பாஸ்கரனுக்கு இப்போது வரும் மொத்த மாதச் சம்பளம் தொள்ளாயிரத்துச் சொச்சம். அதில் பிடித்தம் போக வருவதோ நானூற்றுச் சொச்சம். ஒரு வேளை வேலையில் தப்புத் தண்டா எதையாவது செய்து 'சஸ்பென்ட்" ஆகிவிட்டாலோ சப்சிஸ்டன்ஸ் அலவன்ஸ் என்ற பெயரில் கிட்டத்தட்ட சம்பளத்தில் பாதி அதாவது - நானூற்றுச் சொச்சம் கிடைக்கும். அதாவது வேலைக்குப் போகாமலேயே அதே சம்பளத்தை வாங்கிக் கொண்டிருக்கலாம். 'சஸ்பென்ஷன்' குறைந்தது ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கும். 'சஸ்பென்ஷன் காலம் முழுக்க சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கலாம். இப்போது கடனைத் திருப்பித்தரச் சொல்லி அரிக்கும் கடன் காரர்கள் சஸ்பென்ட் காலத்தில் பழைய கடனைக் கேட்க தயங்குவார்கள். கொஞ்ச நாளைக்கு ஆபீஸ் பிடுங்கல், கடன் பிடுங்கல் இல்லாமல் இருக்கலாம். தினமும் ஆபீஸ் போவதால் ஏற்படும் பஸ், காபி செலவுகளும் சுத்தமாக மிச்சமாகும்.
மேற்படி யோசனையின் பேரில்தான் பாஸ்கரன் தான் சஸ்பென்ட் ஆகிவிடுவது நல்லது என்று முடிவுக்கு வந்தான். ஒரு சின்ன 'மெமோ' வாங்குவதற்கே பயந்து சாகும் சர்க்கார் குமாஸ்தாக்களுக்கு மத்தியில் தன்னை 'சஸ்பென்ட்' செய்ய மாட்டார்களா என்று ஏங்கும் தனது விசித்திரன்மான தலைவிதியை நினைத்து நொந்து கொண்டான் பாஸ்கரன்.
ஆக, சஸ்பென்ட் செய்யப்படவேண்டும், நல்லது. அதற்கு ஏதாவது ஒரு தப்புத் தண்டா செய்யவேண்டுமே, என்ன செய்யலாம்? ஹெலன் பிரமீளாவின் கையைப்பிடித்து இழுத்தால் என்ன? அடக் கடவுளே... குய்யோ முறையோ என்று கத்தாமல் ஒரு வேளை அவள் சம்மதித்து தொலைத்து விட்டால் என்ன செய்வது? ஏற்கனவே ஒரு மாதிரி 'அடித்துப்' பார்வை பார்க்கிறாள். சரி, அப்படியானால் வேறு என்னதான் செய்யலாம்? பைல் எதையாவது ஒளித்து இல்லை... இல்லை... ஒழித்தே விட்டால் என்ன? ஏதாவது ஒரு பைலைக் கிழித்தெறிந்து விட்டு அந்த பைலைக் காணோம் என்று சொல்லி விடலாமே. அதுதான் சரி ஒரு பைலைக் கிழித்துப் போடவேண்டும். ஆபுறம் பைலைக் காணோம் என்று சொல்லிவிட்டு சஸ்பென்ட் ஆகிவிட வேண்டும். சஸ்பென்ஷன் காலம் முடிவதற்குள் ஆபீசில் புதிய பைலை உருவாக்கி விடுவார்கள். அப்புறம் வேலைக்கு திரும்ப வந்து அந்த புதிய பைலில் வேலையை ஆரம்பிக்கலாமே!
எந்த ஃபைலைக் கிழிப்பது? பைலைக் கிழிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்ததுமே, உடனே அவன் நினைவுக்கு வந்தது மத்திய அரசு நிதியுதவி ஃபைல் தான். அதற்குக் காரணம் இருந்தது. கிழித்தெறியப்படக் கூடிய யோக்யதை சர்க்கார் ஆபிசின் இதர பைல்களுக்கும் உண்டு என்றாலும் மற்றவற்றை விட இதற்கு அதிகம் உண்டு. அது ஒரு சுவாரஸ்யமான விஷயம்.
