அளிக்கப்பட்ட மொத்த மாத்திரைகளையும் வேர்க்கடலை உரிப்பது போல் உரித்தெடுத்து விழுங்கிவிட்டாள். சட்டென வாழ ஆசை வந்தது போல சாகக் கூடாது என்று கதறியிருக்கிறாள். மருத்துவரிடம் கூட்டிக்கொண்டு போய் இரண்டு மணி நேரத்திற்கு சாவகாசமாய் தன் மன அவஸ்தைகளைப் பிறரிடம் விளக்கிக் கொண்டே இருந்திருக்கிறாள். உப்புக் கரைசல் கொடுத்து கொஞ்சம் வாந்தி எடுத்திருக்கிறாள். 2 மணி நேரத்திற்குப் பின்னே ச்ய நினைவு இழந்திருக்கிறாள்.
வலி நிவாரணியை வழங்கி விட்டோம் என்ற நம்பிக்கையில் இரண்டு மணி நேரத்திற்கு வலி தானாகக் குறைந்து போகும். அதற்குப் பின் இரண்டு மணி நேரத்திற்கு வலியின்றி மூளை நரம்புகள் மரத்துப் போக அடுத்த வேளைச் சாப்பாடு வரைக்கும் வலி நிவாரண உத்ரவாதம் கிடைக்கும். அந்த உத்ரவாதத்தை உறுதிப் படுத்தி கொள்ள வேண்டியிருந்தது. வலி நிவாரணியை விழுங்கினேனா என்றுமூளைப்பிசகிடுக்கில் தேட ஆரம்பித்தேன்.
கீரைக் குழம்பு சாப்பிட்டது ஞாபகம் வந்தது. பூண்டுக் குழம்புச் செய்யச் சொல்லியிருந்தது ஞாபகப் பிசகாய் போய்விட்டது. மஞ்சள் பொடிக் கலவையில் தயாராகியிருந்த 'முட்டைக் கோஸ்' பொரியலைத் தவிர்த்தது சரியாக ஞாபகம் வந்தது. அதற்கப்புறம் மாத்திரை விஷயத்தில் எதுவரைக்கும் வந்தோம். நீரைக் குடித்தேனே, சீரகத் தண்ணீர் சொம்பு அளவு மிகவும் குறைந்து போயிருந்தது. ஏதோ தூசு மாதிரிக் கூட தென்பட்டதே. தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்க இயலாதே. மிதப்பது அழுக்குத் துணுக்காக இருக்கலாம். அல்லது சீரகத் துணுக்காகக் கூட இருக்கலாம். அந்த அழுக்குத் தோற்ற மாயை நினைத்தபடி நீரைக்குடித்தது ஞாபகம் வந்தது. மாத்திரையைப் பிய்த்தெடுத்துப் போட்டு விட்டுத் தண்ணீரைக் குடித்தேனே என்பதில்தான் ஞாபகப் பிசகு.
வாகனக் கைப்பிடிகளுக்காய் தோள்பட்டை சற்றே உயர்ந்தபோது வலி உச்சமாகியது. ஒற்றைக் கையனாய் அலுவலகத்தில் 10 நாட்கள் சாகசம் செய்தாயிற்று. பல சமயங்களில் நீண்ட விடுமுறை எடுக்க இதொரு வாய்ப்பு என்று கூட தோன்றியது. ஆனால் அலுவலகச் சூழல் மோசமாகிவிட்டது. நஷ்டத்தில் இயங்குபவற்றை மூடிவிடவும், லாபத்தில் இயங்குபவற்றை தனியாருக்கு விற்று விடவுமான மத்திய அரசின் கொள்கை விளக்க நடைமுறையில் தனியாருக்குப் பாதி பங்குகளை இலாகா விற்றாகிவிட்டது. இரண்டு வருடத்தில் முழுக்கத் தனியாருக்கு போய் விடும். அப்போது இந்த வகையான ஒற்றைக் கையர்களுக்கு வாய்ப்பு இருக்குமா...
|