முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > இலக்கியம் > கவிதைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மானிட சக்தி!
- பாரதிதாசன்

மானிடத் தன்மையைக் கொண்டு - பலர்
வையத்தை ஆள்வது நாம்கண்ட துண்டு
மானிடத் தன்மையை நம்பி - அதன்
வன்மையி னாற்புவி வாழ்வுகொள் தம்பி!
"மானிடம்" என்றொரு வாளும் - அதை
வசத்தில் அடைந்திட்ட உன்இரு தோளும்
வானும் வசப்பட வைக்கும் - இதில்
வைத்திடும் நம்பிக்கை, வாழ்வைப் பெருக்கும்
மானிடத் தன்மையைக்...

மானிடன் வாழ்ந்த வரைக்கும் - இந்த
வையத்திலே அவன் செய்த வரைக்கும்
மானிடத் தன்மைக்கு வேறாய் - ஒரு
வல்லமை கேட்டிருந்தால் அதைக் கூறாய்!
மானிடம் என்பது புல்லோ? - அன்றி
மரக்கட்டை யைக்குறித் திடவந்த சொல்லோ?
கானிடை வாழ்ந்ததும் உண்டு - பின்பு
கடலை வசப்படச் செய்ததும் அதுதான்!
மானிடத் தன்மையைக்...

மானிடம் போற்ற மறுக்கும் - ஒரு
மானிடன் தன்னைத்தன் உயிரும் வெறுக்கும்;
மானிடம் என்பது குன்று - தனில்
வாய்ந்த சமத்துவ உச்சியில் நின்று
மானிடருக் கினி தாக - இங்கு
வாய்த்த பகுத்தறி வாம்விழி யாலே
வான்திசை எங்கணும் நீபார்! - வாழ்வின்
வல்லமை யுமானிடத் தன்மைருஎன் றதேர்!
மானிடத் தன்மையைக்...
மேலும்
முன்னேறு!
அது குழந்தை
மாயமாய் நீளும் பாதை
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!
இருப்பு
தீபாராதனை