நாடக வித்தகர் ஆர். எஸ். மனோகர் நடித்து நாடக உலகில் மிகப் பெரிய எழுச்சியையும், இதிகாச நம்பிக்கையாளர்களிடையே பெரும் சர்ச்சையையும் உருவாக்கிய இலங்கேஸ்வரன் நாடகம், சென்னை சபாக்களில் மறுவலம் வந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேடை நாடகத்தில் ஆர்.எஸ். மனோகர் கையாண்ட நவீன யுக்திகள், நாடகக் கலையை அதன் சிகரங்களை எட்டச் செய்தது மட்டுமின்றி, திரைப்படங்களை விட அதிக கட்டணத்தில் காணத் தகுதிபெற்றதாக தனது நாடகங்களை மாற்றியது. புராண, இதிகாசங்களில் கூறப்பட்ட கற்பனைகளுக்கும் உருவம் கொடுத்து, உயிரூட்டி காண்போரைத் திகைக்கச் செய்தார் மனோகர்.
1970 ஆம் ஆண்டுகளில் மனோகரின் நாடகங்களைப் பார்த்தவர்கள் அதுவே ஒரு பெரும் பேறு என்பதுபோல் பேசுவார்கள். மேடையில் மழை பெய்யும், வாளால் வெட்டப்பட்ட தலை துண்டாக எகிறிச் சென்று விழும், புஷ்பக விமானம் மேடையிலேயே பறந்து கடக்கும். அன்றைக்கு இருந்த தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தி இப்படிப் பல அற்புதங்களை நிகழ்த்தி ஏகத்திற்கு மக்களை கிரங்கடித்தார் மனோகர்.
இப்படிப்பட்ட சாகசக் காட்சிகள் அதிகம் இடம்பெற்றதில் மிகவும் பேசப்பட்டதுதான் இலங்கேஸ்வரன் நாடகம். இந்நாடகம் பிரம்மாண்டமான தந்திரக் காட்சிகள், அரங்க அமைப்புகளுடன் அரங்கேற்றப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது.
சீதையை இராவணின் மகளாக கூறி எழுத்தப்பட்ட இராமயணத்தை அடிப்படையாகக் கொண்டு - தனது மகளின் துயரத்தைக் கண்டு துடிப்பவனாகவும், அவள் காட்டில் துன்பமுறுவதை சகியாமலேயே இலங்கைக்கு இராவணன் கடத்தி வந்ததாகவும் சித்தரிக்கும் கதையை அற்புதமான நாடகமாக்கினார் மனோகர்.
இதனால் அந்நாளில் மிகப் பெரிய சர்ச்சை எழுந்தது. இராவணனை நல்லவனாக சித்தரிக்கும் இந்நாடகத்திற்கு மூதறிஞர் இராஜாஜி எதிர்ப்பு தெரிவித்ததாகவும், ஆனால் அதனை ஏற்காமல் அரகேற்றப்பட்ட நாடகத்தை, மனோகரின் அழைப்பிற்கிணங்க வந்து பார்த்த இராஜாஜி பாராட்டியதாகவும் கூறப்பட்டதுண்டு. இராமயணத்தை மிகவும் எதிர்த்த தந்தை பெரியார் இந்நாடகத்தைக் கண்டு பாராட்டியதாகவும் சொல்வார்கள். பேரரிஞ்சர் அண்ணா, ம.பொ.சி., பொதுவுடைமைத் தலைவர் ஜீவா ஆகியோரும் பார்த்து பாராட்டியுள்ளனர்.
1,000 தடவைக்குமேல் அரகேற்றப்பட்ட அந்நாடகத்தை - மனோகரின் மறைவுக்குப் பிறகு அவருடைய நாடகக் குழுவினர் மீண்டும் அரகேற்ற முற்பட்டபோது, அன்று மனோகர் இருந்து நடத்தியதைப் போன்று இன்று இவர்களால் நடத்த முடியுமா என்ற ஆதங்கத்துடனான கேள்வி எழுந்தது.
|