நம் உடலில் மருந்துகளின் செயல்பாட்டை நாம் சாப்பிடும் உணவு வகைகள் குறுக்கிட்டு சில நேரங்களில் செயலிழக்கச் செய்யும்.
நாம் எந்தமாதிரியான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதே மருந்துகளின் தீவிரத்திற்கு அடித்தளமாக அமைகிறது.
உதாரணமாக நாம் அருந்தும் பாலில் உள்ள கால்சியம் சத்தானது, நோய் எதிர்ப்பு சக்தியான டெட்ரா சைக்ளினை உடல் கிரகித்துக் கொள்வதைத் தடுக்கிறது.
இதேபோல பல்வேறு ஊட்டச்சத்துகளும் நாம் உபயோகிக்கும் மருந்து, மாத்திரைகளின் செயல்பாட்டிற்கு தடையாக அமைகின்றன எனலாம். ஒரு கட்டத்தில் நமது உடலில் இருந்து மருந்துகளை உணவுப் பொருட்கள் முற்றிலுமாக அகற்றி விடும் நிலை கூட உருவாகலாம்.
எனவே சில மருந்துகளை உணவுடன் சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
வேறு சில மருந்துகளை உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அப்போது தான் வயிற்றில் எரிச்சல் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
சில நேரங்களில் ஊட்டச்சத்துக்களை உடல் கிரகிப்பதை தடுக்கும் நிலையை சில மருந்துகள் ஏற்படுத்தும்.
கொழுப்புகளை குறைக்கும் அல்லது தவிர்க்கும் மருந்துகளை நாம் எடுத்துக் கொள்ளும் போது, கொழுப்பில் கரையக்கூடிய விட்டமின்களும் உடலில் இருந்து அகற்றப்படும் நிலை உருவாகிறது.
சில நேரங்களில் உடலில் இருந்து பொட்டாசியம், காரீயம் போன்ற மினரல் சத்துகள் குறைபாட்டையும் இவை ஏற்படுத்தி விடக்கூடும்.
உயர் ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகளை சாப்பிடும்போது அவை பொட்டாசியம் சத்தினை உடலில் இருந்து வெளியேற்றக்கூடிய அபாயமும் உண்டு. உடலின் திரவ நிலையை கட்டுக்குள் வைத்திருக்கும் செயலை பொட்டாசியம் மேற்கொள்கிறது. திரவம் இருப்பது நிலையற்றதாகி விட்டால் நரம்புத் தளர்ச்சி, தசைப்பிடிப்பு போன்றவை உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.
இதுபோன்ற பொட்டாசியம் சத்து குறைவானவர்கள் வாழைப்பழம், சிட்ரஸ், காய்ந்த பழ வகைகள், தக்காளி உள்ளிட்ட பொட்டாசியம் நிறைந்த உணவு வகைகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மருந்துகளை பாதுகாப்பாக எடுத்துக் கொள்வது எப்படி?
நீங்கள் எங்கு சென்றாலும் உங்களின் மருந்துகள் பற்றிய விவரம், அவற்றின் சாப்பிடும் அளவு போன்ற தகவல்களை உடன் எடுத்துச் செல்லுங்கள்.
உங்களுக்கு புதிய மருந்து பரிந்துரைகளை டாக்டர் எழுதிக் கொடுக்கும்பட்சத்தில், நீங்கள் ஏற்கனவே சாப்பிட்டு வரும் மாத்திரை, மருந்துகள் பற்றிய விவரங்களை அவரிடம் தெரிவிக்கவும்.
இதன்மூலம் மாத்திரைகள் குளறுபடியாவது தடுக்கப்படும், மேலும் கூடுதலாக விட்டமின் மாத்திரைகளையும் டாக்டர் எழுதித் தர ஏதுவாகும்.
நீங்கள் சாப்பிட்ட மாத்திரை, மருந்துகளால் ஏதாவது பக்கவிளைவுகள் இருப்பது தெரிந்தால் உடனடியாக உங்களின் டாக்டரையோ அல்லது மருந்தாளுநரையோ அணுகவும்.
பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைத்த மாத்திரைகளை முழு அளவு டம்ளர் தண்ணீரை குடித்து சாப்பிடவும். இதன்மூலம் மாத்திரைகளால் ஏற்படும் வயிறு எரிச்சல் போன்றவை ஏற்படாது. குளிர்பானங்கள், திராட்சை சாறு போன்றவற்றுடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மாத்திரை, மருந்துகளுக்கு அறிவுறுத்தியுள்ள குறிப்புகளின் அடிப்படையில் பின்பற்றவும்.
இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுங்கள். பக்க விளைவுகளோ, எதிர் விளைவுகளோ இல்லாமல் உற்சாகமாகச் செயல்படுங்கள்.
|