சில வருஷங்களுக்கு முன்னால் ஒரு பெரிய பிரமுகர் ஓர் ஆக்சிடென்டில் மாட்டிக் கொண்டார். அவரது போதாத காலம் இந்த ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக நேர்ந்தது. ஆக்சிடென்டின் விளைவாக வாயில் நுழையாத ஏதோ ஒரு லத்தீன் பெயரில் அவருக்கு உடல் கோளாறு ஏற்பட்டிருந்தது. தனியார் ஆஸ்பத்திரியில் அந்த 'லத்தீன்' வியாதிக்கும் பரமவைரியாக 'ஜப்பனிய'ப் பெயரில் ஒரு எலக்ட்ரானிக் எந்திரம் இருக்கிறதாம். இந்த ஆஸ்பத்திரியில் உள்ள இயந்திரங்களே ஒழுங்காக இயங்குவதில்லை, இதில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய இயந்திரங்களுக்கு எங்கே யோகம் அடிக்கப்போகிறது? அந்த ஆஸ்பத்திரியில் அந்த இயந்திரம் இல்லாமற்போனதால் பெரிதும் திண்டாடிப் போன அந்த பிரமுகர், ஒரு வழியாக இந்த ஆஸ்பத்திரியிலிருந்து வேறு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றலாகி மண்டையைப் போடாமல் தப்பிப் பிழைத்தார். தனது இக்கட்டான சூழ்நிலையை யோசித்துப் பார்த்த அந்த பிரமுகர் தான் பிழைத்தெழுந்ததும் இந்த ஆஸ்பத்திரிக்கு அந்த எலக்ட்ரானிக் இயந்திரத்தை இலவசமாக வாங்கித் தருவது என்ற முடிவுக்கு வந்தார். ஆஸ்பத்திரிக்கு இயந்திரம் கிடைக்கும்; தனக்குப் பெயர் நிலைக்கும்; எல்லாவற்றிற்கும் மேலாக வருமான வரிக்கும் காதில் பூ வைக்கலாம்.
மேற்படி உத்தேசத்தின் படி அந்த பிரமுகர் சில லட்ச ரூபாய் பெறுமானமுள்ள அந்த இயந்திரத்தை வாங்கி ஆஸ்பத்திரிக்குப் பரிசளித்து விட்டார். அதற்குப் பிறகு தான் விவகாரம் ஆரம்பித்தது. இயந்திரக் கம்பெனி பணத்தைப் பெற்றுக் கொண்டு, இயந்திரத்தை டெலிவரி எடுத்துக் கொள்ளுமாறு எப்போதோ ஆஸ்பத்திரிக்கு தகவல் அனுப்பி விட்டது. வருஷக் கணக்காகியும் அந்த இயந்திரத்தை சர்க்கார் ஆஸ்பத்திரி டெலிவரி எடுத்துக் கொள்ளவே இல்லை. இது மாதிரி தனி நபரிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள இயந்திரத்தை பெற்றுக் கொள்ளலாமா என்று 'செக்ரடேரியட்'டை சர்க்கார் ஆஸ்பத்திரி கேட்டது.
அதற்கு பதில் தெரியாத செக்ரடேரியட் மத்திய அரசுக்கு எழுதி ஆலோசனை கேட்டது. மத்திய அரசோ மற்ற மானில அரசுக்கு இதனை தெரியப்படுத்தி இது மாதிரி சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளதா எனவும், அச்சந்தர்ப்பத்தில் அவர்கள் எடுத்த மேல் நடவடிக்கை என்ன எனவும் வினவியது. அவர்கள் யாருக்கு வந்த விருந்தோ என்று மௌனமாக இருந்து விட்டார்கள். பின்னர் ஒரு குறிப்புரையாவது அனுப்பி வைக்குமாறு மத்திய அரசு கோரியது. ஆக மாநில, மத்திய அரசுகள் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தன. நினைவூட்டுகள் பறந்ததில் ஒவ்வோர் அலுவலகத்திலும் தலா கால் கிலோ அரைக்கிலோ எடை பெறுமானமுள்ள ஃபைல்கள் உருவானதுதான் மிச்சம். இன்று வரை இவற்றுக்கு யாரும் தீர்வு காண முயலவில்லை.
|