"ஜனன மரணப் பிரிவில் நான் வேலை செய்கிறேன் இல்லையா? பக்கத்து சீட் பிரேம் பீட்டர்ஸ் என்னிடம் ஓடி வந்து சொன்னான். ஒரு போலந்துக்காரி செத்துவிட்டாள். வயசு இருபத்திநாலு. எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது என்றான். என்ன யோசனை என்று கேட்டேன். இவள் எப்படியும் செத்துப் போய்விட்டாள். இவள் பெயரைப் பதிந்தால் என்ன, விட்டுத் தொலைத்தால்தான் என்ன? இவள் பெயரைப் பதியாமல் விட்டுவிடுகிறேன். உன் காதலியை இவளாக மாற்றிவிடு. இவள் வெள்ளைக்காரி என்பதால் இவளோடு நீ ஜோடி சேர்வதில் அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இராது!"
"நான் யோசித்துப் பார்த்தேன். முடிவு செய்துவிட்டேன்"
"என்னவென்று?"
"அவள் பெயரை மரணப் பட்டியலிலிருந்து நீக்கி, திருமண ஜோடிப் பட்டியலில் என் பெயருக்கு நேராக அவள் பெயரைப் பதிவதற்கு ஏற்பாடு செய்து விட்டேன்."
"அப்புறம்?"
"உன் விலாசத்தையும் உன் போனாவிஷன் நம்பரையும் அந்தப் பெண்ணிடன் பெயரோடு கொடுத்துவிட்டேன்."
"ஐயையோ!
"இனி உன் பெயர் கிறிஸ்டினா ஜான்டா. உனக்கும் எனக்கும் சர்க்காரிடமிருந்து கல்ணாயத்துக்கான அனுமதி கிடைத்துவிடும்"
"நான் எப்படி கிறிஸ்டினா ஜாண்டா ஆக முடியும்?"
"ஏன் முடியாது?" தலைமுடியை ப்ளீச் செய்து கொள். கண்ணுக்கு காண்டாக்ட் லென்ஸ் போடு. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தோலில் உள்ள பிக்மெண்ட்களைத் திருத்தி வெள்ளைத் தோளாக மாற்று. கிறிஸ்டினா ஜாண்டா தயார்."
"எனக்கு பயமாக இருக்கிறது"
"இதில் பயப்பட ஒன்றும் இல்லை"
பத்து நாட்கட்ள கழிந்தன. சாயந்தரம் வேலையிலிருந்து களைப்புடட்ன தன் அபார்ட்மெண்டுக்குத் திரும்பிய அபியின் மேஜையின் மேல் ஒரு பேக்ஸ் செய்தி காத்திருந்தது.
"நல் வாழ்த்துக்கள்"
தங்களுக்கும் கீழ்க்காணும் பிரஜைக்கும் திருமண ஒப்பந்தத்துக்கான ஒப்புதல் மைத்ராவின் பெயரால் வழங்கப்படுகிறது.
பெயர் : கிறிஸ்டினா ஜாண்டா வயது : 24 தொழில் : அணு விஞ்ஞானி இருப்பிடம் : வார்சா, போலந்து
தற்போதைய விலாசம் : ஸ்ட்ராஸ்பர்க், பிரான்ஸ்
இன்னும் ஒரு வாரத்தில் மேற்படி பிரஜை தங்கள் இருப்பிடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்.
- ஐசக் துரானி. இயக்குநர் (மைத்ரர்வின் ஆணையின்படி)
சந்தோஷம் தாங்காமல் துள்ளிக் குதித்தான்.
அந்த வாரம் முழுவதும் போனோவிஷனில் இருவரும் மாறி மாறிப் பேசுவதே தொழிலாகிப் போனது. அவர்கள் அலுவலக வேலை கூட உப தொழிலாகிவிட்டது.
ஒன்பதாவது நாள், விடியற்காலை (0500) ஐந்து மணி இருக்கும். வாசலில் யாரோ வந்து அழைப்பு மணியை அழுத்தினார்கள்.
