்குறியதாகும்.
உலக சாம்பியன் பட்டத்தை வென்ற டோலா பானர்ஜி!
துபாயில் நடந்த உலக வில் வித்தைப் போட்டியில் மகளிர் தனி நபர் ரீகர்வ் போட்டியில் இந்திய வீராங்கனை டோலா பானர்ஜி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது பெருமைக்குறியதாகும்.
இப்போட்டிகளின் துவக்கச் சுற்றுகள் தென் கொரியாவில் துவங்கி, பிறகு துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து நாடுகளில் நடந்துள்ளது. இவற்றிலெல்லாம் வெற்றி பெற்று கடைசியாக துபாயில் நடந்த இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு டோலா பானர்ஜி தகுதி பெற்றுள்ளார்.
இறுதிச் சுற்றுகளுக்கு தகுதி பெற்ற ஒரே இந்திய வீராங்கனையான டோலா பானர்ஜி, ஒவ்வொரு சுற்றிலும் கடுமையான போட்டிகளைச் சந்தித்துள்ளார். அரையிறுதியில் ரஷ்யாவின் நாட்டாலியா எர்டினியீவாவை 108-106 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று இறுதிக்குத் தகுதி பெற்றார்.
இறுதிப் போட்டியில் கொரிய வீராங்கனை யூன் யங் சோய்யின் கடுமையான சவாலை எதிர்கொண்டு 110-109 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
சர்வதேச அளவில் நடந்த வில்வித்தைப் போட்டிகளில் டோலா பானர்ஜி பல முறை வென்று நமது நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார் என்றாலும், உலக அளவில் நமது நாட்டவர் இப்பெருமையைப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
ரஷ்யா, கொரியா போன்ற நாடுகளில் உள்ளது போன்றோ அல்லது அந்நாட்டு அரசுகள் அளிக்கும் உதவிகள் மற்றும் வசதிகளோ இல்லாத, கிட்டாத நமது நாட்டில் இருந்துச் சென்று உலக சாம்பியன் பட்டத்தை வெல்வதென்பது நிச்சயம் கற்பனைக்கூட எட்டாத்துதான். அதனை டோலா பானர்ஜி சாதித்துள்ளதுதான் ஆச்சரியப்படவைக்கிறது.
கால்பந்து : நேரு கோப்பை வெற்றி!
கால்பந்தில் இந்த ஆண்டு இந்தியா அபாரமாக பல சாதனைகளைப் புரிந்தது. ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓ.என்.ஜி.சி. நேரு கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது பெருமைக்குரிய சாதனையாகும்.
இப்போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிரியா அணியைச் சந்தித்த இந்தியா 1- 0 என்ற கோல் கணக்கில் வேற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய கால்பந்து வரலாற்றில் இது ஒரு புதிய துவக்கம் என்றே கூறலாம்.
உலக கால்பந்து தர வரிசைப் பட்டியலில் பல படிகள் முன்னனியில் உள்ள சிரியா கால்பந்தாட்ட அணியை இந்திய அணி வென்றது, கால்பந்தாட்டத்தில் நமது நாடு முன்னேறிவருவதற்கான அறிகுறியாகும்.
இந்த வெற்றியைப் பாராட்டி இந்திய நாடாளுமன்ற அவைத் தலைவர் சோம் நாத் சாட்டர்ஜீ இந்திய கால்பந்து அணித் தலைவர் பைச்சுங் பூட்டியாவிற்கு தனது வாழ்த்துக்களை கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனந்த் உலக செஸ் சாம்பியன்!
செஸ் போட்டிகளில் 2007 ஆம் ஆண்டு இந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பொற்காலம் என்றே கூறவேண்டும். இந்திய செஸ் நட்சத்திரம் விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் பட்டம் வென்றதோடு, முதல் முறையாக உலக தரவரிசையில் முதலிடத்தை பிடித்துச் சாதனை புரிந்தார். மேலும் இ.எல்.ஓ. தரவரிசையில் முதன் முதலாக 2800 புள்ளிகளை பெற்ற இந்திய செஸ் வீரர் என்ற பெருமையையும் எட்டினார்.
அதே போல் மகளிர் பிரிவு செஸ் போட்டிகளில் கொனேரு ஹம்ப்பி 2007 ஆம் ஆண்டு சில சாதனைகளை படைத்தார். இ.எல்.ஓ. தரவரிசையில் 2600 புள்ளிகளை அவர் பெற்றது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். ஏனெனில் ஹங்கேரிய செஸ் வீராங்கனை ஜுடித் போல்காருக்கு பிறகு 2600 புள்ளிகளை பெற்ற 2வது செஸ் வீராங்கனை என்ற பெருமையை ஹம்ப்பி பெற்றார். மேலும் கொனேரு ஹம்ப்பிக்கு இந்த ஆண்டுதான் பத்மஸ்ரீ விருது கிடைத்தது.
மற்றொரு வீரரான கிருஷ்ணன் சசிகரன் 2700 இ.எல்.ஓ. புள்ளிகளை பெற்றது ஒரு குறிப்பிடத் தகுந்த சாதனையாகும். ஆனால் அதன் பிறகு அவரது ஆட்டம் சோபிக்காமல் போனது வருத்தத்திற்குரியது.
ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை செஸ் தொடரில் 4வது சுற்று வரை முன்னேறிய ஒரே இந்திய செஸ் வீரர் என்ற பெருமையை கிருஷ்ணன் சசிகரன் பெற்றார். மற்றொரு செஸ் வீரர் ஆர்.பி. ரமேஷ் காமன்வெல்த் செஸ் கோப்பையை வென்றதன் மூலம் 2007 ஆம் ஆண்டு இந்திய செஸ் தனது பொற்காலத்தை எட்டியது என்று கூறலாம்.
|