யோகாசனங்கள் எப்படி உருவாயின என்பது பற்றிய கேள்வி ஆசனங்களைப் பயிற்சி செய்யும் பலருக்கும் தோன்றியிருக்கும்.
யோகத்தின் முதல் நூல் என்று கருதப் படும் பதஞ்சலி யோக சூத்திரங்கள் வரையறுக்கப் படுவதற்கு முன்பே யோகம் பற்றிய பல நுட்பங்கள் அறியப் பட்டிருந்திருக்க வேண்டும் என்றே யோக அறிஞர்கள் பலரும் கருதுகிறார்கள்.
பதஞ்சலிக்குப் பின்னர் வந்த "ஹடயோக ப்ரதீபிகா" போன்ற நூல்களில் இன்று மிகப் பிரபலமாகி நாம் பயின்று வரும் பல ஆசனங்களின் பெயர்களும் அந்த ஆசனத்தில் உடலின் தோற்றம் (Postures) எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய சித்திரங்களும் கிடைக்கின்றன. படங்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தாமல் சொற்கள் மூலமே விளக்கினாலும் ஆசனங்களுக்கான தெளிவான கையேடாக இந்த நூல் விளங்கி வந்திருக்கிறது. இது தவிர வழிவழியாக வந்துள்ள தொடர்ச்சியான குரு சிஷ்ய மரபுகளும் இந்த ஆசனங்களில் உள்ள கலை நுணுக்கத்தை சரியான முறையில் இன்று வரை எடுத்து வந்துள்ளன.
ஆசனங்கள் வெளி உறுப்புக்களையும், தசைகளையும் மட்டுமல்ல உடலின் பல உள் உறுப்புக்களையும் நாடி நரம்புகளையும் உறுதியாக்குகின்றன.
பல யோகாசனங்கள் பார்ப்பதற்குக் கடினமாகத் தோன்றினாலும், பயிற்சி செய்பவர்களுக்கு இவை மிக இயல்பானதாகவே தெரியும். பயிற்சி இதற்குக் காரணம் என்றாலும் யோக ஆசனங்களின் தன்மையே அப்படிப் பட்டதாயிருக்கிறது.
குழந்தைகள் வளரும் பருவத்தில் தாங்களாகவே பல ஆசனங்கள் போடுவதைப் பார்க்கலாம். உட்காருவதற்கு வந்து நிற்கத் தொடங்கும் சமயம் பல குழந்தைகளுக்கு வஜ்ராசனம் தானாக வரும். தவழ்வதற்காக அமரும் தோற்றமே ஒரு ஆசனம் தான்! ஆசனங்களின் இந்த இயற்கைத் தன்மை அவற்றுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது.
மனித உடலின் இயக்கம் பற்றிய ஆழ்ந்த நுண்ணறிவு பெற்றிருந்தனர் பண்டைக் கால யோகிகள். காட்டில் விலங்குகள், பறவைகள் இவற்றின் வாழ்வைக் கூர்ந்து கவனித்த அவர்கள் அவை எப்போது அமைதியடைகின்றன, ஆக்ரோஷம் கொள்கின்றன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பல ஆசனங்களை உருவாக்கியிருக்கலாம் என்று ஒரு கருத்து உள்ளது.
யோகாசனங்கள் உருவாக்கும் உடல் தோற்றத்தோடு, அவை தரும் உணர்வு நிலையையும் கருத்தில் கொண்டு பின்னர் பெயர்கள் இடப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
|