கொஞ்ச நாட்கள் தொட்டு, உராய்ந்து, பரஸ்பர பயங்கள் விலகின பின் ஒரு நாள் அவள் அபார்ட்மெண்டுக்குப் போனான் அபி. அவள் வித்தியாசமான குதூகலத்துடன் அவன் எதிரில் சில ஃபிளாப்பிகளைப் போட்டுவிட்டு, அவன் எதிரிலேயே உடைகளைக் களைந்தவாறே குளிக்கப் போனாள்.
தாஸ்தாயெவ்ஸ்கியின் கரமஸாவ் சகோதரர்களின் (உளவியல் நாவல்கள் தடை செய்யப்படவில்லை) இரண்டாவது அத்தியாயத்துக்குள் அவன் நுழைந்தபோது. அவள் அரைகுறை ஈர உடம்புடன் பாத்ரூமிலிருந்து வெளி வந்தாள். அவனருகில் நெருங்கி நின்று... மயக்கும் வாசனையுடன்,
"எங்கே வைத்துக் கொள்ளலாம்? இங்கேயவா அல்லது உள் ரூமிலா?"
"எதை?"
"செக்ஸ்"
"வாட்?"
"என்னுடன் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா? என்று கேட்டேன்."
"அதைவிட மேலான ஒன்றை உன்னிடம் வைத்துக் கொள்ள விரும்புகிறேன்."
"அப்படி என்றால்?"
அதற்கு அவன் சொன்ன பதிலைக் கேட்டு கதிகலங்கினாள்.
"உன்னைக் காதலிக்க விரும்புகிறேன் பெண்ணே!"
அவள் கலவரத்துடன் அந்த அறையில் பொருத்தப்பட்டிருந்த மைக்ரோ காமிராவைப் பார்த்தாள்.
அபி அவளைத் தரதரவென்று மைத்ராவின் மைக்ரோ காமிராவின் கண்ணுக்கு அப்பால் இழுத்துப் போனான்.
"அபி இது எப்படி சாத்தியம்?"
"ஏன் சாத்தியமில்லை சுஷா? உன்னை நினைத்தானே என்னுள் பரவசம் பொங்குகிறது. உனக்கு?"
"எனக்கும்தான்."
"அதன் பெயர்தான் காதல்!"
"ஸ்டுப்பிட்! அது ஆண்ட்ரோஜன் - எஸ்ட்ரோஜன் சமாச்சாரம். பொங்குவது பரவசமில்லை. ஹார்மோன். பெண்ணைப் பார்த்தால் ஆணுக்கும் ஆணைப் பார்த்தால் பெண்ணுக்கும் சுரப்பது ஹார்மோன். காதல் அல்ல."
"ஷிட்! செக்ஸ் என்பது ஒன் பாத்ரூம் சமாச்சாரம் இல்லை. பெண் என்பவள் உபாதை தீர்க்கும் டாய்லெட்டும் இல்லை. காதல் இல்லாத செக்ஸ் ஸாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டருக்குச் சமம். புரிந்ததா?"
அதற்குள் மைக்ரோ காமிராவின் எல்லையைவிட்டு அவர்கள் வெளியேறி ரகசியம் பேசினதற்கு, விண் வெளி காண்டோரிலிருந்து ரேடியோவில் கேள்வி வந்தது. செக்ஸ் சமாச்சாரம் என்பதால் ஒதுங்கினதாக அபி காரணம் சொன்னான். சுஷா புன்னகைத்தாள்.
அதன் பின்னர் சில நாட்களில் அவள் புரிந்து கொண்டாள்; அந்தத் தவிப்பை அந்த அவஸ்தையை; அந்த பரவசத்தை; அதன் பேர் காதல்,
மைத்ரர்வின் காண்டோர் கழுகுக் கண்களையும், அறைக்கு அறை பொருத்தப்பட்ட ஹைடெக் காமிராக்களையும் மீறி இருவரும் காதலிக்க ஆரம்பித்தாயிற்று.
உடனடியாக அடுத்த நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டும். சர்க்கார் பிக்கு ஒரு நெதர்லாந்துக் காரியையோ அல்லது சுஷாவுக்கு ஓர் ஆஸ்திரேலிய ஆசாமியையோ அனுப்புவதற்குள் இவர்கள் கல்யாணம் செய்து கொண்டுவிட வேண்டும். தாமதித்தால் சிக்கல் நேரும். அதற்கு ஓர் அருமையான திட்டத்தை அபி தயாரித்திருந்தான். அதற்காகவே சுஷாவை இங்கு வரச் சொல்லியிருந்தான். தடிக்கழுதை இன்னும் வரவில்லையே.
அம்பு வடிவ ஸ்பேஸ் பஸ் வந்து நின்றது. நியூமாட்டிக் கதவு வாய் பிளந்து கொளள் அலுமினிய நாக்கு மாதிரி படிக்கட்டு வெளியே நீண்டது. தரை தொட்டது. இரண்டொரு பயணிகளுக்குப் பின் சுஷா இறங்கினாள். அபியின் மனசு சந்தோஷக் குற்றாலத்தில் குளித்தது.
சுஷா அவன் அருகில் வந்தாள். களைத்திருந்தாள். அவன் தோளைத் தொட்டு தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டாள்.
"ஏதோ முக்கியமான திட்டம் என்றீர்களே, என்ன அது?"
"வா,சொல்கிறேன்"
பக்கத்தில் செயற்கைக் குளம். அதில் மிதக்கும் ரெஸ்ட்டாரண்ட். ஆட்கள் அதிகம் இல்லை இங்கே வந்து ரகசியம் பேசுங்களேன் என்று கெஞ்சுகிற மாதிரி ஏகாந்தமாக இருந்தது.
ரெஸ்ட்டாரண்டின் ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் போய் உட்கார்ந்து, கிட்ட வந்த ரோபோவை இரண்டு ப்ளேட் காளான் கட்லெட்டுக்கும் சோயா பீன்ஸ் சூப்புக்கும் ஆர்டர் கொடுத்துத் துரத்தி விட்டு அபி சுஷாவைப் பார்த்தான்.
பட்டுப் பூச்சியின் இறக்கையாய் கண் இமைகள் படபடக்க, "என்ன விஷயம்?" என்று கேட்டாள் சுஷா.
"நாம் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறோம்.அதுவும் அரசின் ஒப்புதலுடன்"
"எப்படி... எப்படி?"
|