கனகசுப்பரத்தினமாகப் பிறந்து பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசனாக உருவெடுத்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் படைப்புகளில் மிகவும் ரசிக்கத் தக்கதான இந்த காதற்பெருமை கவிதை காதலர்களுக்காக எடுத்து இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நல்ல இளம்பருவம் - மக்கள் நாடும் குணம், கீர்த்தி, கல்வி இவையுடையான் - உயர் கஜராஜ் என்பவனும், முல்லைச் சிரிப்புடையாள் - மலர் முக ஸரோஜாவும், எல்லையிற் காதற்கடல் - தனில் ஈடுபட்டுக் கிடந்தார்.
திங்கள் ஒருபுறமும் - மற்றைச் செங்கதிர் ஓர்புறமும் தங்கி யிருந்திடினும் - ஒளி தாவுதல் உண்டதுபோல் அங்கந்த வேலூரில் - இவர் அங்கம் பிரிந்திருந்தும் சங்கமம் ஆவதுண்டாம் - காதற் சமுத்திர விழிகள்!
ஒட்டும் இரண்டுளத்தைத் - தம்மில் ஓங்கிய காதலினைப் பிட்டுப்பிட் டுப்புகன்றார் - அதைப் பெற்றவர் கேட்கவில்லை. குட்டை மனத்தாலே - அவர் கோபப் பெருக்காலே வெட்டிப் பிரிக்கவந்தார் - அந்த வீணையை நாதத்தினை!
பொன்னவிர் லோகத்திலே - உள்ளம் பூரிக்கும் காதலிலே என்னுளம் கன்னியுளம் - இணைந் திருந்தும் இன்ப உடல் தன்னைப் பயிலுவதோர் - நல்ல சந்தர்ப்பம் இல்லையென்றே தன்னையும் தையலையும் - பெற்ற சமுகத்தை நொந்தான்.
"அண்டைஇல் லத்தினிலே - என் அன்பன் இருக்கின்றான்! உண்ணும் அமுதிருந்தும் - எதிர் உண்ண முடிந்ததில்லை! தண்டமிழ்ப் பாட்டிருந்தும் - செவி சாய்த்திடக் கூடவில்லை! வண்மலர் சூடலில்லை - அது வாசலிற் பூத்திருந்தும்."
என்று சரோஜாவும் - பல எண்ணி எண்ணி அயர்வாள். தன்னிலை கண்டிருந்தும் - அதைச் சற்றும் கருதாமல் என்னென்ன மோபுகல்வார் - அந்த இரும்பு நெஞ்சுடையார். அன்னதன் பெற்றோரின் - செயல் அத்தனையும் கசப்பாள்.
நல்ல சரோஜாவின் - மணம் நாளைய காலைஎன்றார்! மெல்லியின் பெற்றோர்கள் - வந்து வேறொரு வாலிபனைச் சொல்லி உனக்கவன்தான் - மிக்க தோதென்றும் சொல்லிவிட்டார். கொல்லும் மொழிகேட்டாள் - மலர்க் கொம்பு மனம்ஒடிந்தாள்!
|