முதன்மை பக்கம் > இதர வாசிப்பு > காதல் தேசம் > காதல் கீதம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காதற் பெருமை
கொழிக்கும் ஆணழகன்! - அவன்
கொஞ்சிவந் தேஎனது
விழிக்குள் போய்ப்புகுந்தான் - நெஞ்ச
வீட்டில் உலாவுகின்றான்!
இழுத் தெறிந்துவிட்டே - மற்
றின்னொரு வாலிபனை
நுழைத்தல் என்பதுதான் - வெகு
நூதனம் என்றழுவாள்!

காத லிருவர்களும் - தம்
கருத் தொருமித்தபின்
வாதுகள் வம்புகள்ஏன்? - இதில்
மற்றவர்க் கென்னஉண்டு?
சூதுநிறை யுளமே - ஏ
துட்ட இருட்டறையே!
நீதிகொள், என்றுலகை - அவள்
நிந்தனை செய்திடுவாள்!

இல்லத்தின் மாடியிலே - பின்னர்
எறிஉரைக்க லுற்றாள்:
"இல்லை உனக்கெனக்கு - மணம்
என்று முடித்துவிட்டார்.
பொல்லாத நாளைக்கொ" - வெறும்
புல்லனை நான்மணக்க
எல்லாம் இயற்றுகின்றார் - பெற்ற
எமன்கள் இவ்விடத்தில்!

அடுத்த மாடியிலே - நின்ற
அன்பனிது கேட்டான்;
துடித்த உள்ளத்திலே - அம்பு
தொடுக்கப் பட்டு நின்றான்!
எடுத்துக் காட்டிநின்றாள் - விஷம்
இட்டதோர் சீசாவை!
அடி எனதுயிரே! - அழை
அழைஎனையும் என்றான்!

தீயும் உளத்தோனும் - விஷம்
தேடி எடுத்துவந்தான்!
"தூயநற் காதலர்க்கே - பெருந்
தொல்லை தரும்புவியில்
மாய்க நமதுடல்கள்! - விஷம்
மாந்துக நம்மலர்வாய்!
போய்நுகர் வோம்சலியா - இன்பம்
பூமியின் கர்ப்பத்திலே!

என்று விஷம்குடித்தார் - அவர்
இறப்பெனும் நிலையில்
ஒன்றுபட்டுச் சிறந்தார் - இணை
ஓதரும் காதலர்கள்.
இன்றுதொட் டுப்புவியே - இரண்
டெண்ணம் ஒருமித்தபின்
நின்று தடைபுரிந்தால் - நீ
நிச்சயம் தோல்விகொள்வாய்!
<< 1 | 2 
மேலும்
வெப்கேமில் தெரியும்படி தூக்கில் தொங்கிய காதலன்
காதலர் தின வாழ்த்துகள்
மரணத்தோடு
கிறுக்கன்
யாரோ யாரோடி
காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு (4)