காதல், திருமணம், தாம்பத்யம் இவை எல்லாமே மனிதனால், மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை.
இதில் தாம்பத்யம் என்பது உடல், மனம் இரண்டுக்குமான ஒரு சிகிச்சை. இதனால் மனிதனுக்கு கிடைக்கும் பயன்கள் ஏராளம். ஆனால் இரண்டு மனங்களும் ஒத்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு தாம்பத்யம் கொள்ளும்போதுதான் இது சாத்தியமாகிறது.
நமது கலாச்சாரத்தின் படி, இரண்டு மனங்களை இணைப்பதே திருமணம். இந்த நோக்கம், இருவரும் இசைந்து தாம்பத்தியம் கொள்ளும்போதுதான் முழுமையடைகிறது.
தாம்பத்யத்தின் வாயிலாக இருவரது உணர்வுகளும், சந்தோஷங்களும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. கணவன் - மனைவிக்கு இடையே உள்ள தாழ்வு மனப்பான்மை, கோபதாபங்கள் அனைத்தும் இந்த தாம்பத்தியத்தின் வாயிலாக மறக்கப்படுகிறது.
இவ்வளவு புனிதமான, இல்லறத்திற்கு அவசியமான தாம்பத்யம் தற்போது மாறி வரும் உலகில் கணவன் - மனைவிக்கு இடையே எந்த இடத்தில் உள்ளது?
அதற்கெல்லாம் எங்கு நேரம் என்று கூறும் தம்பதிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.
பெயர், புகழ், பணம் சம்பாதிக்க நீண்ட தூரம், வேகமாக ஓட வேண்டிய நிலையில் நாம் தற்போது இருக்கிறோம். அதனால் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேச இங்கே யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த நேரத்தை தகவல் தொழில்நுட்பங்களும், பொழுதுபோக்கு அம்சங்களும் விழுங்கி விடுகின்றன.
எதிர் வீட்டில் இருப்பவரைப் பற்றியோ, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறதோ என்பதையோ அறிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் இப்போதெல்லாம், அவரவர் வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பலருக்கு தெரிவதில்லை. அதிகாலையிலேயே பணிக்கு செல்வதும், இரவில் நேரம் கழித்து வருவதும் வழக்கமாகிவிட்டது.
குடும்பத்திற்காகத்தான் உழைக்கிறார்கள் என்றாலும், பிள்ளைகளிடம் கொஞ்சி மகிழவும், வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடவும் இயலாமல் போய்விடுகிறது. அதுபோன்றதொரு பொன்னான நேரத்தை எவ்வளவு பணம் கொடுத்தாலும் திரும்பப் பெற இயலாது என்பதை அவர்கள் உணர்வதில்லை.
காலத்தின் சூழ்நிலையால் மனிதன் எந்திரமாக மாறிவிட்டான். சக்கரம் போல் சுழலும் அவனது வாழ்க்கையில், எந்த இடத்திலும் சிறிது நேரம் களைப்பாறகூட அவனுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதனால் மனிதன் விரும்பும் பல நல்ல விஷயங்களை அவன் அறியாமலேயே இழந்து வருகிறான். இதில் தாம்பத்யமும் ஒன்று. இது மிகவும் சிந்திக்க வேண்டிய, கவலை அளிக்கும் விஷயமாகும்.
கணவன் - மனைவி இருவருமே பணிக்கு செல்லும் நிலை இப்போதுள்ளது. ஒருவர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ சென்று கொண்டிருப்பதும், மற்றொருவர் பணியில் மூழ்கி இரவு - பகலென தெரியாமல் உழைப்பதும் இங்கெல்லாம் சாதாரணம்.
|