இந்தியாவின் மூன்றாவது பிரதமராகப் பொறுப்பேற்ற - இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்று பெருமையும் பெற்ற -இந்திரா காந்தியின் 25ஆவது நினைவு தினம் இன்று.
‘இந்திராதான் இந்தியா, இந்தியா என்றால் இந்திரா’ என்று காங்கிரஸ்காரர்களால் (இந்த முழக்கத்தை கோத்துக் கொடுத்தது இரஷ்யாவின் உளவு அமைப்பு என்று கூறப்பட்டது) பெருமையாக முழங்கப்பட்டவர். அதே நேரத்தில் இந்தியாவில் குடும்ப ஆட்சியை நிலைப்படுத்தியது மட்டுமின்றி, பாரம்பரிய பெருமைமிக்க காங்கிரஸ் கட்சியை தனது அரசியல் ‘நலனிற்காக’ உடைத்து, ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கியவர், தன்னை காப்பாற்றிக் கொள்ள அவசர நிலை பிரகடனம் செய்து, இந்தியாவின் ஜனநாயக அரசியலிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியவர் என்று மக்களால் மதிக்கப்பட்ட மாபெரும் தலைவர்களான பெருந் தலைவர் காமராசர், லோக் நாயக் ஜெயப் பிரகாஷ் நாராயணன், அசோக் மேத்தா, நிஜலிங்கப்பா, மொரார்ஜி தேசாய் ஆகியோரால் குற்றம் சாட்டப்பட்டவர் இந்திரா காந்தி.
மன்னர் மானியங்களை ஒழித்து, தனியார் வங்கிகளை அரசுடமையாக்கி, பொதுத் துறையைப் பலப்படுத்தி, இராணுவ பலத்தை அதிகரித்து, விவசாய உற்பத்தியை பெருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை தந்து நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு வேகமான திருப்பு முனையை ஏற்படுத்தியவர் என்று பொருளாதார நிபுணர்களால் பாராட்டப்பெற்றவர் இந்திரா காந்தி.
இந்தியாவைப் போன்றதொரு பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக 18 ஆண்டுக் காலம் தலைமைப் பொறுப்பேற்று ஆண்ட ஒரு தலைவரி்ன் மீது இப்படிப்பட்ட புகழ் மாலைகளும், பாராட்டுதல்களும் அதே நேரத்தில் கடுமையான - ஆனால் நேர்மையான - எதிர்ப்பும் இருந்துள்ளது. ஆயினும் மறுக்க முடியாத ஒன்று: இந்திரா காந்தி இந்தியாவின் வலிமையான அடையாளமாகத் திகழ்ந்தார் என்பதே.
WD
சுதந்திரம் பெற்ற பாரத நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பேற்ற நேரு 1964ஆம் ஆண்டு மறைவும் வரை, 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது இந்தியா ஒரு சமாதானத்தை விரும்பும், சர்வதேச அமைதிக்காக பாடுபடும், அடிமை விலங்கொடித்து விடுதலைப் பெறும் நாடுகளின் ஆதரவு நாடாகப் பெருமையாக அடையாளப்படுத்தப்பட்டது.
உலகத்தின் பெரும் பெருளாதார, இராணுவ வல்லமைப் பெற்ற நாடுகள் அனைத்தும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பிலும், சோவியத் ஒன்றியத்தின் தலைமையிலான வார்சா உடன்படிக்கை நாடுகள் அணியிலும் அணி வகுத்து நின்றபோது, இரண்டு அணிகளையும் சேராமல், அதே நேரத்தில் சர்வதேச அமைதி காக்கவும், மூன்றாம் உலக நாடுகளின் உரிமைகள் மற்றும் நலனைப் பேணவும் அணி சேரா அமைப்பை, யுகோஸ்லாவிய அதிபர் ஜெனரல் மார்ஷல் டிட்டோ, எகிப்து அதிபர் நாசர் ஆகியோருடன் இணைந்து உருவாக்கி உலக அரசியலில் ஒரு நடுப்பாதையை ஏற்படுத்தினார் பிரதமர் நேரு.