(அர்ஜென்டீன சிறுகதை) ஆசிரியர் : ஃபெர்னான்டோ சோரென்டினோ
(ஃபெர்னான்டோ சோரென்டினோ இவர் அர்ஜென்டீனாவை சேர்ந்த இலக்கிய படைப்பாளி. இவர் அர்ஜென்டினா தலை நகர் பியூனஸ் அய்ரஸில் 1942ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம் தேதி பிறந்தார். கடந்த 32 ஆண்டுகளாக இவர் கதைகள், கட்டுரைகள் மற்றும் குழந்தைகள் இலக்கியங்கள் ஆகியவற்றை படைத்து வருகிறார். 6 சிறு கதைத் தொகுப்புகள் இது வரை வெளி வந்துள்ளன. ஒரே ஒரு குறு நாவல் 1979 ம் ஆண்டு வெளிவந்துள்ளது. மனிதர்களின் விசித்திரமான் பகுதிகளை நகைச்சுவையுடனும் அவலச் சுவையுடனும் வெளிப்படுத்துவதில் இவரது கதைகள் எளிமைபோல் தோற்றம் அளித்தாலும் அகழ்ந்தாய்ந்து பார்த்தால் மனித இருப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவை. அரசு அதிகாரிகள், விளம்பர மாடல்கள். வேன்டுமென்றே புரியாமல் எழுதும் கவிஞர்கள், விளம்பரம் தேடும் போலிகள், போலிப்பகட்டு மனிதர்கள் என்று இவரது நையாண்டிக்கு இலக்காகும் மனித உலகம் சிந்தனைக்குரியவை. இவரது கதைகள் பல ஆங்கிலம், போர்ச்சுகீஸ், இத்தாலியன், ஜெமன், பிரஞ்சு மற்றும் தமிழ் மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இங்கு வெளியிடப்படும் கதை ஸ்பானிய மொழியிலிருந்து கிளார்க்.எம்.ஸ்லாட்சூ என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழாக்கம்).
என் தலையில் குடையால் அடிக்கும் பழக்கமுள்ள ஒரு மனிதர் இருக்கிறார். அவர் என் தலையில் குடையால் அடிக்கத் துவங்கி இப்போது 5 ஆண்டுகள் ஆகிறது. முதலில் என்னால் அதை பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. இப்போது எனக்கு அது பழகிவிட்டது.
அவரது பெயர் எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு சராசரி தோற்றமுடையவர் என்பதை நான் அறிவேன். அவர் சாம்பல் நிற உடை அணிந்திருந்தார். அவருக்கு நரைக்கும் கன்னப்பொட்டுகள். அவருக்கு சராசரி முகம். ஒரு நாள் கொடுமையான வெயில் நேர காலையில் அவரை சந்தித்தேன். பலெர்மோ பூங்காவில் நான் ஒரு மர நிழல் அடர்ந்த பெஞ்சில் அமர்ந்து செய்தித் தாள் வாசித்துக் கொண்டிருந்தேன். திடீரென என் தலையில் ஏதோ ஒன்று படுவதை உணர்ந்தேன். அந்த மனிதர்தான், நான் இப்போது எழுதிக்கொண்டிருக்கிறேனே அதே மனிதர்தான், அதாவது என் தலையில் தொடர்ந்து அடித்துக் கொன்டிருக்கும் மனிதர், எந்திரத்தனமாகவும், வீறமைதியுடனும் குடையால் என் தலையில் அடித்துக் கொண்டிருக்கும் அதே மனிதர்தான்.
அப்போது கடும் சினம் நிரம்ப நான் திரும்பினேன்: அவர் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு ஏதாவது பைத்தியம் கிய்த்தியம் பிடித்திருக்கிறதா என்று வினவினேன்: ஆனால் நான் கேட்டது அவருக்கு கேட்ட மாதிரி தெரியவில்லை. பிறகு காவலதிகாரியை அழைப்பேன் என்று நான் அச்சுறுத்தினேன். கலங்காத அவர், ஒரு வெள்ளரிப்பிஞ்சின் அமைதியுடன் தனது வேலையில் கவனமாக இருந்தார். ஒரு சில தீர்மானமற்ற கணங்களுக்கு பிறகு, அவர் தனது பழக்கத்தை மாற்றும் எண்ணம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை எனும்போது, நான் எழுந்து நின்று அவரது மூக்கில் ஒரு குத்து விட்டேன். அந்த மனிதர் கீழே விழுந்தார், மேலும் சப்தமே கேட்காத சிறு முனகலை வெளிப்படுத்தினார்.
அவர் உடனேயே பெரும் முயற்சியுடன் சுதாரித்து எழுந்து நின்றார், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் குடையால் எனது தலையில் மீண்டும் அடிக்கத் தொடங்கினார். அவரது மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது, அந்த தருணத்தில் அவருக்காக வருந்தினேன். அவ்வளவு கடுமையாக அவரைத் தாக்கியதற்காக கழிவிரக்கம் கொண்டேன். அப்படி ஒன்றும் அவர் என்னை குண்டாந்தடி அடி அடித்து விடவில்லை. அவர் சும்மா மெதுவே என் தலையில் குடையால் சிறு தட்டுத்தான் தட்டிக் கொண்டிருந்தார், இதனால் வலி எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அவர் தட்டுவது தீவிரமாக என்னை தொந்தரவு செய்தது என்பது உண்மையே. நம் எல்லோருக்கும் தெரியும், நம் நெற்றியில் ஒரு ஈ உட்கார்ந்தால் அதனால் நமக்கு வலி எதுவும் ஏற்படாது, ஆனால் ஒரு விதமான எரிச்சல் ஏற்படும். ஆனால் என் தலையில் அவ்வப்போதும், சீராகவும் இறங்கிக் கொண்டிருக்கும் இந்த குடையும் ஒரு மிகப்பெரிய அளவிலான ஈதான்.
ஒரு பைத்தியக்காரனிடம் சிக்கியுள்ளோம் என்ற முடிவில் திருப்தியடைந்த நான் தப்பிக்க முயற்சி செய்தேன். அதனால் நான் ஓடத் துவங்கினேன் (இந்த இடத்தில் நான் ஒன்றை கூற விரும்புகிறேன், என்னைப்போல் வேகமாக ஒருவரும் ஓட முடியாது. அவரும் என்னைப்பின் தொடர்ந்து என் தலையில் ஒரு அடி கொடுக்க விரயமாக ஓடி வந்தார். அந்த மனிதருக்கு மூச்சுத் திணறியது. தஸ் புஸ் என்று அவருக்கு இரைக்கத் தொடங்கியது. இதுபோன்ற ஒரு வேகத்தில் நாம் அவரை ஓடச் செய்தால் அங்கேயே அந்த மனிதர் இறந்து விழுவார் என்பது உறுதி.
|