என்று தொடர்ந்த சந்தேகம் தோள்வலியை வலி நிவாரணி இன்றியே மரத்துப் போகச் செய்துவிடும். அதுவரைக்கும் தோள் வலியுடன் அலுவலக பார வலியையும் சேர்த்து சுமந்து கொண்டுதான் திரிய வேண்டும்.
இரட்டை சக்கர வாகனத்தை பூட்டினேனா இல்லையா என்பது ஞாபகப் பிசகில் சிக்கிக் கொண்டிருந்தது புது விஷயமாகி விட்டது. மாத்திரை சாப்பிட்டோமா இல்லையா என்பதோ இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கையில் இன்னொரு அடுக்கில் இந்த சிடுக்கு. வாகனக் கொட்டகைக்குப் போய் சரி பார்த்து வரும் எண்ணம் பத்து நிம்டங்களாய் தள்ளிப் போய்க்கொண்டேயிருக்கிறது. சுற்றிலும் கோப்புகள். இடது கை கோப்பில் பட்டால் கூட தோள்பட்டைக்கு வலி உச்சமாகி சென்று விடுகிறது.
மேலதிகாரி அறையிலிருந்து வரும்போது உடம்பு வியர்க்க ஆரம்பித்தது. இன்றைக்கு முடித்க்டுக் கொடுக்கவேண்டிய கோப்புகளின் பட்டியலை அவர் கொடுத்திருந்தார். அவர் சொன்னதை நிறைவேற்ற இன்னும் 10 கீழ் நிலைப் பணியாளர்கள் வேண்டும். இன்றிரவு மகா சிவராத்திரியாகவும் இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் முடிக்க முடியாத பட்சத்தில் நாளை எழுத்து மூலம் விளக்கம் வேறு கொடுக்க வேண்டியிருக்கும்.
உடம்பு படபடப்பில் நடுங்க ஆரம்பித்தது. குடிகாரனைப் போல கை கால்கள் பரபரக்கும் போஇருந்தது. கைகளின் நடுக்கத்தை சுயமாய் உணர்வது கொடுமை. அதை உணர்வது போல கைகள் நடுங்க ஆரம்பித்தன. கை, கால், உடம்பு நடுக்கத்தைத் தவிர்ப்பதற்காய் என்ன செய்வது என்று யோசித்தேன். ஒரு நிமிடம் அதற்காய் கிடைத்தது பாக்யமாக இருந்தது. மணிபர்சில் இருந்த வலி நிவாரணி மாத்திரை- 200 - இரண்டை எடுத்தேன். உடம்பு படபடப்பிற்கு இத் உபயோகமாகுமா என்று தெரியவில்லை. ஆனால் ஏதாவது மாத்திரையை விழுங்கவேண்டும். அவ்வளவுதான். பிளாஸ்டிக் ஜக்கில் இருந்த தண்ணீரைப் பார்த்தேன். சிறு கசடாய் ஏதோ மிதந்து கொண்டிருப்பது தெரிந்தது. இரண்டு மாத்க்டிரை போட்டாயிற்று வேறு வழியில்லை.
கசடை சற்றே ஒதுக்குவதற்காய் இடது கை ஆள்காட்டி விரலை உயர்த்த நினைத்தேன். தோள் வலியால் உயர்த்த முடியவில்லை. இடது தோள் இறுகிப் போய்விட்டது போலிருந்தது. கசடை ஒதுக்கி விட்டால் என்ன... குடிக்கலாம் என்று தோன்றியது. கசடு சீரகத் துணுக்கு போல இருந்தது ஆறுதல் தந்தது. அது சற்றே இடம்பெயர்ந்து அலைக்கழிந்தது. இரண்டு மாத்திரைகளை போட்டு த்ண்ணீர் குடித்தேன்.
சீரகத் துணுக்கு ஞாபகம் வந்தது. காலையில் எச்சிற்கையோடு ஒரு மாத்திரையை எடுத்து சீரகத் துணுக்காய் நினைத்துக் கொண்டே விழுங்கியது ஞாபகப் பிசகிலிருந்து தப்பி சரியாய் வந்தது மனசில்.
நன்றி: பன்முகம் (ஜன.மார்.2003 காலாண்டிதழ்)
|