முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கதைகள்
 
திராவிட இயக்க நாடகங்கள் - வெளி ரங்கராஜன்
Webdunia
1967-ல் தி.மு.க. பதவிக்கு வந்ததும் "கூத்தாடிகள் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள்" என்று பக்தவத்சலம் கூறினார். சமூகக் களத்தையே ஒரு நாடக மேடையாக்கி சாதாரண மனிதர்களையே பார்வையாளராகவும் பங்கு பெறுபவர்களாகவும் மாற்றிய பெருமை திராவிட இயக்கங்களுக்கே உரியது. தமிழகக் கலை இலக்கிய வரலாற்றில் ஒரு சாதாரண மனிதன் தனக்குரிய கலாச்சார இருப்பையும், ஈடுபாட்டையும் உணரத் தலைப்பட்டது திராவிட இயக்கங்களின் காலத்தில்தான். கதாகாலட்சேபங்களும் பக்திப் பாடல்களும், புராண இதிகாச நாடகங்களும் தமிழ் நாட்டுக் கலாச்சார சூழ்நிலையை ஆக்ரமித்துக் கொண்டிருந்த நேரத்தில் மேடைப்பேச்சு, பத்திரிகை ஈடுபாடு, சமூக விமர்சனம், இயக்கப் பாடல்கள் என்று கலாச்சாரத்தின் போக்கை மாற்றி புதிய ஈடுபாடுகளை உருவாக்கியது திராவிடர் இயக்கம். ஒவ்வொரு மேடையும், ஒரு நாடக மேடையைப் போலவே உணர்ச்சியையும், ஈடுபாட்டையும் எழுப்புவதாக இருந்தது. உவமைகள், உருவகங்கள், கதைகள் என மேடைப்பேச்சுக்குப் புதிய பரிமாணங்கள் கிடைத்தன. தமிழில் நாடகத்தன்மையுடன் கூடிய நீண்ட மேடைப்பேச்சு என்பது திராவிட இயக்க மேடைகளில்தான் கிடைத்தது. புதிய புதிய பேச்சுப் பாணிகள், புதிய சொல்லாக்கங்கள், மிக மிக நீண்ட வாக்கியங்கள் என்று தமிழ்ப் பேச்சு மொழிக்கு திராவிட மேடைகளில் புதிய வடிவம் கிடைத்தது. படித்தவர்கள் பேசத் திணறிய கருத்துக்களையெல்லாம் சாதாரணப் பேச்சாளர்கள் சரளமாகப் பேசினார்கள். இப்படி ஒரு நாடக நடிகனைப் போன்று மொழியின் மீது லாவகமும் ஆளுமையும் கொண்டிருந்தன திராவிடர் இயக்க மேடைகள். மிகவும் பிற்காலம் வரை நாடகங்களிலும் சினிமாக்களிம் நிலவிய பிராம்மணிய உரையாடல் மொழி மாறத் துவங்கியது. மொழிக்குக் கிடைத்த இத்தகைய வளமையினால் தான். பாமரனுக்கும் ஒரு மொழி ஆளுமை ஏற்பட இயக்கம் உதவியது.

மக்கள் நீண்ட தூரம் நடந்து வந்து மேடைப்பேச்சில் ஆர்வம் காட்டினர். "வாழ்க திராவிட நாடு! வாழ்க திராவிடம் வாழ்கவே" என்ற பாட்டைக் கேட்கும் போதெல்லாம் கலைகள் நிறைந்த ஒரு புதிய சமுதாயம் பற்றிய கற்பனைகள் கிளர்ந்தெழுந்தன. `காவிரி, வைகை, தாமிரபரணி களிப்புடன் வாழ்ந்திடும் நாடு' என்று பாடும்போது கற்பனைகளும் உணர்ச்சிகளும் பெருகின. பேச்சு, பாடல் என்றில்லாமல் படிப்பதிலும் ஒரு ஆர்வத்தைத் திராவிட இயக்கங்கள் உருவாக்கின. பெரியார் விடுதலையில் எழுதிய தலையங்கங்களும், அண்ணா திராவிட நாட்டில் எழுதிய கட்டுரைகளும் கட்டுரைத் தமிழுக்கு செறிவையும் கூர்மையையும் அளித்தன. இந்தக் காலக்கட்டத்தில் தோன்றியப் பத்திரிகை ஈடுபாட்டிற்கு இணையாக வேறு எந்தக் காலக்கட்டத்தையும் குறிப்பிட முடியாது. ஒவ்வொரு தெருவிலும் திராவிடத் தலைவர்கள் பெயரில் மன்றங்கள் அமைக்கப்பட்டு பத்திரிகைகள் படிப்பதற்கு கிடைத்தன. விடுதலை, நம்நாடு, மாலைமணி போன்ற பத்திரிகைகளைப் படிக்கவும் விவாதிக்கவும் மன்றங்களில் பலர் கூடினர். பல பேச்சாளர்கள் உருவாயினர். அதிகம் படிக்காத ஆள்கூட தன்னுடைய கருத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்வதற்கான பயிற்சியை திராவிட இயக்கம் அளித்தது. படிப்பதும், எழுதுவதும் புலவர்கள் கையிலிருந்து சமூக செயல்பாட்டில் ஈடுபடுவோர் கைக்கு மாறியது. தமிழ் உரைநடையில் செறிவு, கூர்மை, சமூக விமர்சனம் ஆகிய போக்குகள் உருவாகி அதைப் பரவலாக தமிழ் மக்கள் தங்கள் சமூக வாழ்வில் உபயோகிப்பதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.

