புழு - சிறுகதை

வெள்ளி, 23 அக்டோபர் 2009( 15:32 IST )
அரசாங்கம் அறிவித்திருந்த சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது தான் இந்த ராமசாமி கவுண்டர் பிணங் கிடங்கு. இதன் உரிமையாளர் குணசேகரன் என்கிற 29 வய்து வேதியியில பட்டதாரி. இவனுடைய நண்பர்களில் சிலர் சோப்பு கம்பெனி, ஷாம்பு கம்பெனி எனத்தொடங்கி கையைச் சுட்டுக்கொண்ட போது இவனுக்கு மட்டும் இந்த யோசனை எப்படி வந்ததென்று ஆச்சரியப்பட்டவர்கள் பலர்.
ராமசாமி கவுண்டர் - பாதர் அஃப் சிவபெருமான் - பிணக்கிடங்கின் வெற்றியைப் பார்த்து நகரத்தில் இன்னும் இரண்டு மூன்று கிடங்குகள் முளைத்திருந்தாலும் இதன் வளர்ச்சியில் ஒன்றும் பங்கம் வந்துவிடவில்லை. கிடங்குக்கான வாடகை, மின்சாரச்செலவு, டெலிபோன் பில், இராசயனப் பொருட்கள் வாங்குவதற்கான செலவு, உதவியாளன் பாதுகாவலன் இவர்களுக்கான சம்பளம், வங்கிக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி, இன்னும் உபரி செலவுகள் போக கைக்கு வந்த லாபம் ஒரு பெரிய அரசாங்க நிறுவனத்தில் உத்தியோகம் பாத்திருந்தால் கிடைத்திருக்ககூடியதைவிட அதிகமாகத்தான் இருந்திருக்கும்.
வெளிநாட்டு விருந்தினர்களுக்காக காத்திருப்பவை, சுடுகாட்டில் இடம் கிடைக்காதவை, இறந்து போன அபூர்வ விஞ்ஞானிகள், மாபெரும் தலைவர்கள், விசாரணைக்குரியவை எனப் பலதரப்பட்ட பிணங்கள் இங்கே வந்து நாள், வார, மாத, வருஷ வாடகைக்கு - சௌகரியமாக - தங்கிச் சென்றன
முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்புயென முறையே 4, 10,25 படுக்கைகள் கொண்ட மூன்று பிரிவுகள் இங்கே உண்டு, மூன்றாம் வகுப்புக்கு வெறும் ஸ்டீல் கட்டில்கள், இரண்டாம் வகுப்புக்கு குஷன் வசதி, முதல் வகுப்புக்கு குஷன் வசதியுடன் குளு குளு வசதியும் உண்டு. முதல் வகுப்பில் வசதிமிக்க தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற வி.ஐ.பி களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. அபூர்வமாக சில பெண் சடலங்களும் வந்து தங்குவதுண்டு. இவைகளுக்கென்று தனிப்பகுதி எதுவுமில்லை.
பிணக்கிடங்கு என்றவுடன் ஏதோ சகித்துக்கொள்ள முடியாத நாற்றம் வீசுகின்ற இடமாக நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். மிதமான மருந்து வாசனையைத் தவிர வேறு எந்த துர்நாற்றத்தையும் நீங்கள் நுகரமுடியாது. அதிலும் அந்த மருந்துகள் எல்லாமே வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்டவை.
