முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கதைகள்
 
இசை - அரசியல் - பாட்டு
Webdunia
- டாக்டர் க. பூரணச்சந்திரன்

இசை மொழி கடந்தது

1840-களில் முதன்முதல் தமிழிசை இயக்கம் உருவானபோது, நிறையப்பேர் அதை எதிர்த்தார்கள். அவர்களது `ஆர்க்யுமென்ட்' இது இசைக்கு பாஷை எதற்கு? `ஸ்ருதி மாதா, லய பிதா' (இசைக்கு ஸ்வரங்களே தாய், தாளமே தந்தை). அப்படியிருக்கும்போது தமிழில் பாடினால் என்ன, தெலுங்கில் பாடினால் என்ன, இந்தியில் பாடினால் என்ன? இதற்கு தமிழிசை இயக்கக்காரர்களும், தமிழிசை இயக்கத்தை ஆதரித்த கல்கி, இராஜாஜி போன்றவர்களும் என்னென்ன வாதங்களை எதிராக வைத்தார்கள் என்பதற்குள் நாம் போகவேண்டாம், ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்போம். சரி, ஐயா, இசைக்கு பாஷை இல்லை என்பதை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். அப்படியானால் தெலுங்கில் தான் பாடுவோம் என்று ஏன் அடம் பிடிக்கிறீர்கள்? தமிழிலும் - அல்லது தமிழ்நாட்டில் தமிழ் முதன்மையான மொழி என்றால், தமிழில் மட்டும் - பாடினால் என்ன? உடனே சொல்லிவிடுவார்கள் - தமிழில் பாட்டுகளே இல்லை என்று. இப்போது இப்படிச் சொல்பவர்களுக்கு ஒரே ஒரு விடை - அண்ணாமலைப் பல்கலைக்கழகம், `தமிழிசைக் களஞ்சியம்' என்ற பெரியலும் `தமிழிசைப் பாடல்கள்' என்ற பெயரிலும் ஏராளமாகப் பாட்டுகளைத் தொகுத்து (பெரும்பாலும் பக்திப்பாட்டுகள்தான் ! தண்டபாணி தேசிகர், சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்கள் பேராசிரியர்களாக இருந்த இடமல்லவா!)

இவையொருபுறம் இருக்கட்டும், இவற்றின் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? பழங்காலத்திலிருந்தே தமிழில் இசை இருந்தது. அதில் சந்தேகம் ஒன்றும் இல்லை. பரிபாட்டுகளும், சிலப்பதிகாரக் கானல்வரி, வேட்டுவரி, குன்றக்குரவை போன்ற பாட்டுகளும் இதற்கு ஏராளமான சான்றுகளை அளித்திருக்கின்றன. தேவார மூவர், நாலாயிர ஆழ்வார் பாட்டுகளில் அக்காலத்தில் வழங்கிய பிரபலமான இராகங்கள் (பழந்தமிழில் `பண்கள்') ஏறத்தாழ 150-க்கும் மேல் கிடைக்கின்றன.

தமிழிசை கர்னாடக இசையான வரலாறு

பழங்காலத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்படுகின்ற யாழ் என்ற இசைக்கருவி (சகோட யாழ், செங்கோட்டி யாழ், மகர யாழ் என்றெல்லாம் அதில் பல்வகை) காணாமலே போயிற்று. சிலர் அது தற்போதைய வீணையாக உருமாறிவிட்டது என்கிறார்கள். இது ஒரு புறமிருக்க, பக்திக்காலம் வரை பிரபலமாக இருந்த தமிழ் இசை, எப்படி கர்நாடக இசையாக மாறியது? பிற்காலப் பாண்டியர்களின் வீழ்ச்சிக்குப் பின்னால், தமிழகம் விஜயநகர ஆட்சிக்குள்ளாயிற்று. சிலகாலம் நேரான விஜயநகர ஆட்சிக்குப் பிறகு அவர்களது பிரதிநிதிகளான நாயக்கர்கள் ஆட்சிக்கு உட்பட்டது. விஜயநகர வம்சம், அரவீடு வம்சம், சாளுவ வம்சம் என்ற தெலுங்கர்களையும் கன்னடர்களையும் ஆட்சியாளர்களாகக் கொண்டது. இது அன்றி செஞ்சி, தஞ்சை போன்ற இடங்களில் மராட்டிய ஆட்சி வேறு. இதற்கும் மேலாக வடதமிழ் நாட்டில் முகலாய ஆட்சியாளர்களின் பிரதிநிதிகளாக உருதுபேசும் `நவாப்பு'களின் ஆட்சி. ஆங்கிலேயர் வந்து ஒன்றுபடுத்தும் வரை ஏறத்தாழ நான்கு நூற்றாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்ற அந்நிய மொழியினரின் ஆட்சி தமிழ் மக்களின் சுதந்திர உணர்வையும், விரத்தையும், அவர்களது கலைகளையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட்டது. தெலுங்கு நாயக்கர்கள் தெலுங்கு இசையையும், கர்நாடக விஜயநகர ஆட்சியாளர்கள் கன்னட இசையையும் ஆதரிப்பதுதானே இயல்பாக நடைபெறக் கூடியது? அதுதான் நடந்தது. வேங்கட மகி, சாரங்கதேவர் போன்ற கன்னட இசையாசிரியர்கள், தமிழ் இசையை `கர்நாடக' இசையாக உருமாற்றி அமைத்தார்கள். அதைக் கற்றுக் கொள்வதிலும் சம்பிரதாயங்களை ஏற்படுத்தினார்கள். சங்கராபரணம், ஹரிகாம்போதி என்று இன்று வழங்கப்படும் இராக அடிப்படையில் தமிழிசை பயிற்றுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை ஒரே சீராக `மாயமாளவ கௌளை' என்னும் ராக அடிப்படையில் பயிற்றுவிக்க ஸ்வரவாணி (சரளி) வரிசைகளெல்லாம் ஏற்படுத்தி, சீர்படுத்தி அமைத்தவர்கள் இவர்களே. இதற்கு அனுசரணையாகக் கீதங்கள், வர்ணங்கள், கீர்த்தனைகள் போன்றவற்றை இயற்றி ஆரம்பித்து வைத்தார் புரந்தரதாசர். இப்படி இவர்களது முயற்சிகளும் இவற்றிற்கு கன்னட தெலுங்க ஆட்சியாளர்களின் ஆதரவும் ஆட்சிக்கு வால்பிடிப்போரின் பயிற்சிகளும் என தமிழிசை முற்றிலும் `கர்நாடக' (கன்னட-தெலுங்கு) இசை ஆகிவிட்டது. இதற்கு ஏற்றார் போல் தெலுங்கு கன்னட பார்ப்பனர்கள் பலர் தமிழகத்தில் அரசின் ஆதரவை ஒட்டிக் குடியேறினர். அந்த வம்சாவளியில் வந்து, திருவையாற்றில் வாழ்ந்து வந்த `தியாகப் பிரம்மம்' தான் ஒரேயடியாகத் தமிழிசையை ஒழித்துக்கட்டி தெலுங்கை மட்டும் வாழ வைத்துப் புண்ணியம் கட்டிக் கொண்டார். முத்துஸ்வாமி தீட்சிதர் சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகள் இயற்றினாலும், ஸ்வாதித் திருநாள் மலையாளத்தில் பாட்டுகள் பாடினாலும், தியாகராஜரின் செல்வாக்கை எவரும் மிஞ்சமுடியாமல் போய்விட்டது. இதற்கிடையில் தான் பல தமிழ்க் கீர்த்தனை முயற்சிகள், இந்து சமயக் கீர்த்தனைகள் மட்டும் ஏன், கிறித்தவ சமய கீர்த்தனைகளும் வேண்டுமே என்று தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் போன்ற சிலர் முயற்சி செய்தார்கள். பிரதாப முதலியார் சரித்திரம் எழுதி நாவல் உலகத்தைத் திறந்துவிட்ட மயூரம் வேதநாயகம் பிள்ளை `சர்வசமயக் கீர்த்தனைகள்' எழுதினார். ஆனால் இவையாவும் பாடுவாரின்றிப் பரணில் கிடக்கின்றன.

இசை வேளாளர்களின் பங்களிப்பு

இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். தமிழிசை பார்ப்பனர்களுக்குரிய இசையாகவே என்றைக்கும் இருந்தது இல்லை. பழங்காலத்திலிருந்து தமிழிசையைக் காப்பாற்றி வந்தவர்கள் இசை வேளாளர்கள், ஓதுவார்கள், தம்பிரான்கள் போன்றவர்கள்தான். ஆனால் பார்ப்பனர்கள் தமிழிசை உலகில் புகுந்தது, தமிழ் மொழியை மட்டுமல்ல தமிழிசையை ஆதியிலிருந்து காப்பாற்றி வளர்த்து வந்த மக்களையும் புறந்தள்ளி விட்டது. இசை வேளாளர்கள், நாதசுரம்-தவில் என்னும் கடினமான கருவிகளுக்கென்றே ஒதுக்கப்பட்டார்கள். `மங்களமாக' அவர்களுக்குத் திருமணப் பந்தலில் மட்டும் இடம் வழங்கப்பட்டுவிட்டது. தஞ்சை நால்வர் எனப்படும் பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேல் ஆகியோர் அறிமுகப்படுத்திய வயலின், கர்நாடகக் கச்சேரிகளுக்கு முக்கியமானதாயிற்று. அதிகமான உழைப்பு தேவைப்படாத வயலின், புல்லாங்குழல், வீணை போன்ற வாத்தியங்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். வாய்ப்பாட்டில் அவர்களுக்கு மூன்று ஸ்தாயிகளிலும் உச்சம்வரை எட்டி மூச்சடக்கிப் பாடமுடியாவில்லை என்றாலும், பிறரை கர்நாடக வாய்ப்பாட்டுப் பக்கமே வரவிடாமல் செய்தார்கள். மதுரையில் பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற இசைப்பள்ளியில் ஒரு கிறிஸ்தவப் பெண் பயிலப் போனபோது `உனக்கும் கர்நாடக இசைக்கும் என்ன சம்பந்தம்? போய்வா' என்று அனுப்பியது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளம். தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், சீர்காழி கோவிந்தராஜன். . . இவர்கள் போன்று தமிழ்ச் சொற்களைத் தெளிவாக உச்சரித்து ஓங்கிய குரலில் பாடுவோரை பலருக்குப் பிடிப்பதேயில்லை.


1| 2
மேலும்
யேசுவின் வேதனை
பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள்
ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள்