பிளேட்டோ இரு உலகங்களையும் காண்கிறார். ஒன்று வெறும் தோற்றங்களின் உலகம், மாறிக்கொண்டிருக்கிற, அழிந்து விடுகின்றவற்றைக் கொணட உலகம். மற்றொன்று உண்மையான உலகம். சாரங்களின் உலகம். அதிலிருந்தே நிலையற்ற உலகத்திலுள்ளவை தம் தோற்றங்களைப் பெறுகின்றன. ஒரு உலகம், அழிகின்ற உடலின் உலகம். மற்றது, அழிவற்ற ஆன்மாவின் உலகம். சாராம்ச உலகினை அறிந்துகொண்டால், இந்த உலகின் நிலையற்ற வாழ்க்கை பற்றிய அச்சத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம். `தூய அறிவைப் போற்று' `அறிவே துணை' - இவையே பிளேட்டோவின் முழக்கங்கள். பிளேட்டோ போற்றும் அறிவு, நாம் சாதாரணமாகப் புரிந்துகொள்ளும் அறிவைக் காட்டிலும் மாறுபட்டது. புலன்களால் பெறப்படும் அறிவைக்காட்டிலும் உயர்ந்தது.
இறவாமை பற்றிய உரையாடலில், பிளேட்டோ தன் கருத்துகளைக் `குதிரைகள் பூட்டிய தேர்' என்ற படிமத்தின் வழியே விளக்குகிறார். தேர்ப்பாகன்தான் அறிவு. வெண் குதிரைகளும் கருப்புக் குதிரைகளும் தேரை இழுக்கின்றனர். இவற்றின் கடிவாளக் கயிறுகள் பாகனான அறிவின் கரங்களில் உள்ளன. மனிதனின் ஆன்மீக, உணர்ச்சிப் பகுதிகளின் குறியீடாக வெண்குதிரைகள் இருக்கின்றன. இவை அறிவின் ஆணைக்கு எளிதில் கட்டுப்பட்டவை. முரட்டுத்தனமான கருப்புக் குதிரைகளோ, ஆசைகள், வேட்கைகள் ஆகியவற்றுக்கான குறியீடுகள். தேர்ப்பாகன் அவற்றைச் சாட்டைகளைக் கொண்டு அடக்க வேண்டியுள்ளது. சாட்டையும் கடிவாளமும் முறையே அத்தியாவசியம். கட்டுப்பாடு கியவற்றைக் குறிக்கின்றன. அறிவு, மனிதனின் தெய்வீகத் தன்மையாகவும் மற்ற கூறுகள் விலங்குத் தன்மையாகவும் சித்தரிக்கப்படுகின்றன.
உடல் ஆன்மாவுக்கான தடையாக இருக்கிறது என்று பிளேட்டோ முடிவுக்கு வந்தார். உடலானது உண்மையையும் ஞானத்தையும் அடைவதற்காகச் சிரமப்பட விடுவதில்லை. அது நமக்கு ஆசைகளையும், அச்சங்களையும், ஆர்வங்களையுமே தருகிறது. நாம் உடலின் இயல்பான தன்மைகளால் களங்கப்பட்டு விடுகிறோம். இவ்வுடலிலிருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ள வேண்டும். தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். சாராம்ச உலகை அறியும் வரை தியானிக்க வேண்டும். அறிவுதான் அதற்குள்ள ஒரே வழி. அதைக் கொண்டு சாரங்கள் வாழும் உலகினைக் கண்டுபிடிக்க முயலுகிறார் பிளேட்டோ.
சிந்தனையை உலகிலிருந்தும், உடலிலிருந்தும், உணர்வுகளிலிருந்தும், புலன்களிலிருந்தும் பிளேட்டோ துண்டித்து விடுகிறார். செயலையும் சிந்தனையையும் வெவ்வேறாக்குகிறார். ஒரு காலத்தில் பேரண்டத்துடன் ஒன்றிப்போன கிரேக்கன், பின்னொரு காலத்தில் அதிலிருந்து பிரிக்கப்பட்டு ஆய்வுக்குரிய புறப்பொருளாகிநான். இப்போது, அவனே இரண்டாகப் பிளவுபட்டு ஆன்மாவாகவும் உடலாகவும் மாறிவிட்டான். பிளேட்டோவின் சிந்தனை, நடைமுறை மனிதனைச் சாடுகிறது. புலன் உணர்வுகளாலும், உள்ளுணர்வுகளாலும் கிளர்ந்தெழுகிறது. கவிஞர்களைச் சாடுகிறது. ஹோமரை வெறுத்தொதுக்குகிறது. `உன்னையே நீ அறிவாய்' என்ற சாக்ரடீசுக்கு எதிராகக் கச்சை கட்டுகிறது. தத்துவ வாழ்க்கை நடைமுறை வாழ்க்கைக்கு மேலானது என்கிறது. அறிவைக் கொண்டு கருத்துகளின் அழிவற்ற வடிவங்களை நிலையற்ற பொருள்களின் மூலாதாரங்களைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கருதும் பிளேட்டோ, கூறுகிறார். `நீ உன் கண்களால் காணும் குதிரை, குதிரைத் தனம் என்ற கருத்தின் தோற்றமே. கலைகளா? அவை புலன்களைச் சேர்ந்தவை. அவையும் பொய்மையின் பகுதிகளே. கருத்துகளே மெய்யான மெய்ம்மை. விடுதலை பெறுவது எவ்வாறு? ஒதுங்கி நில் - செம்மைப்படு. மெய்ம்மையின் நிழல்களை ஆராய்வதில் தொடங்கி மெய்ம்மையை அடை. தோற்றங்களில் தொடங்கிச் சாரங்களைச் சேர். இந்தச் சாரங்களின் உலகைச் சேர்ந்த ஆன்மாவுக்கு, உடலில் இருந்து விடுதலை கொடு!
பிளேட்டோவின் விசாரணை, உலகு பற்றிய உண்மையைக்கண்டறிவதற்கான கருத்துமுதல் அறிவுக் கோட்பாடுதானா? கணக்கற்ற நிகழ்ச்சிப் போக்குகளை இப்பேரண்டத்தில் உள்ள ஏதோ ஒரு அந்நியத் தன்மையை விளக்குவதிலுள்ள சிக்கலா? நடைமுறை வாழ்க்கையை அடிமைகளுக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, சிந்தனை வாழ்க்கையை ஆண்டைகளுக்குத் தந்த வர்க்க நிலைப்பாடா? ஆம்! ஆனால் இக்கேள்விகள் அனைத்தும் மற்றொரு பிரச்சினையைப் பார்க்கத் தவறுகின்றன. பிளேட்டோவின் சிக்கல், இவ்வுலகில் உள்ள தீமையை நடைமுறையில் கடப்பதில் உள்ள சிக்கலே. தனது ஆன்மாவைக் காலத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பாற்றிக் கொள்ள வெளியுணர்வுடன் பிளேட்டோ தேடிக் கொண்ட பாதையே அது. இறவாமை பெறத் துடித்த பிளேட்டோ கூறிய வழி அது.
|