சென்னை மருத்துவமனையில் எலும்பு மூட்டு உலோக உள்வைப்பு வங்கி
புதன், 25 நவம்பர் 2009( 14:25 IST )
சென்னை அரசு பொது மருத்துவமனையில் இயங்கி வரும் முடநீக்கியல் மற்றும் விபத்தியல் சிகிச்சை நிறுவனத்தில் நேற்று எலும்பு மூட்டு உலோக உள்வைப்பு வங்கி தொடங்கப்பட்டது. இந்த வங்கியை சுகாதார துறை முதன்மை செயலாளர் வி.கே.சுப்புராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குநர் மருத்துவர் எஸ்.விநாயகம், அரசு பொது மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் மோகனசுந்தரம், முடநீக்கியல் மற்றும் விபத்தியல் சிகிச்சை நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் மருத்துவர் மயில்வாகனன் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுகாதார துறை முதன்மை செயலாளர் வி.கே.சுப்புராஜ் பேசுகையில், சென்னை அரசு மருத்துவமனையைச் சேர்ந்த முடநீக்கியல் மற்றும் விபத்தியல் சிகிச்சை நிறுவனத்தில் 24 மணி நேர விபத்து சிகிச்சை பிரிவு இயங்குகிறது. இந்த நிறுவனத்திற்கு சென்னை மாநகரம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிகிச்சை பெற வருகிறார்கள். மனிதனின் ஆயுட்காலம் உயர்ந்து கொண்டு வருவதாலும் மூட்டு தேய்மானம் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இந்த அறுவை சிகிச்சைக்கு 11/2 லட்சம் வரை செலவாகிறது. எனவே சென்னை பெரிய மருத்துவமனைக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு உதவும் வகையில் இந்த எலும்பு மூட்டு உலோக உள்வைப்பு வங்கி தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.