நானும் மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்துடன் ஒரு உணர்வுபூர்வமான ஈடுபாடு கொண்டிருந்தேன். கூட்டம் கூட்டமாக நாங்கள் மைதானங்களிலும் தெரு முனைகளிலும் கூடிப் பேசுவோம். 1962 இல் சீனப் படையெடுப்பின் போது திருச்சி ஜோசப் கல்லூரி மைதானத்தில் பேசுவதற்கு அண்ணா வந்திருந்தார். மறுநாள் பரீட்சையையும் பொருட்படுத்தாமல் நாங்கள் கூட்டத்துக்குப் போனோம். பார்த்தால் எங்கள் தலைமை ஆசிரியர் முன்னே உட்கார்ந்திருந்தார். ஒரு கணத்தில் எல்லோரும் சமமான உணர்ச்சி உடையவர்களாகிவிட்டோம். ஒரு பொறி பறந்தது போன்ற உணர்வு எல்லோரையும் பீடித்திருந்தது. பெரியாரின் தொண்டரான ஒரு சவரத் தொழிலாளி அப்போது எங்களுக்கு நண்பராக இருந்தார். சாக்ரடீஸ், மார்க்ஸ், ஏங்கல்ஸ் பற்றியெல்லாம் அவர்தான் எங்களுக்கு நிறைய தகவல்கள் தெரிவித்தார். ஒரு பாமரனுக்குக் கூட அவனுடைய அறிவுத்தாகத்திற்குரிய வடிகாலும், சமூக இருப்புக்குரிய அர்த்தமும் திராவிட இயக்கத்தில் கிடைத்தது.

சமூக விமர்சனத்தை தம்முடைய இயக்கத்தின் அடிப்படையாகக் கொண்டதால் எந்த விஷயமும் விமர்சனத்துக்கு உரியது. யாரும் விமர்சனம் செய்யமுடியும், தாய்மொழியிலேயே சிந்தித்து சிறப்பான கருத்துக்களை வெளியிட முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கியது திராவிடர் இயக்கம். இவை நாடகங்களில் வெளிப்பட்டபோது அதிகமான எழுச்சியையும் உணர்ச்சி வேகத்தையும் எழுப்பின. அப்போது நாடகங்கள் படிப்பதற்காக எழுதப்படவில்லை. காட்சி அமைப்பு, பாடல்கள், நடனங்கள் இவைகளைச் சிறப்பாக அமைப்பதிலேயே நாடகக்காரர்களின் கவனம் இருந்தது. பாட்டுகளின் பலமே நாடகங்களின் உயிர்நாடியாக இருந்தது. இந்தப் பாட்டுகளின் ஆதிக்கத்தை ஆரம்பக் காலத்திரைப்படங்களிலும் பார்க்கலாம். இதனால் குரல்வளம் பெற்றவர்களைத் தவிர யாரும் நடிகனாவதைக் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது. தமிழ் மேடையின் முதன்முதலாகக் கருத்து ஆதிக்கம் ஏற்பட்டது திராவிடர் இயக்க நாடகங்களில் தான். அண்ணாவின் ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், வேலைக்காரி, சந்திரோதயம் ஆகிய நாடகங்கள் இதுவரை இருந்த நாடகத்தின் கட்டுமானத்தை மாற்றின. இந்த நூற்றாண்டின் சிறப்பான நாடகக்காரர்களாக விளங்கிய சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல்சம்பந்த முதலியார் போன்றவர்கள்கூட கருத்துக்களைவிட தொழில் நுட்பத்தில் தான் அதிக ஈடுபாடு கட்டினர். சிறப்பான நடிப்புப் பயிற்சி, ஒழுங்கு முறை இவற்றின் மூலமாகவே நாடகங்களுக்கு ஒரு மதிப்பையும் மக்கள் ஈடுபாட்டையும் உருவாக்கி இருந்தனர்.

திராவிட இயக்க நாடகங்கள்
- வெளி ரங்கராஜன்

அண்ணா, கருணாநிதி போன்ற தி.மு.க. தலைவர்களின் நாடகங்கள் பிராமணியத்தை அடித்து நொறுக்குவது, புராண மதிப்பீடுகளைக் கேலிசெய்வது, சமூக பேதங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவது என்ற நிலையில் அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாட்டு வடிவங்களாகவே அமைந்தன. அண்ணாவின் சந்திரரோதயம் நாடகத்தில் வரும் உரையாடலைப் பாருங்கள். கோவில் வாசலில் உரையாடல் நடக்கிறது.


