முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > வெப்துனியா சிறப்பு > 2007 ஒரு பா‌ர்வை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
2007 : அசைவற்ற ஓர் ஆண்டு!
benazir
webdunia photoWD
2007ஆம் ஆண்டு ஜனவரியில் ஆப்ரிக்க நாடான காங்கோவில் நடந்த கோர விமான விபத்துடன் சோகமாகத் துவங்கி, பாகிஸ்தானில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவேன் என்று கூறி வந்த அந்நாட்டு முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு டிசம்பர் மாதம் 27ஆம் தேதி பலியானதில் முடிந்துள்ளது. இதைப்போன்ற எண்ணற்ற சோக சுவடுகளை தன்னகத்தே கொண்ட 2007ஆம் ஆண்டில் உலகளாவிய அளவில் பொதுவாகவே ஒரு அசைவற்ற நிலையே நிலவியது.

உலகம் புத்தாயிரம் ஆண்டில் அடியெடுத்து வைத்த இந்த 8 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டிலும் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் நிகழ்ந்து வந்துள்ளன. ஆனால், 2007 ஆம் ஆண்டில் உலகத்தின் போக்கில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை குறிக்கக்கூடிய எந்தவொரு பெரிய நிகழ்வும் ஏற்படாத, இருந்த நிலை மாறாத அசைவற்ற ஆண்டாகத் திகழ்ந்தது!

புத்தாயிரம் ஆண்டின் எதிர்பார்ப்புகளை மிகப்பெரிய அளவிற்கு சிதைத்த ஒரு நிகழ்வாக 2001 ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நடந்தது. ஆனால் அத்தாக்குதலிற்குப் பிறகு பயங்கரவாதத்தின் வளர்ச்சியை தடுக்கவும், அது வேரூன்றி உள்ள தளங்களைத் தகர்க்கவும் உலகளாவிய அளவிற்கு ஒரு பெரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அது இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

2002, 2003 ஆம் ஆண்டுகளில் உலகத்தின் அமைதிக்கு ஒரு பெரும் சவாலாகத் திகழ்ந்து வந்த பல்வேறு நீண்டகால பிரச்சனைகளுக்கு இறுதித் தீர்வு காணும் அரசியல் ரீதியான அமைதி முயற்சிகள் துவக்கப்பட்டன. பாலஸ்தீன பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை இஸ்ரேல் உணர்ந்தது. பாலஸ்தீன மக்களும் உணர்ந்தனர். அதற்கான முயற்சியில் அமெரிக்கா தீவிர முனைப்பு காட்டியது.

அதே நேரத்தில், இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக நீடித்து வந்த, இரு நாடுகளுக்கும் இடையே 3 போர்கள் நடக்கக் காரணமான காஷ்மீர் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கான முன்னெடுப்புகள் துவங்கின. இதில் குறிப்பிடத்தக்க அம்சம், பாகிஸ்தானிற்கு எதிரான ஒரு தீவிரக் கொள்கையைக் கொண்ட அரசியல் கட்சியின் தலைவராக இருந்து பிரதமர் பொறுப்பேற்ற அடல் பிஹாரி வாஜ்பாய் துணிந்து அம்முயற்சியை முன்னெடுத்தார்.

ஆக்ராவில் நடந்த அந்த முதல் முயற்சி ஏமாற்றமளிக்கும் தோல்வியில் முடிந்தாலும், அதன்பிறகு பிரதமர் வாஜ்பாயின் பாகிஸ்தான் பயணம் அமைதி முயற்சிகளுக்கு உயிரூட்டியது மட்டுமின்றி, இரு நாடுகளுக்கும் இடையிலான - காஷ்மீர் உள்ளிட்ட - அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பது என்பது கொள்கை அளவில் ஒப்புக்கொள்ளப்பட்டு, அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதே காலகட்டத்தில் 20 ஆண்டு காலமாக சிறிலங்க அரசின் ஒடுக்குமுறையை அடுத்து உருவான இலங்கை இனப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகள் அளித்த அழுத்தத்தின் காரணமாக சிறிலங்க அரசு, புலிகளுடன் பேசுவதற்கு முன்வந்தது.