தூக்கக் கலக்கத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் அபி. ரிமோட் கண்ட்ரோல் ஸ்விட்சை அழுத்தினான். வாசலில் ஒரு வெள்ளைக்காரி நிற்பது திரையில் தெரிந்தது.
குழப்பத்துடன் வாசற்கதவைத் திறந்தான்.
இருபது வயசுக்குரிய முகமும் நாற்பது வயசுக்குரிய பொதுக் உடம்புமாய் ஒரு வெள்ளைக்காரி.
"நீங்கள்தானே மிஸ்டர் அபி...?"
"ஆமாம்... நீங்கள்?"
"ஆ!.. நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். இந்தியன்தானே? நீ எப்படி இருப்பாயோ என்று பயந்து கொண்டே வந்தேன். நல்ல வேளை தப்பித்தேன். உன்னை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது"
அபியின் வயிற்றில் அமிலம் சுரந்தது.
"நீங்கள் யாரென்று சொல்லவில்லையே?"
"நான் ஒரு முட்டாள். அவசரத்தில் என்னைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். என் பெயர் கிறிஸ்டினா ஜாண்டா... என்னை உனக்கு மனைவியாக்கி இருக்கிறார்கள்...."
சொல்லும்போதே அவள் முகம் வெட்கத்தால் சிவந்தது.
"நீ இறந்துவிட்டதாக அல்லவா சொன்னார்கள்?"
கெக்கெக்கே என்று அபஸ்வரமாகச் சிரித்தாள்.
"அதையேன் கேட்கிறாய்? பக்கத்து பிளாட்டில் கிறிஸ்டினா ஃபாண்டா என்று ஒருத்தி செத்துப் போய் விட்டாள். தவறுதலாக நான் தான் செத்துப் போய்விட்டேன் என்று நினைத்துவிட்டார்கள். நல்ல வேடிக்கை. நான் ஓர் இந்தியனைக் கட்டிக் கொண்டு பிள்ளை குட்டி பெற வேண்டும் என்பது என் விதி."
"அப்படியானால் சுஷா என்ன ஆனாள்?"
"சுஷாவா.. ஓ... ஓர் இந்தியப் பெண். அவள் ஒரு பைத்தியம். நான்தான் கிறிஸ்டினா ஜாண்டா என்று புலம்பிக் கொண்டிருந்தாள் பாவம்."
"அவளுக்கு என்ன ஆயிற்று?" திகிலுடன் கத்தினான் அபி.
"ஃபோர்ஜரி குற்றம் சாட்டி அவளை அணுக்கதிரியக்க அறையில் தள்ளி லேசர் கதிரைப் பாய்ச்சிக் கொன்றுவிட்டார்கள்."
"ஐயய்யோ!"
"அதுமட்டுமன்று. உயிருடன் இருக்கும் ஆளையே செத்துப் போன மாதிரி சொன்ன ஆளையும் அபிஸ் காராக்கிருகத்துக்கு அனுப்பிவிட்டார்கள். சுஷாவை கிறிஸ்டினா ஜாண்டாவாக ஆக்கிய தேசத்துரோகியையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்."
அபி முகத்தில் ரத்தமிழந்தான்.
"சரி, அந்தக் கண்றாவியெல்லாம் கிடக்கட்டும். இந்தா, என்னைக் கட்டி அணைத்துக் கொள். முத்தமிடு."
என்று கூறி அவனைக் கெட்டியாகப் பிடித்து அனைத்துக் கொண்டாள். அபி மூச்சுத் திணறினான். அவளை வெடுக்கென்று உதறினான்.
"என்ன ஆயிற்று உனக்கு? காளிதாசன். கம்பன் பிறந்த ஊர்க்காரனாயிற்றே. பெண்ணை வெறுக்கலாமா? என்னைத் தொடு. காளிதாசனைக் கூப்பிடு."
"முதலில் நான் போலிஸைக் கூப்பிடப் போகிறேன்"
"ஏன்?"
"சரணடைவதற்கு"
நன்றி, கனவுலக வாசியின் நனவுக் குறிப்புகள்
-(புதிய பார்வை -மே 1995)
|