முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கதைகள்
 
யேசுவின் வேதனை
Webdunia
நிக்கோஸ் கஸான்ஸாகிஸ் (NIKOS KAZANTZAKIS) என்ற புகழ் பெற்ற கிரேக்க நாவலாசிரியரால் எழுதப்பட்டது, "யேசுவின் இறுதி மனமயக்கம்" (THE LAST TEMPTATION OF CHRIST) என்ற நாவல். சமீபத்தில் இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ஆங்கிலத் திரைப்படம், மேற்கத்திய நாடுகளில் பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது. சில வருடங்களுக்கு முன் கேரளத்தில் இந்த நாவலைத் தழுவி நிகழ்த்தப்பட்ட, "கிறிஸ்துவின் ஆறாவது திருக்காயம்" (கிறிஸ்துவின்டே ஆறாம் திருமுறிவு) என்ற மலையாள நாடகம், இங்கே பெரும் பிரச்னையை எழுப்பியது ஞாபகமிருக்கலாம் (சல்மான் ருஷ்டியின் "சாத்தானின் புயலைக் கிளப்பியுள்ளதும் இக்கட்டுரையின் சந்தர்ப்பத்தில் கவனத்திற்குரியது) இக்கட்டுரையில் கஸான் ஸாகிஸ்ஸின் நாவல் பற்றிய பிரச்னைகள் விமர்சிக்கப்படுகிறது.

கலைத்துறையில் ஆழமாகவும் நுட்பமாகவும் படைக்கிறவர்கள், வெகுஜனக் கலாச்சாரத்துடனும் மதக்காவலர்களுடனும் மோதும்போது, பல சிக்கல்கள் பிறந்து விடுகின்றன. மதக்காவலர்களுக்கு, "சாமி" என்றால் "சாமி"தான் - "பூதம்" என்றால் "பூதம்"தான். யாராவது கலைஞர்கள் தனக்குள் இருந்து பூதத்தை வெளியே அடித்துவிரட்டும் சாமியைக் காட்டினால், இந்தக் காவலர்களுக்கு எது சாமி - எது பூதம் என்று அடையாளம் தெரிவதில்லை. ஆக மொத்தத்தில் கலைஞரே பூதமாக்கப்பட்டு விடுகிறார்.

கஸான்ஸாகிஸ் தமது நாவல்களுக்காகக் கிரிஸீன் திருச்சபையால் தூஷிக்கப்பட்டவர்; மதப் பிரஷ்டம் செய்யப்பட்டவர். ஆனால் ரத்தப் புற்று நோயால் கஸான்ஸாகிஸ் படுக்கையில் கிடந்தபோது, அவரை மிகக் கௌரவித்த டாக்டர் ஷ்வைட்ஷர் வந்து பார்த்தார். ஆப்பிரிக்காவில் மருத்துவப் பணி புரிந்த ஷ்லைட்ஷர், இந்தியாவில் பணிபுரியும் அன்னை தெரஸாவைப் போன்று திருச்சபையால் மதிக்கப்பட்டவர் - சமாதான நோபல் பரிசையும் பெற்றவர். இதன் பிறகுதான் அங்கே திருச்சபையினருக்குக் கண் திறந்தது. இருந்தும், கஸான்ஸாகிஸின் சடலத்துக்கு மதச் சடங்கு செய்ய, பாதிரி எவரும் முன் வரவில்லை.

"யேசுவின் இறுதி மனமயக்கம்" என்ற கஸான் ஸாகிஸின் நாவலில், யேசுவின் மனித ரீதியான குணங்களும் அவரது தெய்வீக அனுபவங்களும் அருகருகே காட்டப்படுகின்றன. வழிப்பாட்டுக்கு மட்டுமே உரிய தெய்வப் பொம்மையாக அவர் காட்டப்படவில்லை. கஸான்ஸாகிஸ் கம்யூனிஸ்டாக இருந்து, சோவியத் ரஷ்யாவுக்கு அழைக்கப்பட்டு, அங்கே கம்யூனிஸ மோட்சம் எப்படி இருக்கிறது என்று நேரில் கண்டவர். இதன் விளைவாக புத்த மதத்துக்குத் திரும்பியவர். கடுமையான தபசுகளையும் செய்திருக்கிறார் கஸான்ஸாகிஸ். தமது அனுபவங்களையே நாவலில், யேசுவின் ஆத்மானுபவங்களாகவும் காட்டி இருக்கிறார். ஆன்மானுபவத்தில் வேதனை மயமான சுத்திகரிப்பு ஒன்று உண்டு என்ற ரகசியத்தை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்தவர் ஜே. கிருஷ்ணமூர்த்தி. கஸான்ஸாகிஸின் இந்த நாவலில் கூட இந்த ரகசியம் கிருஷ்ணமூர்த்தி இதுபற்றி எழுதுமுன்பே வெளிப்பட்டிருக்கிறது. யேசு அறிமுகமாவதே இந்த அனுபவத்துடன்தான். இது நாவலின் தகுதிக்கே சான்றாகும். இந்தச் சுத்திகரிப்பு பற்றி கிறிஸ்துவ திருச்சபை சார்ந்தவர்கள் உட்பட எவரும் இதற்கு முன் குறிப்பிட்டதில்லை.

