இபின் பதூதா டில்லி அற்புதமானதொரு நகரமாகவும், இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்லாமிய உலகிலேயே மிகப்பெரிய நகரமென்றும் வர்ணிக்கிறார். இபின் பதூதா தில்லிக்கு அருகில் நான்கு அண்டை நகரங்கள் அமைந்திருப்பதாகவும், அதில் ஒன்று இஸ்லாமியா ஆட்சி வருவதற்கு முன்னரே இருந்துவரும் பழைய தில்லி என்றும், மற்றொன்று துக்ளக் நிர்மானித்த துக்ளகாபாத் என்றும் குறிப்பிடுகிறார்.
இபின் பதூதா இந்தியாவை வர்ணிக்கும்போது, இந்திய பழக்கவழக்கங்களையும், மரபுகளையும் சேர்த்தே விளக்குகிறார். இந்தியர்களுக்கு தாமரை மேலிருக்கும் பெரு மதிப்பைப் பற்றிக் கூறுகிறார்: "இந்தியர்கள் இந்த மலர் மீது மிகுந்த மரியாதை கொண்டுள்ளனர். இந்தியர் ஒருவர் தனது நண்பரைப் பார்க்கச் செல்லும்போது தாமரை இலைகள் ஐந்தை பரிசாகத் தருகிறார்.
நண்பருக்கு இதில் மொத்த உலகத்தையே பரிசாக அளித்துவிட்டதைப் போல பெருமகிழச்சி ஏற்படுகிறது. பொன்னையும், வெள்ளியையும் விட இதுவே மிக உயர்ந்த பரிசாக இருக்கிறது. "இபின் பதூதா இந்திய பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் கூர்ந்து கவனித்தவராகையால், எந்தவொரு இந்தியனையும் வெளித்தோற்றத்தை வைத்தே அவர்களது மத, கலாச்சாரப் பிரிவுகளைப் பற்றி சொல்லிவிட முடியும் என்று எழுதுகிறார். இந்திய மரபுகளை நன்றாக அறிந்து கொண்டால், முஸ்லீமிற்கும், முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை சுலபமாக சொல்லிவிடலாம். முஸ்லீம் அல்லாத பெண்கள் தமது காதுகளை குத்திக்கொண்டு காதணிகள் அணிந்து கொள்கையில், முஸ்லீம் பெண்கள் காது குத்திக் கொள்வதேயில்லை. இபின்-பதூதாவின் கவனத்தை பாதித்த அந்நாளைய இந்திய வழக்கம், உடன் கட்டை ஏறுதல். கணவனின் எரியும் சிதையில் மனைவி உயிருடன் தள்ளப்படுவதை தனது நூலில் அடிக்கடி குறிப்பிடுகிறார்.
இந்தியப் பேரரசர் துக்ளக்கின் விருந்தோண்மையும், மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் அவருக்கிருந்த மன உறுதியும் இபின்பதூதாவை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சிந்து மாகாணம் ஒருமுறை கடும் வறட்சியில் தவித்து, முன்னெப்போதுமில்லாத வகையில் விலைவாசிகள் உயர்ந்ததில், முகமது-பின்-துக்ளக் தனது கஜானாவிலிருந்து நேரடியாகவே நிதி எடுத்து ஆறுமாதங்களுக்கு அம்மக்களுக்கு வழங்கியதாக அவர் குறிப்பிடுகிறார். துக்ளக் தனது தலைநகரை மாற்றியதற்கான விவேகமான காரணங்களையும் அவர் விளக்குகிறார்.
இபின் பதூதாவின் நூலில் இயற்கையின் பல்வேறு கொடைகளை, மரங்களை, பூக்களை, கனிகளை மிக விரிவாக படம் பிடித்துக் காட்டுகிறார். தான் சென்ற இடங்களைத் தத்ரூபமாக வர்ணிக்கிறார். இந்தியாவின் அறிவுக்களஞ்சியங்களில் அபார ஆர்வம் கொண்ட மற்றொருவர் மாபெரும் அபாஸிட் எழுத்தாளர் அல்-கஹேத் ஆகும். இவர் தனது அல்-பாயன் மற்றும் அல்-டேமியான் என்ற நூல்களில் இந்திய தத்துவ ஞானிகளைப் பற்றியும், இந்தியர்களின் அறிவுக் கூர்மையும், தீரத்தையும் புகழ்கிறார். "அறிவிற்கும், ஞானத்திற்கும், தீட்சண்யத்திற்கும் இந்தியாவே ஆதார ஊற்று" என்கிறார்.
மற்றும் அல்-மவூதி (கி.பி.956) என்பவர் சிந்து, குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் பயணம் செய்து எழுதிய நூலில் உலகின் மிகச்சிறந்த ஏழு இனங்களில் ஒன்றாக இந்தியர்களை மதிப்பிடுகிறார். இதே போல் இந்தியாவில் பயணம் செய்து அதன் வியத்தகு பெருமைகளை எழுதியிருக்கும் பிற அராபிய எழுத்தாளர்களாக பின் அல்-ஃபக்கிஹ் அல்-ஹம்தானி (பத்தாம் நூற்றாண்டு அல்-ஷெரீஃப் அல்-இட்ரிஸி (கி.பி.1099-1153) அல்-காஸெளனி (கி.பி.1203-1283), அல்-நூரி (கி.பி.1278-1332) மற்றும் அல்-கலாக் சந்தி (கி.பி.1355-1488) போன்றோரும் ஆவர்.
|