முதல் மற்றும் இரண்டாம் வகுப்பை ஒட்டியே குணசேகரனின் அலுவல் அறை. மூன்றாம் வகுப்பு மட்டும் எதிர்புறத்தில் இருந்தது. இரண்டு பகுதிகளையும் பிரிக்கும் வராண்டா நீண்டு சென்று கேட்டருகில் முடிகிறது. அந்த முனையில் தான் வாட்ச்மேன் கண்ணன் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்திருப்பான். அவனுக்கு கட்டிடத்தை பாதுகாப்பது மட்டுமே வேலையல்ல. மணி என்கிற மணிவண்ணனுடன் கிடங்குக்கு வரும் பிரேதங்களை எடுத்துச் சென்று படுக்கையில் கிடத்தி தகுந்த ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். பிரேதங்கள் டிஸ்சார்ஜ் ஆகும்போது உரிமையாளர்களுக்கு ஒத்துழைப்பதால் தனியாக சன்மானமும் வாங்கிக்கொள்வான். பிணங்கள் புழங்கும் இடம்தானே பிரச்சனை என்ன இருந்துவிடப் போகிறது என்று நீங்கள் நினைக்க கூடும். அசம்பாவிதங்களும் சிலபொழுது நடந்துவிடுவதுண்டு. ஏசுபெருமான் கூட மூன்றாம் நாள் தான் உயிர்த்தெழுந்தார் என்று சொல்கிறார்கள்; ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தோழரோ அன்று சாய்ந்திரமே எழுந்து உட்காந்துகொண்டு தோழர்களே இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சவம்போல உறங்கிக் கொண்டிருப்பீர்கள்! விழித்தெழுங்கள்! என்று பேச ஆரம்பித்துவிட்டார். ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது ஆவேசமான தனது கோஷத்துடன் பிராணனையும் சேர்த்து வெளியேற்றிவிட்டதாக சொன்னார்கள். ஒரு கம்யூனிஸ்ட்டிற்கு இப்படிப்பட்ட ஒரு வீரமரணம் வருவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பது கட்சி வட்டாரங்களில் சிலருடைய அபிப்பிராயம். சீனாவுக்கு சுற்றுப்பயணம் போயிருந்த ஒரு மாநில கமிட்டி பிரமுகரின் மரியாதையும் அத்தோழரின் பிரேதத்திற்கு தேவையிருந்தது. அதுவரை பிரேதத்தை பாதுகாக்கும் பொறுப்பு ராமசாமி கவுண்டர் பிணக்கிடங்குக்கு கொடுப்பதென்று கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தோழர் உயிர்த்தெழுந்த தகவலை உடனே தெரிவிக்க முடியாமல், மறுநாள் வரை பொறுத்திருக்க வேண்டி வந்தது. குணசேகரன் அன்கோ அதுவரை பட்ட கஷ்டம் சொல்லிமாளாது.
மருந்து சரியில்லை, ஜன்னலில் காற்று வரவில்லை, அறையில் விளக்குகள் எரியவில்லையென சதா புகார் புலம்பல்தான். குணசேகரனை ஏகாதிபத்தியத்தின் கையாள் என்று குற்றம் சாட்டினார் தோழர். மருந்துக்களை எல்லாம் அமெரிக்காவிலிருந்து வரவழைக்கிறானாம் என்ன துரோகம் ! வேதியியலில் மட்டுமே அறைகுறை அறிவுபெற்றிருந்த அவனுக்கு இந்த குற்றச்சாட்டுகளுக்கான அர்த்தம் எதுவும் விளங்கவில்லை. இருந்தாலும் தன்னை ஒரு துரோகி என்று மட்டும் அடையாளம் காட்ட முயற்சிக்கிறார் என்பதை அறிந்து கலக்கமடைந்தான். சரியாகச் சொல்வதென்றால் இந்த பிணக்கிடங்கையே வர்க்கப் போராட்டக் களமாக ஆக்கிவிட்டார். முதல் வகுப்பு முதலாளி வர்க்கம், இரண்டாம் வகுப்பு நடுத்தர வர்க்கம், மூன்றாம் வகுப்பு பாட்டாளி வர்க்கம்!.
ஒரு மனுஷன் செத்தானா பிழைத்தானா என்றுகூட பார்க்காமல் என்னய்யா அப்படி அவசரம் என்று கேட்பவராக நீங்கள் இருந்தால், இந்த நகரத்திற்கே லாயக்கில்லாத சுத்த கிராமத்தான் அல்லது மனிதாபிமானம் பிடித்த ஆளாகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்.
எப்படியோ வெற்றிகரமாகவே ஓடிக்கொண்டிருந்த பிணக்கிடங்குக்கு வேறு வடிவத்தில் புதுப்பிரச்சனை ஒன்று முளைத்தது. வெளிநாட்டிலிருந்து மருந்துக்களை வாங்கி சப்ளை செய்யும் டீலர் ஏமாற்ற ஆரம்பித்தான். ‘இன்னும் உனக்கு வரவேண்டிய மருந்துகள் வந்து சேரவில்லை’ என்று பொய்சொல்லிவிட்டு, அந்த மருந்துகளை அதிக கமிஷன் வாங்கிக்கொண்டு வேறு கிடங்குக்காரர்களுக்கு கொடுத்துவிட்டான். இதோ வந்துவிட்டது அதோ வந்துவிட்டது. பொறுத்துக்கொள்ளுங்கள் என்று கேட்கும் போதெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தான். குணசேகரன் அதுவரை காத்திருக்கலாம்; பிணங்கள்?