எட்வர்ட் சயீத் ஒரு பாலஸ்தீனர்; விமர்சகர்; எழுத்தாளர். வாழ்வின் பெரும் பகுதியை ஐரோப்பா, அமெரிக்காவில் ஆசிரியப் பணியில் கழித்தவர். தற்போது நியூயார்க்கில் கொலம்பியா, பல்கலைக்கழகத்தில் இலக்கியப் பேராசிரியர். இவரது படைப்புகளில் சில: ORIENTALISM : COVERING ISLAM; THE QUESTION OF PALASTINE AND THE WORLD; THE TEXT AND THE CRITIC.
இந்த நேர்காணல் 1991-ம் ஆண்டு டப்ளினில் நடந்தது.
ரிச்சர்ட் கீர்னி : நீங்கள் ஐரோப்பியர் அல்ல. ஐரோப்பிய மரபு என்று குறிப்பிடும்படியான மரபு எதுவும் உள்ளதாக நீங்கள் கருதுகின்றீர்களா?
எட்வர்ட் சயீத் : இந்த விசயங்கள் ஐரோப்பிய முத்திரையைக் கொண்டவை என்று இனம் பிரித்துக் காட்டக்கூடிய அனுபவங்கள். அரசுகள், நாடுகள், மரபுகள் உள்ளன என்ற அர்த்தத்தில் மட்டுமே ஐரோப்பிய மரபு என்பது குறித்து பேச முடியும் என்று கருதுகிறேன். இக்கேள்வியை ஐரோப்பாவிற்கு வெளியில் உள்ள உலகத்தை தவிர்த்து விட்டுப் பார்க்கக் கூடாது என்றும் நினைக்கிறேன். அல்ஜீரியச் சூழலில் இதற்கு "ஒருவரின் இருத்தலுக்கு மற்றவர் பங்களிக்கும் விதத்திலான எதிரிகள்" என்ற சொல்லாடல் உள்ளது. ஐரோப்பாவிற்கும், பிறவற்றிற்கும் இடையில் பரஸ்பர உறவு உள்ளது. தன்னைப் "புனிதமாக" ஆக்கிக் கொள்ளும் முயற்சியில் தனக்கும் பிறருக்குமான தொடர்புகளையும் பிணைப்புகளையும் ஐரோப்பாவால் துண்டித்துக் கொண்டு விட முடியாது. இப்பிரச்சனை ஐரோப்பாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது.
ரி.கீ. : இன்றைய ஐரோப்பிய "அறிவு ஜீவிகள்" பற்றிக் கூறுங்களேன்.
எ.ச. : "அறிவு ஜீவி" என்பவர் தன் வேலைக்குரிய சன்மானம் பெறும் தொழில் ஒன்றைச் செய்யக்கூடியவர் (யீசடிகநளளiடியேட) என்ற கருத்து உள்ளது. இதனால் ஐரோப்பா, அமெரிக்காவில் அறிவு ஜீவிகள் அதிகார மையங்களை நோக்கி தன்னிச்சையாக ஈர்க்கப்படும் நிலை உள்ளது. இந்நாடுகளில் உள்ள அறிவு ஜீவிகள் தங்களை கருத்து உருவாக்குபவராக, கொள்கை உருவாக்குபவராக கருதிக் கொள்ளுகின்றனர்; கொள்கை விளக்கமளிப்பதை, கொள்கை உருவாக்கம் செய்வதைத் தங்களின் பணியாகக் கருதிக் கொள்கின்றனர். பிரக்ஞையை உயர்த்துவது, நெருக்கடிகளை, சிக்கல்களை அறிந்து கொள்வது, தன் சமூகத்திற்கான பொறுப்பை ஏற்பது போன்றவை அறிவு ஜீவியின் அடிப்படையான குணாம்சங்களாகக் கருதுகிறேன். இவற்றையே அறிவு ஜீவியின் பங்கு என்கிறேன். இது நிபுணத்துவம் சாராத பணியாகும். பல்வேறு துறைகளோடும் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் அவர் பங்காற்ற வேண்டியுள்ளது. தொழில் ரீதியிலான சொல்லாடல் குறித்து நமக்குத் தெரியும். இச் சொல்லாடல் புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு சொல்லாடலாக ஆகிவிட்டது. இது குறித்து அறிமுகமானவர்களிடம் மட்டுமே பேசத்தகுந்ததாய், எவ்வித எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்ளக்கூடிய மனநிலையைப் பிறரிடம் ஏற்படுத்தி இறுதியில் பேசுபவரது நிலையை உயர்த்திக் கொள்ள வகை செய்யக் கூடியதாக இச்சொல்லாடல் உள்ளது. இதைக் கடுமையாக வெறுக்கிறேன். ஏனெனில் சமூகத்தில் இரண்டுவகை மனிதர்கள் உள்ளனர் என்று எனக்குப்படுகிறது. ஒருவர் சமூக நிகழ்வுகளை அதன் போக்கிலேயே நீடிக்கச் செய்பவர். மற்றவர் அறிவு ஜீவிகள். இந்த அறிவு ஜீவிகள் வித்தியாசகங்களையும் மாற்றங்களையும் தூண்டக் கூடியவர்.
ரி.கீ. : ஆக, சககுடிமகன் குறித்து அறிவு ஜீவிக்கு இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்புணர்வை வலியுறுத்துகின்றீர்களா?
எ.ச. : ஆம், தார்மீகப் பொறுப்பு மிக அத்தியாவசியமானது.
ரி.கீ. : உலகைக் குழப்புவதாக அல்லது அசுத்தப்படுத்துவதாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்வீர்களா?
எ.ச. : அப்படியே இருக்கட்டுமே. நான் ஒரு பாலஸ்தீனன். பாலஸ்தீன தேசிய சமூகத்துடன் நான் பிணைக்கப்பட்டுள்ளேன் என்ற உணர்வு எனக்கு மிக முக்கியமானது. இப்பிணைப்பு பிறப்பினால் வந்தது என்ற போதிலும், பாலஸ்தீனப் பிரச்சினைக்கான காரணம் பரந்துபட்டதாக உள்ளது. இப்பிரச்சினை வெறுமனே தேசிய இனப்பிரச்சினை மட்டுமல்ல. அது, அராபியர், யூதர், அசிரீயர், பாபிலோனியர் உள்ளிட்ட செமிட்டிக் இனத்திற்கு எதிரான கலாச்சாரப் பிரச்சினையையும் உள்ளடக்கியது.
செமிட்டிக் இனத்திற்கு எதிரான ஐரோப்பிய பார்வையின் வாரிசுகளாக ஆக்கப்பட்டவர்கள் நாங்கள். அதாவது பலிகடாவாக ஆக்கப்பட்டவர்களின் பலிகடாக்கள் நாங்கள் - நீங்கள் விரும்பும் வார்த்தைகளில் கூறுவதானால். இப்பிரச்சினை மிகவும் சிக்கலானது. ஆனாலும், ஒரு தேசிய சமூகத்துடன் அல்லது ஒரு சமூகத்துடன் (அது ஒரு தேசியமாக இல்லாத போதிலும்) கொண்டுள்ள ஏதாவதொரு வகையான தொடர்பானது ஒருவரை நேர்மையானவராக நீடிக்கச் செய்கிறது என்றே கருதுகிறேன்.
|