பண்டைய கிரேக்க - ரோமானிய ஞானத்தின் அடிப்படைப் பண்பு மனிதனை ஒரு முழுமைக்குள் வைத்து அவனைப் பற்றிய வரையறுப்பை வழங்கியது தான். இம்முழுமையுடன் மனிதனுக்குள்ள உறவு, அதில் அவன் வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் மனிதன் பற்றி விளக்கத்தை இந்த ஞானம் வழங்கியது. இந்த முழுமை பேரண்டமாக இருக்கலாம். நகர-அரசாக இருக்கலாம். இயற்கையாக இருக்கலாம். அல்லது ஒரு கருத்தாக்க அமைப்பாகவும் இருக்கலாம். இதில் எதுவாயினும் அதில் மனிதனுக்குரிய இடம் இன்னது தான் என வரையறுத்துக் கூறப்பட்டது.
பண்டையக் கிரேக்கனின் பேரண்டத்தில் ஒவ்வொன்றுக்கும் நிலையான இடம் உண்டு; கதிரவன், நிலா, விண்மீன் ஆகியவை போலவே, மனிதனுக்கும் இப்பேரண்டத்தில் நிலையான இடம் உண்டு; எல்லாமே முறைப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன; அறிவைக் கொண்டு எல்லாவற்றையும் விளக்கி விடலாம்; அதன் துணைகொண்டு தனது ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளலாம் என்ற தன்னிறைவு கொண்டவன் அக்கால கிரேக்கன். தான் செயலாக்கத்துடன் மேற்கொள்ளும் ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் அவனுக்கு உறுதியான நம்பிக்கை உண்டு. அவனுக்கு வேண்டியதெல்லாம் திறமையும் அறிவைப் பயன்படுத்தலுமே. மனிதன் தன்னறிவைக் கொண்டு தொழில் நுணுக்கத்தை வளப்படுத்தி, பேரண்டத்தில் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்வை வாழ வேண்டியவன் என்று அவன் நம்பினான்.
அவனது பேரண்டம் காரண - விளைவுக்குட்பட்ட, குறையற்ற, நிறைவான ஒன்று. இத்தகைய பேரண்டம் அவனது உள் நம்பிக்கைக்கான அடிப்படையாக இருந்தது; புற உலகைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையைத் தந்ததே இக்கருத்துதான். அவனைப் பொருத்தவரை, நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்பச் சக்கரம் போல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன; அவன் வரலாற்றின் போக்கைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மனிதனைப் பொருத்தவரை, அவனது ஆளுமையைப் பொருத்தவரை, `அறிவு' தான் அவனது மையம். இப்பேரண்டத்தைப் பொருத்தவரை, `விதி' தான் மனிதனுக்குரிய அடையாளங்களை வழங்குகிறது. அவனது நிலையை விளக்குகிறது. மனிதனின் சாதனைகள் `விதி'க்குக் கட்டுப்பட்டவை.
தேல்ஸ் முதல் டெமாக்ரிடஸ்வரை, உலகம் என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகக் கருதினர். மனிதனால் இவ்வவுலகின் அடிப்படைகளை அறிந்து கொள்ள முடியும். மனிதன் ஈட்டுகிற பெருமைகள் அனைத்திலும் சாலச் சிறந்தது இந்த அறிவு தான் என கிரேக்க மரபு கருதியது. தனக்கு விதிக்கப்பட்டது இன்னதுதான் என்பதைப் பற்றிய தனக்குரிய பேரின்பத்தையும் பற்றிய உணர்வு பெறுதல்தான் கௌரவமிக்கதாகக் கருதப்பட்டது.
பிளேட்டோ முதல் ஸ்டாயிக்குகள் வரையிலானவரிடையே `அறிதல்' என்பது மீண்டும் ஒரு முக்கியத்துவம் பெறுகிறது. மனிதனுக்கு விடுதலையையும், கடந்த நிலையையும், பேரின்பத்தையும் வழங்கக்கூடியது. `அறிதல்' என்பதுதான் என்று கருதப்பட்டது. முதல் மூல உண்மை என்பது புலனறிவுக்குப் புலப்படக்கூடியது என்ற நிலைப்பாடு இருந்தபோதும் சரி, அது மனத்துக்கு மட்டுமே புரியக்கூடியது என்ற நிலைப்பாடு இருந்தபோதும் சரி, `அறிதல்' என்பதே மிகச் சிறப்பான பண்பாகக் கருதப்பட்டது. கருத்துமுதல் கொள்கையினரானாலும் சரி, பொருண்மைக் கொள்கையினரானாலும் சரி, கிரேக்க - ரோமானியத் தத்துவ மரபில் அழுத்தம் தரப்பட்ட கருத்து, அறிதல்.
அடிமை - ஆண்டான் என்ற வர்க்க வேறுபாட்டை நியாயப்படுத்துகிற, இதன்காரணமாக உடல், உழைப்பு, புலனுணர்வு, பொருளுலகு ஆகியவற்றை மறுத்தொதுக்குகிற பிளேட்டோ வாகட்டும், சமூக முரண்பாட்டுச் சுழலிலே சிக்கித் தவிக்கிற மனிதனை எல்லாவகை அச்சங்களிலிருந்தும் விடுவிக்க அறிவு தர முயலும் லூக்ரிஷியஸ் ஆகட்டும். `அறிவு' என்பதை மனிதனின் மாட்சி எனக் கொண்டனர்.
இந்த அறிவு மரபு பிளேட்டோவையும் உருவாக்கியது. பிற்காலத்தே மறுமலர்ச்சித் சிந்தனையாளர்களையும் உள்ளடக்கியது.
|