காடு களைந்தோம் - நல்ல கழனி திருத்தியும் உழவு புரிந்தும் நாடுகள் செய்தோம் - அங்கு நாற்றிசை வீதிகள் தோற்றவும் செய்தோம் வீடுகள் கண்டோம் - அங்கு வேண்டிய பண்டங்கள் ஈண்டிடச் செய்தோம் பாடுகள் பட்டோ ம் - புவி பதமுறவே நாங்கள் நிதமும் உழைத்தோம்.
மலையைப் பிளந்தோம் - புவி வாழவென் றேகடல் ஆழமும் தூர்த்தோம் அலைகடல் மீதில் - பல் லாயிரங் கப்பல்கள் போய்வரச் செய்தோம் பலதொல் லையுற்றோம் - யாம் பாதாளம் சென்று பசும்பொன் எடுத்தோம் உலையில் இரும்பை - யாம் உருக்கிப்பல் யந்திரம் பெருக்கியுந் தந்தோம்.
ஆடைகள் நெய்தோம் - பெரும் ஆற்றை வளைத்துநெல் நாற்றுக்கள் நட்டோ ம்; கூடை கலங்கள் - முதல் கோபுரம் நற்சுதை வேலைகள் செய்தோம் கோடையைக் காக்க - யாம் குடையளித் தோம்நல்ல நடையன்கள் செய்தோம் தேடிய பண்டம் - இந்தச் செகத்தில் நிறைந்திட முகத்தெதிர் வைத்தோம்.
வாழ்வுக் கொவ்வாத - இந்த வையத்தில் இந்நிலை எய்தப் புரிந்தோம் ஆழ்கடல் காடு - மலை அத்தனை யிற்பல சத்தை யெடுத்தோம். ஈழை அசுத்தம் - குப்பை இலைஎன்ன வேஎங்கள் தலையிற் சுமந்தோம். சூழக் கிடந்தோம் - புவித் தொழிலாள ராம்எங்கள் நிலைமையைக் கேளீர்.
கந்தை யணிந்தோம் - இரு கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம். மொந்தையிற் கூழைப் - பலர் மொய்த்துக் குடித்துப் பசித்துக் கிடந்தோம் சந்தையில் மாடாய் - யாம் சந்ததம் தங்கிட வீடுமில் லாமல் சிந்தை மெலிந்தோம் - எங்கள் சேவைக் கெலாம்இது செய்நன்றி தானோ?
மதத்தவன் தலைவீர்! - இந்த மண்ணை வளைத்துள்ள அண்ணாத்தை மாரே! குதர்க்கம் விளைத்தே - பெருங் கொள்ளை யடித்திட்ட கோடி சுரர்காள்! வதக்கிப் பிழிந்தே - சொத்தை வடிகட்டி எம்மைத் துடிக்க விட்டீரே! நிதியின் பெருக்கம் - விளை நிலமுற்றும் உங்கள் வசம்பண்ணி விட்டீர்!
செப்புதல் கேட்பீர்! - இந்தச் செகத்தொழி லாளர்கள் மிகப்பலர் ஆதலின், கப்பல் களாக - இனித் தொழும்பர்க ளாக மதித்திட வேண்டாம்! இப்பொழு தேநீர் - பொது இன்பம் விளைந்திட உங்களின் சொத்தை ஒப்ப டைப்பீரே - எங்கள் உடலில் இரத்தம் கொதிப்பேறு முன்பே ஒப்படைப்பீரே!
|