தற்கொலைக்கு மருந்து!
தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு இரண்டு வகைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒன்று தியானம், மற்றொன்று ஆலோசனை வழங்குதல். ஒரு சிலருக்கு இரண்டுமே தேவைப்படும்.
ஆலோசனை
தற்கொலைக்கான காரணத்தைக் கண்டறிந்து அந்த பிரச்சினையை வேறு வகையில் பார்க்கவும், அதற்குரிய தீர்வைத் தேடவும், அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கப்படும்.
தங்களது மனோபாவத்தை மாற்றிக் கொள்ளுதல், தன்னம்பிக்கையை வளர்க்க பயிற்சி, பிரச்சினைகளை கையாளும் திறன், சமூக அமைப்பு பற்றிய அறிவு, மனதிற்கு ஓய்வளிக்கும் பயிற்சி, தசைகளை அமைதிப்படுத்துதல் போன்றவையும் இந்த ஆலோசனை சிகிச்சையில் அடங்கும்.
தியானம்
மனதை ஒருநிலைப்படுத்தும் தியானப் பயிற்சி அளிக்கப்படும். தியானம் பயின்றவரை வைத்து அவருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
அதே சமயம் மனநிலைக்குத் தகுந்தவாறு மனநல மருத்துவரிடம் மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நாட்கள் செல்ல செல்ல மருந்தின் அளவில் லேசான மாற்றத்துடன் மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். பொதுவாக நான்கு முதல் 9 மாதங்கள் வரை மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கும். பின்னர் மருத்துவரின் ஆலோசனையுடன்தான் மருந்தை நிறுத்த வேண்டும்.
இந்தியாவில் தற்கொலை
தற்கொலைக்குக் மன அழுத்தம்தான் முக்கியக் காரணம் என்பது புரிந்து விட்டது. ஆனால் தற்கொலைக்கே தூண்டும் அளவிற்கு மன அழுத்தம் வர முக்கியமாக மூன்று காரணங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அதில் முதல் காரணம் எய்ட்ஸ் நோய் என்றும், இரண்டாவதாக தேர்வு அல்லது மற்றவற்றில் தோல்வியாகவும், மூன்றாவதாக கடன் தொல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் கிராமங்களில்தான் அதிகப்படியான தற்கொலைகள் நடக்கின்றன.
எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இதுவரை கண்டறியப்படாத நிலையிலும், எய்ட்ஸ் என்றாலே தகாத உறவு வைத்திருந்தால் வரக்கூடிய நோய் என்ற பொதுமக்களின் எண்ணத்தினாலும் எய்ட்ஸ் நோய் தாக்கியவர்கள் உடல் அளவில் அல்லாமல் மன அளவில் மிகுந்த உளைச்சல் அடைகின்றனர்.
இந்த சமூகம் என்ன சொல்லுமோ என்று பயந்தும், உற்றார் உறவினர்களின் புறக்கணிப்பாலும் தான் அதிகமான எய்ட்ஸ் நோயாளிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
சில பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் தங்களது தேர்வுகளில் ஏற்படும் தோல்விக்காக மனமுடைந்து தற்கொலையைத் தேடிக் கொள்கின்றனர். தேர்வுத் தோல்விக்கு அடுத்தபடியாக காதல் தோல்வியும் உள்ளது.
கடன் அளவில் எடுத்துக் கொண்டால் கந்து வட்டிக்கும், வங்கியில் கடன் வாங்கியும் நிலத்தில் பணத்தைப் போடும் விவசாயிக்கு, மழையும், தட்பவெப்ப நிலையில் கைகொடுக்காமல் போகும் பட்சத்தில் பேரிடி விழுகிறது. இந்த நிலையில் வாங்கியக் கடனை செலுத்த முடியாமல், உணவிற்கும் பஞ்சம் ஏற்பட்டு, நிலத்தையும் இழந்து தங்களது வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
எனவே எந்த பிரச்சினைக்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. பிரச்சினையைக் கண்டு ஓடுவதை விட, அதனை எதிர்கொண்டு வெல்வதே மானுடத்தின் வெற்றி.
வாழ நினைத்தால் வாழலாம்.
|