முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  இலக்கியம்  கவிதைகள்
 
பூக்கள்
Webdunia
பூக்கள்

எப்படி அது நடக்கப் போயிற்று
ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முறை
சுமுகமாய் இருந்தது
ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய்
ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய்
ரொம்பவும் நேசத்துடனே

இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறது
இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய்
பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்லை
அப்படியே பார்த்துக் கொண்டாலும்
பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய்
முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோக

கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாது
கோபம் பழைய கணக்குகளைப் போடும்
போன மாதம் நான் என்ன பேசினேன்
அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தது
குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும்
அப்புறம் வழியே தெரியாமல் போகும்

ஆனாலும் எனக்கு நம்பிக்கை இன்னமும் இருக்கிறது

சத்தமே போடாமல் கண்களை மூடிக்கொண்டு
கொஞ்சம் பொறுமையாய் இருந்தோமானால்
காலம் எல்லாவற்றையும் சரிசெய்து விடும்
இலைகள் துளிர்த்துப் பசுமையாகி
பூக்கள் மறுபடியும் பூக்கும் அதே இனிய வாசனையோடு

காலை மணி ஆறு

எதிர் வீடு தூங்கும் போது
படிகளில் கால் பரப்பி விழித்திருந்து
தெருப் பெருக்கித் தண்ணீர் தெளிக்க
ஒதுங்கியிருந்து வழிவிட்டு
வரப்போகும் சாதத்தித்ற்கு
வால் குழைத்துக் காத்திருக்கும் நாய்

பக்கத்துத் திண்ணையில் சத்தமாய்ப்
பேசிக் கொள்ளும் இரண்டு
சிட்டுக்குருவிகள்

உடல் சிலிர்த்து தலை அசைத்து
குப்பைக் கிளறித் தீனி
தேடிடும் செங்கல் நிறப்பசு

தினசரியைப் பிரித்து
எஙோ நடக்கும் கொலைகளில்
ஆழ்ந்து போகும் நான்

ஆதாரம் - கவிதைகள்: ஆர்.ராஜகோபாலன்