ஹிப்னோதெரபி முறையில் கருநிலை மனபாதிப்பை ஆராய்தல்
உள்மனம்தான், அந்த உள் மனதில் விதைக்கப்படும் எண்ணங்கள் தான் ஆழமாக அழுத்தமாக பதிந்து ஒருவரை மனநோயாளியாகவோ, செம்மையான மனம் கொண்டவராகவோ மாற்றுகிறது. உள்ளம் என்பது சரியாக இருந்தால் உலகம் முழுவதும் இனிக்கிறது.
இந்த உள்மனதை ஹிப்னோ முறையில் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கடந்த காலத்தை நோக்கி செல்லுதல் முறையில், வயதை படிப்படியாக குறைத்து அவருடைய கருநிலை பருவத்திற்கு கொண்டு சென்று, அப்போது ஏற்பட்ட அனுபவங்களை ஆராய முடியும்.
செல்விக்கு வயது 18. 3 வயது முதலே நெஞ்சு வலி. படபடப்பு, பயம் என்று ஒரே பிரச்சினை இது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும் என்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எல்லா டெஸ்ட்டுகளும் எடுத்து, எல்லாம் நார்மல் என்று வந்துவிட்டன. இதய வலிக்கு தரப்பட்ட மருந்துகள் தற்காலிகமாக அந்த வலியை நிறுத்தவே தவிர நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. செல்வியால் கடுமையாக எதையும் செய்ய முடியாது. தொடர்ந்து ஒரு 4 மணி நேரம் படிக்க முடியாது. ஞாபக மறதியும் வந்து வாட்டும். படித்தால் கண் நரம்புகள் இழுப்பது போல் இருக்கும். தலைபாரமாகிவிடும். ஆனால் உடலளவில் செல்விக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாக தெரிந்தது. இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக இருக்கும் என்ற மருத்துவர்களின் ஆலோசனைப்படி மனநல சிகிச்சைக்காக செல்வி இங்கே வந்தபோது மிகவும் டென்ஷனாக குழப்பத்துடன் இருந்தாள்.
மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனை எப்படி உடல் நோயாக மாறும் என்று கேட்கத் தோன்றுகிறது இல்லையா? ஆமாம், மனம் பாதிக்கப்படும்போது உடலும் பாதிக்கப்படுகிறது. இதை "உளம் சார்ந்த உடல் நோய்கள்" (Pshcho Somatic Discorders) என்கிறோம். அதாவது மனவேதனை காரணமாக ஏற்படும் உடல் நோய்கள். "வியாதி உடலிலே - அதற்கான ஆணி வேர் மனதிலே" எனப்து போல செல்விக்கு மனப் பிரச்சனையும், உடல் பிரச்சனையும் சேர்ந்தே இருந்தது, வாட்டியது.
கருநிலை பருவத்தில் ஹிப்னோ ஆய்வில் செல்வி சொன்னது என்ன?
செல்வியின் வயது "ஹிப்னோ ரிக்ரஷன்" முறையில் படிப்படியாக குறைக்கப்பட்டு 1 வயது வரை ஆராய்ந்தும், எந்த தடயமும் கிடைக்காததால் கருநிலை பருவத்திற்கு செல்வி அழைத்துச் செல்லப்பட்டாள். அவள் அப்போது சொன்னது. . .
"கருவறை எனக்கு சிறை போல இருட்டாக இருந்தது. தினமும் நான் கேட்டதெல்லாம் அப்பாவின் ஏச்சுக்கள், அம்மாவின் அழுகை, துயரம் தாங்காமல் அம்மா அழுது அழுது அவளுக்கு நெஞ்சுவலியே வந்து விடும்".
