முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  நலமுடன் வாழ  டிப்ஸ்
 
கண் சொட்டு மருந்துகளையும், ஆயின்ட்மெண்ட்களையும் பயன்படுத்துவது எப்படி?
Webdunia
கண் சொட்டு மருந்து பாட்டிலின் லேபிள் அல்லது ஆயின்ட்மெண்ட் உறையிலேயே அவற்றைப் பயன்படுத்தும் விதம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். மருத்துவர்கள் பரிந்துரை செய்த முறைகளில் இவற்றைத் துல்லியமாகப் பயன்படுத்த வேண்டும்.

கண்களில் போடப்படும் மருந்துகள், சிறிது நேரத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தும். இருப்பினும் மருந்துகளால் கண்கள் சிவந்து இமைகளில் வீக்கம் ஏற்படுமானால், உடனடியாக கண் மருத்துவரை அணுகுவது சிறந்தது.

ஒவ்வொரு முறை மருத்துவமனைக்கு செல்லும்போதும் மருத்துவர் பரிந்துரை செய்த மருந்துகளை எடுத்து வருவது நல்லது. ஏனெனில் அப்போதுதான் அதே மருந்தை தொடரலாமா? அல்லது வேறு மருந்துகளை மாற்றலாமா? என்று மருத்துவருக்குக் தெரிய வரும்.

கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்தும் போது ஒன்று அல்லது 2 சொட்டுகளை கண்களுக்குள் செல்லுமாறு விடவேண்டும்.

கண்களை சுத்தம் செய்யும் முறை :

1. முதலில் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும்.

2. கண்களைத் துடைக்க பஞ்சை பயன்படுத்தவும்.

3. கண் சுத்தம் செய்யும் திரவத்தை பஞ்சின் மேல் ஊற்றவும்.

4. மூக்கிற்கு அருகில் உள்ள கண் முனையை உட்புறமாக துடைத்து காது பகுதியில் உள்ள முனை வரை வெளிப்புறமாகத் துடைக்கவும்.

5. ஒருமுறை உபயோகப்படுத்திய பஞ்சினை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.


சொட்டு மருந்துகள் மற்றும் ஆயின்ட்மெண்ட்டுகள் :

1. முதலில் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவவும்.

2. கண்களை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

3. சொட்டு மருந்து சீசாவை நன்றாக குலுக்கவும்.

4. சீசாவை குலுக்கும்போது தலைகீழாக இருக்கும்படி பார்த்து குலுக்கவும்.

5. கண்களின் கீழ் இமைப் பகுதியை லேசாகத் திறந்து, டிராப்பர் கொடுத்திருந்தால் அதன் கீழ் முனையை பிடித்துக்கொண்டு போடவும். டிராப்பரை நீரில் போட்டு அலசுவது கூடாது.

6. மருந்து போடும்போது கண்ணிலோ, இமையிலோ டிராப்பர் படாமல் இருக்க வேண்டும்.

7. மருந்து போட்டவுடன் கண்களை மெதுவாக மூடவும். உட்புற மூலையில் விரல்களால் சிறிது நேரத்திற்கு லேசாக அழுத்தவும்.

8. நிறம் மாறிவிட்ட கண் சொட்டு மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.

9. ஒரே சமயத்தில் பல சொட்டு மருந்துகளை கண்களில் விடும் நிலை ஏற்பட்டால், ஒரு சொட்டு மருந்திற்கும், இன்னொரு சொட்டு மருந்திற்கும் குறைந்தது 5 நிமிட இடைவெளி தேவை.

10. அதேபோல் ஆயின்ட்மெண்ட் டியூபை பிதுக்கும் முன் அதனை சிறிது நேரம் கைகளிலேயே வைத்திருந்தால் கைச்சூடு டியூபில் ஏறும். இது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கண் சொட்டு மருந்துகளையோ, ஆயின்ட்மெண்ட்களையோ கண்களில் போட்ட பிறகு கண்களை மூடிய நிலையிலேயே விழிகளை அனைத்துப் பக்கமும் உருட்ட வேண்டும். ஒன்றிற்கு மேற்பட்ட ஆயின்ட்மெண்ட்களை கண்களில் போட வேண்டுமெனில், 10 நிமிட இடைவேளி தேவை.

மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்குமாறு குறிப்பிட்டிருந்தால் குளிர்பதனப்பெட்டியில் (ரெப்ரிஜிரேட்டர்) வைத்துப் பயன்படுத்தவும். எல்லாவற்றிற்கும் மேலாக தேதி முடிந்த மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.