இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகம் உள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது. குழந்தை பிறந்து 28 நாட்கள் கூட ஆகாத நிலையில் இது போன்ற மரணங்கள் இந்தியாவில் அதிகம் நிகழ்வதாகவும் அது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வின் புத்தாயிரம் ஆண்டு இலக்குகளில் ஒன்றான, குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உலகை மாற்றும் பணிகள் முன்னேற்றம் குறித்த மறு ஆய்வில், இந்தியாவில் ஆண்டுக்கு 21 லட்சம் குழந்தைகள் 5 வயதை எட்டுவதற்கு முன்னதாகவே மரணத்தைத் தழுவுகின்றனர் என்றும், இதில் பிறந்து 28 நாட்கள் கூட வாழ இயலாமல் 10 லட்சம் குழந்தைகள் மடிந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
குழந்தை பிறப்பின் போது முறையான பயிற்சி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாதது, குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்காமல் காலம் தாழ்த்துவது, எடை குறைந்து பிறக்கும் குழந்தைகளுக்கான சிகிச்சை முறைகளில் பின்தங்கிய நிலை, குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களை வெதுவெதுப்பான சூழ்நிலையை உருவாக்கித் தராமல் போவது உள்ளிட்ட காரணிகளால் சிசு மரணங்கள் நிகழ்வதாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சனைகளில் இருந்து குழந்தைகளைக் காப்பாற்ற ஒரே வழி குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் புகட்டிவிட வேண்டும். உலகம் முழுவதும, 5 வயதுக்குட்பட்ட சிசு மரணங்களில் பாதியளவு மரணங்கள் ஊட்டச்சத்து குறைவாக பிறப்பதாலே மரணத்தைத் தழுவுகின்றனர். இதனைத் தொடர்ந்து 37 விழுக்காடு குழந்தைகள் பிறந்த உடனோ, 28 நாட்களுக்குள்ளோ பலியாகின்றனர்.
சுமார் 19 விழுக்காடு நுரையீரல் குறைபாடாலும், 17 விழுக்காடு வயிற்றுப் போக்காலும், 8 விழுக்காடு மலேரியாவாலும், 4 விழுக்காடு அம்மை நோய்களாலும், காயம், உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ்க்கு தலா 3 விழுக்காடும், பிற காரணங்களால் 10 விழுக்காடு குழந்தைகளும் 5 வயதுக்கு உட்பட்டு மரணமடைவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நுரையீரல் குறைபாடால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை எயிட்ஸ்,மலேரியா, அம்மை நோய் ஆகிய நோய்கள் தாக்கி இறப்பவர்களின் கூட்டுத் தொகையை விட அதிகமாக உள்ளனர். உலகம் முழுவதும் இறக்கும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5 -ல் ஒருவர் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும், இந்தியாவில் இது போன்றசிசு மரணங்கள் அதிகம் நிகழ்வதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
உலகில் ஐந்தாவது பிறந்த நாளுக்கு முன்னதாக குழந்தைகள் இறக்கும் விகிதம் முதன்முறையாக கடந்த 2006 -ம் ஆண்டு ஒரு கோடியில் இருந்து 97 லட்சமாக, அதாவது 3 லட்சம் சிசு மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 21 லட்சம் சிசு மரணங்கள் இந்தியாவில் நிகழ்கிறது. இது உலகம் முழுவதும் இறக்கும் குழந்தைகளில் 21 விழுக்காடு ஆகும். உலகம் முழுவதும் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 25 விழுக்காட்டிற்கும் அதிகமானோர் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக உள்ளனர். அதில் மூன்றில் ஒரு பகுதியினர், அதாவது மூன்றில் ஒரு குழந்தை இந்தியாவில் உள்ளனர்.
|