இப்படிப்பட்ட அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட அதே நேரத்தில், ஒரு மிகப் பெரும் பின்னடைவாக அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகள் உலகத்தின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் ஈராக்கின் மீது தாக்குதல் நடத்தி ஆக்கிரமித்தன. ஓரிரு மாதத்திற்குள் ஈராக்கை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த நேச நாட்டுப் படைகளால் உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் இன்று வரை திணறிக் கொண்டிருக்கின்றன.

உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக ஆங்காங்கு எழுந்த இன, பயங்கரவாத, ஆதிக்கவாத பிரச்சனைகளுக்கு தீர்விற்கான முன்னெடுப்பு நடந்த அதே நேரத்தில், புவி வெப்பமடைதலால் மானுடத்தின் வாழ்விற்கு எழுந்த ஒரு பெரும் அச்சுறுத்தலை உலகம் உள்ளபடியே உணர்ந்து செவிசாய்க்கத் துவங்கியது.

முன்னேற்றத்திற்காக எதையும் செய்யலாம் என்கின்ற சிந்தனை வலிமையிழந்து சுற்றுச்சூழலை காப்பாற்றினால்தான் வாழ்வு நிரந்தரம் என்கின்ற உறுதியான சிந்தனைக்கு உலக மக்கள் ஆட்பட்டனர். புவி வெப்பமடைதலிற்கான காரணிகளைக் கண்டறிந்து அவைகளைக் குறைத்து இப்புவி வாழ்க்கையைக் காப்பாற்றும் முயற்சிகளுக்கு ஜி-8 என்றழைக்கப்படும் உலகின் முன்னேறிய பெரும் நாடுகள் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்புக்கொண்டன.

இந்த முயற்சிகளே 2004, 2005, 2006 ஆம் ஆண்டுகளில் வலிமையாகத் தொடர்ந்தன. 2004 இறுதிகட்டத்தில் ஆழிப்பேரலை ஆசியாவின் ஒரு பகுதியை புரட்டிப் போட்டு பேரழிவை உருவாக்கியபோது அதற்கு உதவ அனைத்து நாடுகளும் முன்வந்தன. ஆழிப்பேரலையால் வாழ்விழந்த மக்களுக்கு அவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டுத்தர முன்னெடுக்கப்பட்ட திட்டங்களும், பணிகளும் இன்று வரை தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றன.

ஆனால், 2007 ஆம் ஆண்டில் கடந்த 7 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்கள் அனைத்தும் பொருளற்றவையோ என்று எண்ணச் செய்தன.

நமது நாட்டைப் பொறுத்தவரை காஷ்மீர் பிரச்சனைக்கு இந்த ஆண்டு தீர்வை நோக்கிய செயல்பாடுகளை உறுதி செய்யும் காலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான 4 அம்ச அடிப்படையையும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷா·ப் அளித்தார். ஆனால், பாகிஸ்தானில் தனது அதிகாரத்தை தக்கவைக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளினால் ஏற்பட்ட எதிர்ப்பும், உள்நாட்டுக் கலவரங்களும், பாகிஸ்தான் அரசின் அமெரிக்க ஆதரவு போக்கை எதிர்க்கும் பயங்கரவாதிகளின் தாக்குதலும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நடவடிக்கையில் ஒரு அடி கூட முன்னேறவிடாமல் தடுத்துவிட்டன. பாகிஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின் காரணமாக இந்திய அரசும் காஷ்மீர் பிரச்சனையில் தீவிரம் காட்டுவதை தவிர்த்தது.
  1 | 2  >> 
மேலும்
2007: முதலீட்டாளர்களை கவர்ந்த தமிழகம்!
பு‌வி வெ‌ப்ப‌மடைதலின் 10 ‌விளைவுக‌ள்!
2007 இல் இந்தியா!
2007-ல் இந்தியாவின் பொருளாதாரம்!
2007-ல் தமிழகம்!
2007 : ‌நீ‌தி‌த்துறை ‌தீ‌விர‌ச் செய‌ல்பா‌ட்டி‌ன் ‌திரு‌ப்புமுனை!