முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
மரம்போல்வர்
-நோயல் ஜோசப் இருதயராஜ்
Webdunia
Noyal Josap Irudhayaraj
Webdunia
பகல் வெளிச்சத்தில் பச்சையச் செழிப்பால்
துர்காற்றை உணவுப் பண்டங்கள் ஆக்கித்
தர்மப் பிரபுத்துவம் செய்தும்
உயிர் மூச்சாய்ச் சுழற்றியும்
பெயர் நாட்டுவர்.

இரவில் துர்காற்றைப் பரப்புவர்;
துதிமாரியில் சிலிர்ப்படைவர்;
விமர்சனத் தகிப்பில் நரம்பு சுருங்கிச்
சாயம் திரிந்த இலை சிந்துவர்;
அணில்கள், பறவைகள், வழிஞரை
மட்டும் இல்லாமல்
பச்சோந்திகள், பாம்புகள், பல்லிகள், அட்டைகள்
குரங்குகள், மரநாய்கள், சிறுத்தைகளையும்
ஒளித்துக் காப்பர்.

மாடுகள் உரசி
முட்டித் தேய்த்துச்
சொறிந்து கொள்ளக் காட்டி நிற்பர்;
இடி மழைக்குத் தம்மிடம் நம்பி ஒதுக்கியவர்
வெந்து கருகி
உயிரிழக்க உறுப்பிழக்க விடுவர்.

விவரமின்றி நெருங்குவோரை
ஆயிரக் கைகளால் வளைத்து
இறுக்கி நொறுக்கி உண்ணும்
அசுரம் செய்வர்;
தவறிப் போய் மனையருகே விட்டால்
சுவர் விரிசல் கொள்ள
கால்கோள் குலையக்
குடிகெடுப்பர்.

கால்களையும் கைகளையும்
விரசமாய்ப்
பரப்பிக் கொண்டு
கோடியும் கவர்த்தும்
தடித்தனமாய் நெடுநெட்டையாய்க்
கொழுகொழித்து
ஏதேச்சைச் சுதர்ம அராஜகத்தில்
பெயர்க்கும், ஒடிக்கும், தூற்றம்
சந்தர்ப சிதாகாசக் காற்றின்
ஒடுக்கல்களுக்கு ஒத்து
மேனி வளைத்துப்
பரட்டை விரித்தாடிக்
கொம்பர் கொடியரோடு
சுசாதீயக் கூட்டுக்களியில் பின்னித்
தம் கசிவுகள், உதிர்வுகள், வெம்பல்களைச்
சுயமோகத்தில்
சப்புக் கொட்டி உட்கொண்டு
தன்னிறைவின் லகரியில்
தலைபுதைத்துக் கொள்வர்
மேகங்களிடை.

கவிஞரைப் பற்றி...

நோயல் ஜோசப் இருதயராஜ் திருச்சியில் பிறந்து பெரும்பாலும் அந்நகரிலேயே வாழ்ந்து வருபவர். Fulbright - Hays கல்விக்கொடை பெற்று நியூயார்க் பல்கலையில் இலக்கியத்தில் கூடுதல் எம்.ஏ. பட்டம் பெற்றவர். சென்னை பல்கலையில் அமெரிக்கப் பின்நவீனத்துவ கவிதை ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.

உங்களது படைப்புகளை அனுப்புங்கள்

உங்களை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிவியுங்கள். மின்னஞ்சலில் அனுப்ப ayyanathan@webdunia.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். இல்லையெனில் தபாலில் எங்கள் அலுவலக முகவரிக்கும் அனுப்பலாம்.
ஆதாரம் - மறுமொழி
மேலும்
ஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்!
மகாகவி பாரதியார் 125வது ஆண்டு விழா கவிதை, கட்டுரைப் போட்டிகள்
உலக ஒற்றுமை
வினயமாய்
புதிய இசையின் பதற்றம்
வெறுமை