எப்போது அப்பா வீட்டிற்கு வருவாரோ, என்ன செய்வாரோ என்ற திகில் அம்மாவிடம் எப்போதும் இருந்தது. "நம் குடும்பம் இருக்கும் லட்சணத்தில் இந்த குழந்தை தேவை தானா? இதை அழித்துவிடு என்று பலமுறை சொல்லியும் நீ கேட்கவில்லை என்று வெறித்தனமாக அம்மாவின் கழுத்தை நெறிக்க வந்தார். அம்மா வீறிட்டு அலறி, நெஞ்சுவலி வந்து கீழே விழுந்துவிட்டாள். அம்மாவை யாரும் கவனிக்கவில்லை. பயமும் திகிலும் அம்மாவை ஆட்டிப் படைத்தன. இந்த உணர்வுகள் எல்லாம் என்னை மிகவும் பாதித்தன. அம்மாவின் வலியும், வேதனையும் என்னைத் தாக்கின. எனக்கு இந்த உலகத்தில் பிறக்கவே பிடிக்கவில்லை."
"எப்போதும் இதே நினைவு என்னை வந்து இப்போதும் வாட்டுகிறது. இந்த துயர நினைவுகள் வரும்போது தலைபாரமும், நெஞ்சுவலியும், பயமும் ஏற்படுகின்றன. யாரைப் பார்த்தாலும் பயம், எங்கே சென்றாலும் பயம், அந்த பயம் அதிகமாகும் போது நெஞ்சுலி என்று பயமே வாழ்க்கையாகிவிட்டது. வாழ்க்கையில் பயங்கள் ஏற்படலாம். ஆனால் பயமே வாழ்க்கையாகிவிடக் கூடாது. எனக்குப் படிப்பு, திருமணம் எதுவும் வேண்டாம். என் அம்மாவைப் போல நானும் கஷ்டப்பட விரும்பவில்லை. . " என்று சொல்லி அழுத செல்வியை அமைதிப்படுத்தி தக்க சிகிச்சை தந்தபின் படிப்படியாக செல்வி குணமடைந்தாள். இப்படிப்பட்ட பிரச்சனைகள் விரைவில் தீர்வதில்லை. மிகவும் கடுமையான முயற்சியுடன் தான் குணப்படுத்த முடியும் என்பதே உண்மை. பொறுமையும், திறமையும் இருந்தால் வெற்றி நிச்சயம்.
இத்தகைய "கருநிலை பருவத்தை ஹிப்னோ முறையில் ஆராய்ந்து குணப்படுத்துதல்" பற்றிய தகவல்கள் இந்தியாவில் அதிகமாக வெளியிடப்படவில்லை. ஆனால் மனோசக்தி இதழின் ஆசிரியர் திரு. விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் அவர்கள் தன்னுடைய "முற்பிறவி மறுபிறவி அதிசயங்கள்" என்ற புத்தகத்தில் 23 வருடங்களுக்கு முன்பாகவே இதைப்பற்றி ஆராய்ந்து அழகாக விளக்கமாக எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய கருவில் ஏற்படும் மன பாதிப்பைக் கூட குணப்படுத்தும் அரிய முறை ஹிப்னோதெரபி என்றால் மிகையாகாது.
லதாவுக்கு வயது நான்கு. எதற்குமே அழமாட்டாள். பசித்தாலும் அழவே மாட்டாள். பூச்சி கடித்தாலும் அழமாட்டாள். பார்வையில் ஒரு குழந்தைக்கே உரிய சுட்டித்தனம் இருக்காது. எந்த நேரமும் கண்ணை மூடிக்கொண்டு தனியாக உட்கார்ந்திருப்பாள். ஒரு வேளை இது மன வளர்ச்சியற்ற குழந்தையோ (Mentally Retarded Child) என்று எண்ணி சிகிச்சைக்கு அழைத்து வந்தார்கள். உளவியல் ஹிப்னாடிச முறையில் ஆராய்ந்தபோது உண்மை தெரிந்தது.
லதாவுக்கு பிரச்சனை அவள் ஒன்பது மாதக் கருவாக தாயின் வயிற்றில் இருந்தபோதே ஆரம்பித்துவிட்டது. லதாவின் தாய் உஷாவுக்கு பயந்த மனசு, கணவன் குடித்துவிட்டு வந்து என்ன செய்வானோ என்ற தினசரி திகிலும், பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்குக் கூட அனுப்பாத அவன் குணமும் பீதியைத் தந்தன. இதை யாரிடம் சொல்லி அழுவது என்று அவள் தனக்குத்தானே சிந்தித்து மாய்ந்து போவாள். இந்த தாயின் பயமும், திகிலும் அவள் உடலைப் பாதித்தன. உடலில் உண்டான கருவையும் பாதித்தன. தாயின் மன இயல்புகளை குழந்தை அப்படியே பிரதிபலித்தது. அதனால்தான் கருவுற்றிருக்கும் நேரம் ஒரு தாய் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். இங்கு லதாவும், அவள் அன்னையைப் போல உணர்ச்சிகளை உட்புதைத்து மன அழுத்தமும், மன இறுக்கமும் உள்ள குழந்தையாக பிறந்தவள். தாயின் மன பாரம் இங்கு குழந்தையை பாதித்தது. தக்க ஹிப்னாடிச சிகிச்சைக்குப் பின் பாதிப்பும் நீங்கியது.
அஞ்சு வயது குமாருக்கு எப்போதும் ஒரு வெறி. எதையாவது உடைப்பது, யாரையாவது அடிப்பது என்பது பழகிப்போன விஷயம். பக்கத்து வீட்டு பையனை இருப்புக் கம்பியால் அடித்து மண்டையை உடைத்தபோதுதான், இது சாதாரண பிரச்சனை அல்ல என்று குமார் மனோதத்துவ சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டான்.
இவனை ஒரு வயது வரை "ரிக்ரஷன்" (Regression) முறையில் கடந்த காலத்திற்கு கொண்டு போயும் எந்தத் தடயமும் கிடைக்காததால், அதற்கு முந்தைய கருவறை பருவத்திற்கு (Womb Stage) கொண்டுபோய் ஆராய்ந்தபோது குமார் சொல்லத் துவங்கினான்.
"அப்பா, அம்மாவை அடிக்காத நாளே கிடையாது. கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பார். பாட்டியும், அம்மாவுக்கு சூடு வைப்பாள். தலை முடியை பிடித்து இழுத்து அடிப்பாள். அம்மா அழுதுகொண்டே இருப்பாள்." தன் ஆத்திரத்தையெல்லாம் கோபமாகக்கூட காட்ட முடியவில்லையே என்று குமாரின் அம்மா ஆத்திரங்களை உட்புதைத்தாள். உட்புதைக்கும் உணர்வுகளும் அப்படியே வயிற்றில் கருவாக இருக்கும் குமாரை சென்றடைகின்றன. ஒவ்வொரு நரம்பிலும் ஆத்திரத்தையும், வெறியையும் அவன் பிரதிபலிக்கிறான் என்பது தெரிந்தது. தக்க உளவியல் சிகிச்சை அளித்தபின் குமார் சாதுவாக மாறிவிட்டான்.
கருவிலேயே பிரச்சனை தொடங்கிவிடுகிறதா என்று அதிசயப்படுகிறீர்களா? வேண்டாம். அதைவிட அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது.
அதுதான் முற்பிறவி, பாதிப்பு, கருவாக நீங்கள் இந்த உலகத்திற்கு வருமுன் கடந்த பிறவியில் ஏற்பட்ட பாதிப்பு. நம்ப முடியவில்லையே என்கிறீர்களா?
அமெரிக்க உளவியல் மருத்துவ பல்கலைக்கழகம் பல வருடங்கள் ஆராய்ந்து முற்பிறவி அச்சங்கள் (Past Life Phobias) என்று ஒன்று இருக்கிறது; அது இன்றைய நல்வாழ்வை பாதிக்கிறது. அந்த பாதிப்பால்தான் நம் புத்தகத்தில் இல்லாத புதுவகை மனநோய்களுக்கு ஆளாகிறோம் என்று கண்டுபிடித்து, நிரூபித்தும உள்ளது.
கருவில் திருவுடையவர் என்று சொல்லும் வார்த்தை எத்தனை உண்மையானது! அன்று நம் முன்னோர்கள் கர்ப்பிணியாக இருக்கும் பெண் அமைதியாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டினார்கள். பயம், சஞ்சலம் எதுவுமின்றி நிம்மதியுட்ன அவள் இருந்தால்தான் பிறக்கும் குழந்தை நல்ல குணம் இயல்புகளைக் கொண்டிருக்கும் என்று நம்பினார்கள்.
|