முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கதைகள்
 
கடிகார மனிதர்கள்
-எம்.ஜி.சுரேஷ்
இதற்கிடையில் உபயோகப்படுத்தப்படாமல் வருஷக் கணக்கானதில் அந்த இயந்திரமும் ரிப்பேராகிவிட்டது. இனி அதை டெலிவரி எடுத்தாலும் ரிப்பெர் என்று உபயோகிக்காமல் ஒரு மூலையில் போட்டு வைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யப்போவதும் இல்லை. சும்மா கிடைக்கும் இந்த இயந்திரத்தை டெலிவரி எடுத்துக் கொள்ளவே வருஷக் கணக்காகத் தள்ளிக் கொண்டிருக்கும் இந்த சிவப்பு நாடா அதிகார வர்க்கம். சர்க்கார் பணம் கொடுத்து இயந்திரம் வாங்குவதென்றால் இன்னும் என்னென்ன கெடுபிடிகள் செய்யுமோ? இந்த அதிகார வர்கத்தையும், ஆஸ்பத்திரியையும் நம்பி வாழ்கிற அப்பாவி ஜனங்களைப் பரிதாபத்துடன் நினைத்துக் கொள்வான் பாஸ்கரன். எவனோ யாருக்கோ பரிசளித்த இயந்திரத்துக்கும் 'மத்திய அரசு நிதியுதவிக்கும் என்ன சம்ப‌ந்தம்? எப்படியோ, மொத்தத்தில் அந்த ஃபைலை பார்க்கும்போதெல்லாம் அரசு இயந்திரத்தின் முட்டாள் தனத்தின் மீது அவனுக்கு கோபம் பற்றிக் கொண்டு வரும். தற்போது அந்த ஃபைலைக் கிழித்துப் போடுவதில் அவனுக்கு ஒருவித ஆத்ம திருப்தியும் அதன் மீதான கோபத்துக்கு ஒரு வடிகாலும் கிடைக்கும்.

ஆயிற்று - மணி ஐந்தரை ஆகிவிட்டது. எதிர்பார்த்த மாதிரியே காரியங்கள் நடந்து முடிந்திருந்தன.

ஆபீஸ் முழுதும் ஒரே பேச்சு. பேச்சின் பிரதான விஷயம் பாஸ்கரன் என்ற கிளார்க் முக்கியமான ஒரு ஃபைலைத் தொலைத்து விட்டானாம். ஆபீசின் எதிர் சாரி மரத்தடி நிழல்களிலும், பெட்டிக் கடை, டீக்கடை, முன்னேயும் நின்று சக கிளார்க்குகள் கிசுகிசுத்தனர். பாவம் அவனது போதாத காலம், என்ன தண்டனை கிடைக்குமோ, ஒரு வேளை கமிஷனுக்கு ஆசைப்பட்ட செக்ஷன் சூபரின்டெண்டே ஃபைலை ஒளித்து வைத்து விட்டு பாஸ்கரன் மீது பழியை போட்டுவிட்டாரோ என்னவோ என்றெல்லாம் விவாதங்கள் நடந்தன. இதுமாதிரி விஷயங்கள் தங்களுக்குப் படிப்பினை மாதிரி. எதிர்காலத்தில் தங்களுக்கு இது மாதிரி நேர்ந்து விடக்கூடாது என்றெல்லாம் பேசிக்கொண்ட அவர்களுக்கு பாஸ்கரனின் உள் நோக்கம் தெரிய வாய்ப்பில்லைதான்.

எல்லாச் சடங்குகளும் நடந்து முடிந்து விட்டன. பாஸ்கரனை ஃபைல் கேட்டு அவன் மறுத்து, மெமோ வழங்கி விசாரணை செய்து, குற்றம் சுமத்தி, இறுதியில் அவன் தண்டனைக்காக காத்திருந்தான்.