யேசுவைக் குருட்டுத்தனமாகப் பின்பற்றித் தலையாட்டிக் கொண்டிருக்கும் மற்றய சீடர்களிலிருந்து வித்யாசமானவராகவே யூதாஸை கஸான்ஸாகிஸ் சித்தரிக்கிறார். இதற்கும் ஆதாரம் இல்லாமல் இல்லை. முப்பது வெள்ளிக் காசுகளுக்காக யூதாஸ், தானே நேரில் ஒரு அற்புத மனிதராகக் கண்ட யேசுவைக் காட்டிக்கொடுத்திருப்பானா என்ற பிரச்னை கிறிஸ்தவ மதத்தத்துவமான "தியாலஜி"யில் விசாரிக்கப்பட்டுள்ளது. ரோமசாம்ராஜ்யத்தின் பிடியில் இருந்த யூதர்களை விடுவிக்க யேசு தமது தெய்வீக சக்தியுடன் வெளிப்பட்டு இன்னொரு மோஸஸ் ஆக ரோமர்களை எதிர்க்க வேண்டும் - மோஸஸ், எகிப்தியர்களை தெய்வீக அற்புதங்கள் மூலம் கலங்க அடித்ததுபோல், யேசுவும் செய்ய வேண்டும் என யூதாஸ் நினைத்தான் யூதர்கள் எதிர்பார்த்திருந்த "ரட்சகர்", மோஸஸைப் போன்ற அரசியல் ரட்சகரைத்தான். யேசுவுக்கு அரசியல்தனமான விடுதலை முக்யமில்லை. எனவே, ரோமர்களிடம் அவர் மாட்டிக் கொண்டால், மோஸஸாக மாறுவார் என நினைத்தான் யூதாஸ். இதற்காகவே அவன் யேசுவைக் காட்டிக் கொடுத்தான் என்ற கோட்பாடு உண்டு. சிலுவையில் அறையப்பட்ட பின்பு கூட, அவர் மோஸஸ்போலக் கிளம்பாமல், முந்திய யேசுவாகவே இருந்ததினால், யூதாஸ் தற்கொலை செய்துகொண்டான்.

யூதாஸைப் பற்றி உள்ள இந்தப் பார்வையைச் சற்றே மாற்றிய கஸான்ஸாகிஸ், யேசுவின் தெய்வீகக் கடமையை அச்சுறுத்தித் தெரிவிப்பவனாக அவனைச் சித்தரிக்கிறார். சிலுவையில் அறையப்படுகிற வரைக்கும் தமது தெய்வீகக் கடமை மனிதகுலத்திற்காகப் பலியாவதுதான் என யேசு உணர்ந்து நடந்து கொள்கிறார். சிலுவையில் அறையப்பட்ட பின்பு "ஏலி, ஏலி, லாமாசபக்தாமி?" (ஆண்டவரே, ஆண்டவரே, என்னை ஏன் கைவிட்டீர்) என்று யேசு கூவியதாகப் புதிய ஏற்பாடு கூறுகிறது. நாவலில் யேசு, முதல் தடவை "ஏலி" என்று கூவி, அடுத்த "ஏலி" கூவுமுன் ஒருகணம் மனமயக்கத்துக்கு ஆட்படுகிறார். இதுதான் அவரது Last Temptation அந்த ஒரு விநாடிக்குள் -

மேரி மக்தலேனாவை யேசு காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்; ஒழுங்காகக் குடும்பம் நடத்துகிறார்; சம்பாதிக்கிறார்; மதச் சடங்குகளைச் செய்கிறார். அதாவது மதங்களை சம்பிரதாயமாகப் பின்பற்றுகிறவர்களுடைய உணர்வற்ற - ஆழமற்றவாழ்வை நடத்திக் கிழவராகிறார். ஆனால் மனிதகுலத்தையும் அதற்காகத் தாம் அர்ப்பணிக்கப்பட்டவர் என்பதையும் மறந்து போகிறார். தலையாட்டிச் சீடர்களும் தலைகளை ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தோன்றுகிறான் யூதாஸ். அவன் கண்களில் நெருப்புப்பொறி பறக்கிறது. அவனை கண்டதும்தான் யேசுவுக்குத் தமது கடமை மின்னல்போல் வந்து அடிக்கிறது. அடுத்த விநாடி தொடர்கிறது. இரண்டாவது தடவையாக அவர் ஆண்டவனை அழைக்கும் கூவல். அதாவது நாவலின் முக்கியமான பகுதி, ஒரு விநாடிக்குள் அடங்கிய நீண்டகால வாழ்க்கையின் விபரமான சித்தரிப்பு.

1| 2
ஆதாரம் - - ராம் டி. பிரமிள்
மேலும்
பின்நவீனத்துவம் - சில அடிப்படைகள்
ஹாலிவுட் திரைப்படங்களின் இனவாத பிம்பங்கள்