முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
செடியின் துயரம்
Webdunia
பலநூறு மொக்குகள் மலர
புன்னகையுடன் பேசத் தொடங்கியது செடி
முந்திக் கொண்ட ஒவ்வொரு மலரும்
முணுமுணுத்தது தனித்தனி மொழியில்
தானாகக் கண்டறிந்து சேர
வழிகேட்டது
கூந்தலுக்கும் கோயிலுக்கும்
தோட்டத்தைச் சுற்றி
இலைகளாய்ச் சிதறின
சொல்சொல் என
அவை முன்வைத்த வேண்டுகோள்கள்
ஆளற்ற வெளியில் பரிதவிக்கும்
பார்வையற்றவர்களென
காற்றின் திசைகளில் விடைவேண்டி
கைதுழாவி நடுங்கிக் களைத்தது
காலம் சற்றே கடந்தாலும்
ஒப்பந்தப்படியும்
உரிமைப்படியும்
பறித்தெடுத்தன பூக்காரனின் விரல்கள்
போகுமிடம் தெரியாத
இழப்பின் வலியில்
கிளைகழற்றிக் குமுறியது செடி

நாலுவேலி நிலம்

இன்றைய புறநகர்
அன்றைய வயல்வெளியாய்
விரிந்து கிடந்த நாட்களில்
விளையாடிக் களித்தவன் நான்
ஏரிப் பாசனத்து நீரை
இரவு முழுக்கக் காவல்காத்து
மடைமாற்றிப் பயிர் வளர்த்தவன் நான்
தவளைச் சத்தத்திலும்
நிலாசொன்ன கதைகளை
நின்று கேட்டவன்
கதிர்முற்றிக் கனிந்த காலத்தில்
பனிக்குச் சாக்குப்பை போர்த்தி
காவல் காத்ததும் நானே
உழைக்கும் மிஞ்சாத கணக்கில்
முதுகில் கவிந்த சுமை தாளாது
மனம் வெதும்பிப் போனேன்
அவரசரதுக்கும் அவசியத்துக்கும்
துண்டுதுண்டாக விற்றுத் தின்றதில்
பாதியை இழந்தேன்
மீதியைத் தொலைத்து
அதிர்ஷ்டமானைத் துரத்தியதும்
நகர்வனத்தில் சிறைப்பட்டதும்
எல்லாருக்கும் தெரிந்த கதை
இறந்த காலத்தில்
இழந்த செல்வத்தின்
நினைவுகளை அசைபோட்டபடியும்
நமக்கும் இருந்ததப்பா
நாலுவேலி நிலம் என்று
பேரப்பிள்ளைகளிடம் விவரித்தபடியும்
வீட்டுத் தொலைக்காட்சியில்
வயலும் வாழ்வும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மேலும்
மூன்று கற்கள்
பத்திரிகை
பூக்கள்
கவிதைகள் : ஹம்சத்வனி
கவிதைகள் : நாஞ்சில் நாடன்