விசாரணையின் போது "தயவு செய்து என்னை சஸ்பென்ட் மட்டும் செய்து விடாதீர்கள் என்று அடிக்கடி மேலதிகாரிகள் அனைவரிடமும் கேட்டுக் கொண்டான். சர்க்கார் அலுவலகங்களில் சாதரணர்கள் எதை வேண்டாம் என்று கெஞ்சிக் கேட்கிறார்களோ அதைத்தான் மேலதிகாரிகள் கண்டிப்பாகச் செய்வார்கள். எந்த ஊருக்காவது 'ட்ரான்ஸ்பர்' வேண்டுமென்றால் 'டிரான்ஸ்பர் போட்டுவிடாதீர்கள் என்று கெஞ்ச வேண்டும். வேலூருக்கு ட்ரான்ஸ்பர் வேண்டாம் என்று கெஞ்சினால் வேலூருக்கு ட்ரான்ஸ்பர் உடனே கிடைக்கும். இந்த சூத்திரத்தின் அடிப்படையில்தான் பாஸ்கரன் சஸ்பென்ஷனைப் பார்த்துப் பீதியடைந்தவன் போலக் காட்டிக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு நிமிஷமும் 'சஸ்பென்ஷன்' ஆர்டரை எதிர்பார்த்தவாறே காத்திருந்த பாஸ்கரன் அவசர அவசரமாகத் தனது வேலைகளை முடித்துக் கொண்டிருந்தான். சஸ்பென்ஷனுக்கு பிறகு வேலையைப் பாதியில் விட்டு விட்டு ஓடிவிட்டான் என்று ஒரு பயல் பேசக் கூடாதல்லவா?

"ஸார்!"

குரல் கேட்டு திரும்பி பார்த்தான் பாஸ்கரன். அவனுக்கு சந்தோஷத்தில் மூச்சு அடைத்தது. கையில் ஏதோ ஆர்டருடன் பியூன் நின்றிருந்தான். பாய்ந்து அந்த ஆர்டரை வாங்கி கொண்ட பாஸ்கரன் ஆவலுடன் அதைப் பிரித்துப் பார்த்தான்.

".... மேற்படி குற்றச் சாட்டுகளின் அடிப்படையில், அரசு ஊழியரின் நன்னடத்தை விதிகளின் கீழும், அடிப்படை விதிகள் இன்னின்ன பிரிவுகளின் படியும், திரு. பாஸ்கரன் இள நிலை உதவியாளரின் வழக்கு பரிசீலிக்கப்பட்டு, பின் வரும் முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவரது சம்பளத்தில் நான்கு சம்பள உயர்வுகள் திரண்ட ஊதியப் பயனுடன் பிடித்தம் செய்யப்படுகின்றன...."

மேற்கொண்டு அவனால் படிக்க முடியவில்லை. மார்பை அடைத்தது. வியர்த்தது.

அடக் கடவுளே சஸ்பென்ட் செய்வதற்கு பதிலாக இன்க்ரிமென்டைக் குறைத்து விட்டார்களே... இன்க்ரிமென்டுடன் சம்பளம் வாங்கியே போதவில்லை. அதுவும் கட் என்றால்.

மீண்டும் ஆர்டரைப் படிக்க முயன்றான். முடியவில்லை. அந்த ஆர்டரை முழுசாகப் படிக்கு முன்னரே அதிர்ச்சியில் அவன் இறந்து போயிருந்தான்.

suresh
webdunia photoWD
(--கார்க்கி, நவம்பர் 1985.)
நன்றி : கனவுலக வாசியின் நனவுக் குறிப்புகள் (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: எம்.ஜி.சுரேஷ்.
வெளியீடு: மதி நிலையம்


 << 1 | 2 | 3   
மேலும்
சாஃப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர்
நவீன சினிமாவிற்கான களம்
இளம் இலக்கியவாதிகளுக்கான ஒரு கையேடு
மழை
குளிர்சாதனப் பெட்டி
சிற்றிதழ் : கவிதாசரண்