வாஞ்சிநாத சாஸ்திரி : இன்னைக்கு உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லையினு பேசுவாங்க. ஜாதி இல்லை - ஆசாரம் இல்லையினு பேசுவாங்க. பேசிட்டா போதுமா? நாய்க்கருக்கும் முதலியாருக்கும் என்ன வித்தியாசம். இப்படிப் பேசுறவனுக நாளைக்கு பணக்காரன் ஏது ஏழை எதுன்னு கூட பேசுவானுங்க. நான் எதுக்குச் சொல்றேன்னா நாளை கட்டுக்குலைஞ்சிரும்னு சொல்ல வர்றேன்.

சிங்காரவேலர் : ஆமா. ஐயரு சொல்றதும் சரிதான். (பின்னால் மாறு வேஷத்துடன் இருந்த துரைராஜ் இதைக் கேட்டுவிட்டு)

துரைராஜ் : எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டியதுதான்.

வாஞ் : இது என்ன ரஷ்யாவா?

துரை : அங்கே கூட முன்பு இருந்தார்கள் உங்களைப் போன்றோர். அவர்களை அழித்து ஒழித்துவிட்டது காலம்.

வாஞ் : இங்கே அது நடக்காது.

துரை : ஏன்? ரஷ்யாவில் ஏது தலைவிதி என்று பாடினானே அவனைப் பாருங்கள். அவன் உடலிலே பூராவும் புண்ணாக இருக்கிறது. உள்ளே கோவிலில் ஆண்டவன் உருவாகியிருக்கிறானே, அவர்தானே இவனையும் படைத்தது? உம்மையும் படைத்தது? உமக்கும் இவனுக்கும் ஏன் இவ்வளவு வேற்றுமை!

வாஞ் : அது அவன் விதி!

துரை : விளங்கக் கூறத் தெரியாததற்கு விதி என்று சுட்டிக் காட்டினால் அதை மக்கள் ஏற்கும் காலம் மாறி வருகிறது.

பிச்சைக்காரன் : ஐயா! ஆளுக்கொரு காலணா போட்டா இந்த ஏழை வயிற்றுப் பசிக்கு ஒரு வேளை சாப்பாடாகும் சாமி.

சிங் : சேச்சே! இந்தப் பிச்சைக்காரங்க தொந்தரவு ரொம்ப ஜாஸ்தியாப் போச்சு. இவனுகளுக்கு ஒரு சத்திரம் சாவடி கட்டிப்போடணும். டேய்! போடா இது கோயிலு.

வாஞ் : முதலியார்வாள்! ஜெர்மனியிலே பிச்சைக்காரர்களை என்ன செய்யறா தெரியுமா? சுட்டுத் தள்ளிடுவா.

துரை : என்ன கல் நெஞ்சமய்யா உனக்கு! இந்த ஏழையும் மனிதன் தானே உம்மைப்போல. அன்பே சிவம், சிவமே அன்பு என்று பேசுகிறீர்கள். ஏழையைக் கண்டால் சுட்டுத்தள்ள வேண்டுமென்கிறீர்களே. அந்த ஏழைக்கும் ஒரு காலம் வரும், அந்த உலர்ந்த உதடுகளிலிருந்து உக்கிரம் பிறக்கும், கண்கள் கனலைக் கக்கும், புழுவும் போரிடும், அப்போது உங்கள் செல்வம்,அந்தஸ்து, சாஸ்திரம் யாவும் மண்ணோடு மண்ணாய் போகும். உழைக்கிறான் மாடுபோல் - ஆனால் உண்டு கொழுப்பது நீங்கள். வீட்டைக் கட்டிக் கொடுத்த அவனுக்கு தங்குவதற்கு இடமின்றி வீதியிலே விழுந்து கிடக்கிறான். அவன் இடுப்பிலே உடுத்திருப்பது கந்தல். ஆனால் உள்ளே ஆலயத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஆண்டவனுக்கு பட்டு பீதாம்பரம் எதற்காக? அவன் குடியிருப்பதற்கு இவ்வளவு பெரிய மண்டபம். எதற்காக? அதே நேரத்தில் நீர் பட்டு மெத்தையிலே கொசு வலைக்கு ஊடே துயிலுவதை காண்கிறேன். அவன் உள்ளம் கொதிக்காதா? ஆண்டவன் படைப்பில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு என்ற வினா அவனுக்கு எழாதா? எழுந்தால் உங்களைப் போன்றோரது நிலை என்னவாகும் என்பதை அறிந்து திருந்திடுங்கள், இல்லையேல். . .

1| 2
மேலும்
இசை - அரசியல் - பாட்டு
யேசுவின் வேதனை
பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள்
ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள்