முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கதைகள்
 
யேசுவின் வேதனை

கஸான்ஸாகிஸ் இந்திய மரபுகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர். நாராயணனிடம் நாரதர், "உங்கள் மாயா சொரூபம் எப்படிப்பட்டது? என்று கேட்ட கதையை கஸான்ஸாகிஸ் அறிந்திருக்கிறார் என நாவல் காட்டுகிறது.

நாராயணன் "முதலில் ஒரு சொம்பு குடிதண்ணீர் கொண்டுவா. எனக்குத் தாகமாக இருக்கிறது" என்றார். குடிதண்ணீர் தேடிப்போன நாரதர், ஒரு பெண்ணைச் சந்தித்துக் காதலித்துக் கல்யாணம் செய்து குடும்பஸ்தராகிறார். குழந்தை குட்டிகள் எல்லாமாகின்றன. ஆனால் நாராயணின் தாகத்தை அடியோடு மறந்து போகிறார். அப்பொழுது பெருமழை பிடித்து வெள்ளம் வருகிறது. வெள்ளத்தில் எல்லாமே அடிபட்டுப் போகிறது. அப்போது "நாராயணா" என்கிறார் நாரதர். எங்கே குடிதண்ணீர்? என்று பதில் கொடுக்கிறார் நாராயணன். விழிப்படைந்த நாரதர், அதுவரை தாம் வாழ்ந்த நீண்டகால வாழ்க்கை, உண்மையில் ஒரு கணத்திற்குள் - நாராயணன் முன் நின்று பேசிக் கொண்டிருக்கும்போதே நடந்திருக்கிறது என உணர்கிறார். "இதுவே எனது மாயா சொரூபம்" என்கிறார் நாராயணன். இக்கதையைத் தழுவியே கஸான் ஸாகிஸ், தமது "டுயளவ கூநஅயீவயவiடிn டிக ஊhசளைவ" என்ற அற்புத நாவலை படைத்தார் என்று எனக்குத் தோன்றுகிறது.

கஸான்ஸாகிஸ் சித்தரித்த பிரச்னை, மனிதத் தன்மையின் கற்பனைக்கும் தெய்வீகத்தின் தூய்மைக்கும் ஏற்படும் பிரச்னை. இதனைப் புரிந்து கொள்ளவேண்டுமானால், யேசுவை மனிதராகவும் நாம் காணவேண்டும். அவர் சவுக்கடி பட்டதும் சிலுவையில் அறையப்பட்டதும் மனிதராகத்தான். இவற்றை மனித வேதனையுடன்தான் அவர் அனுபவித்தார். கடவுளை நோக்கி அவர் அப்போது கூவியதும் மனிதக் குரலில்தான். அந்த மனிதனே, "இப்படி நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? சுகமாக வாழலாமல்லவா?" என்று நாவலில் சபலப்படுகிறான். இந்தப் பலவீனம் நம் எல்லோருக்குமே உண்டு. மனித உடலின் வடிவில் மட்டுமின்றி மனித மனத்தின் வடிவிலும் நமது பலவீனங்களை ஏற்றுக்கொண்ட யேசுவே, கஸான்ஸாகிஸின் யேசு. இதற்காக கஸான்ஸாகிஸ் அவரது காலத்தில் திருச்சபையினால் ஒதுக்கி வைக்கப்பட்டாலும், போகப் போக அவரது நாவலின் கருத்தம்சம் "தியாலஜி"க்காரர்களுக்கு அர்த்தமுள்ளதாகத் தென்பட்டிருக்கிறது.

இந்திய ஆன்மிகமரபில், தெய்வங்களின் விலைகளை பற்றிய புராணக் கதைகளுக்கு, ஆழ்ந்த அர்த்தங்களை ஏற்றி ஒத்துக் கொள்வதுண்டு. ஆனால் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இதே விதத்தில் யேசுவையும் நபியையும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. மோஹினியாக விஷ்ணுவும், பிக்ஷhடனனாகச் சிவனும் மாறி நடத்திய கூத்தைவிடவா - கஸான் ஸாகிஸ் நாவலில் - யேசு செய்த காரியம் மோசம்!

சிலுவையில் அறையப்பட்டதன் விளைவாகக் கைகளிலும் கால்களிலும் ஆக நான்கு மற்றும் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டதுடன் ஐந்து காயங்களே பைபிளில் குறிப்பிடப்படுகிறது. யேசு தமது சீடர்களுடன் செய்த இறுதி போஜனத்தில் (மத்தேயு - 6:28), தமது உடல் என்று ரொட்டியைப் பகிர்ந்து கொடுத்தபின்பு, மதுக்கிண்ணத்தில் இருக்கும் திராட்சை மதுவைப் பகிர்ந்து அதுவே தமது ரத்தம் என்று கூறுகிறார் யேசு. அது மற்றவர்களுக்காகச் சொரிவதாகவும் கூறுகிறார். தமது உடல் என்று குறிப்பிடுவது, உண்மையில் பூதசரீரமல்ல ; எல்லையற்ற ஆவி (ஆன்மா) தான். இதே அடிப்படையில் தமது ரத்தத்தை மதுவாகக் குறிப்பிடும்போது, மதுக்கிண்ணமே அவரது இருதயத்தின் குறியீடாகிறது. அது உடைந்திருப்பதையே, அதன் ரத்தம் பிறருக்காகச் சொரிவது பற்றி அவர் கூறுவதில் காணலாம்.

"உடைந்த இதயம்" என்பது பிறருக்காக ஆழ்ந்த வருத்தம் கொள்கிற மனோபாவம். "காது உள்ளவர்கள் கேட்கட்டும்" என்று யேசு கூறுகிறார். "கேட்கக் கூடிய காது" என்பதே, உடைந்த இதயத்தைத்தான் குறிப்பதாகப் பைபிள் நிபுணர்கள் கருதுகின்றனர். பிறருக்காக ஆழ்ந்த வருத்தம் கொள்ளக்கூடியவர்களே யேசுவின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ளக்கூடியவர்கள் என்பதுதான் "காது உள்ளவர்கள் கேட்கட்டும்" என்பதன் உட்பொருள். இதுவே, யேசுவின் இறுதி போஜனத்து மதுக்கிண்ணக் குறியீட்டிலும் பிரபலிக்கிறது. அவரது உடைந்த இதயத்தை இன்னொரு உடைந்த இதயம்தான் புரிந்து கொள்ள முடியும்.

இன்று வெகுஜனக் கலாச்சாரத் தளத்தில், உண்மையான ஆன்மீக ஞானம் உணரப்படாமல் இருப்பதால்தான், கஸான் ஸாகிஸின் நாவலைத் தழுவிய நாடகம், சினிமா போன்றவை பல எதிர்ப்புகளுக்கு இலக்காகின்றன. ஆபாசமான உள்ளார்த்தங்களும் மனித உடலின் உன்னதத்தைக் கீழ்மைப்படுத்தி காட்டும் நடனங்களும், ரசித்துத் தள்ளப்படுகின்றன, இந்திய வெகு ஜனத்தினரால். உண்மையில் இது அவர்களது வெகுளித்தனத்தின் விளைவுதான். அவர்களின் வெகுளித்தனத்தை நீக்கிப் பார்வையில் தெளிவு ஏற்படுவதைவிட்டு, வெகுளித்தனத்தைத் திருப்திபடுத்திச் சுரண்டுகிறவர்களே ஆபாசத்தை மறைமுகமாகப் பயன்படுத்துகிறார்கள். எந்தத் திருச்சபைக்காரரும் இதைத் திருத்த முன்வரவில்லை. தங்கள் மத அதிகாரம் ஆடிவிடுமோ என்று மட்டும்தான் அவர்கள் கவனிக்கிறார்கள் போல இருக்கிறது.
1| 2
ஆதாரம் - - ராம் டி. பிரமிள்
மேலும்
பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள்
ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள்