பிறக்கும் போதே தலை ஒட்டி பிறந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகளின் தலைகளை ஆஸ்திரேலிய மருத்துவர்கள் 27 மணி நேர கடினமான அறுவை சிகிச்சைக்குப் பின் வெற்றிகரமாக பிரித்துள்ளனர். தற்போது குழந்தைகள் மயக்க நிலையில் இருக்கின்றன.
வங்காளதேசத்தைச் சேர்ந்த சிறுமிகள் கிருஷ்ணா மற்றும் திரிஷ்ணா இரட்டைச் சகோதரிகளாவர். தற்போது 3 வயதாகும் இந்த சிறுமிகள் பிறக்கும்போதே தலை ஒட்டிய நிலையில் பிறந்தார்கள். இவர்களுக்கு தனித்தனி மூளை, நரம்பு மண்டலங்கள் இருந்ததால், இவர்களை தனித் தனியாக பிரித்து எடுக்க ஆஸ்திரேலிய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கிருஷ்ணாவும், திரிஷ்ணாவும் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள ராயல் சில்ரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
இருவரது தலையையும் தனித்தனியாக பிரிப்பதற்கான அறுவை சிகிச்சையை நேற்று முன்தினம் ஆன்ட்ரூ ஸ்மித் மற்றும் டோனி ஹோம்ஸ் தலைமையிலான 16 மருத்துவர்கள் குழு துவங்கியது. மிகவும் சிக்கல் நிறைந்த இந்த அறுவை சிகிச்சை தொடர்ந்து 27 மணி நேரங்கள் நீடித்தன. நேற்று முன்தினம் துவங்கிய அறுவை சிகிச்சை, நேற்று காலை 11 மணி அளவில் முடிவடைந்தது. நடந்து முடிந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சிறுமிகளின் மூளைத் திசுக்கள் பிரிக்கப்பட்டு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது. தலை ஒட்டியிருந்த குழந்தைகள் தற்போது தனித் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். இதனைப் பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
இது போன்ற அறுவை சிகிச்சை செய்வதற்கான வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும் என்பதால் மிகுந்த சிரத்தையுடன் மருத்துவர்கள் வெகு சிறப்பாக அறுவை சிகிச்சையை நடத்தியிருக்கிறார்கள். தற்போது இந்த சிறுமிகள் மயக்க நிலையில் (கோமா) வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் சில நாட்களுக்கு இதே நிலை தொடரும். அதன் பின்னரே இருவரும் கண்விழிப்பார்கள்.
அறுவை சிகிச்சை திருப்திகரமாக முடிந்திருப்பது மனநிறைவை அளிக்கிறது. எனினும், அடுத்து தலையின் மறுகட்டமைப்பு சிகிச்சையில் இன்னும் வெகு தூரம் நாங்கள் செல்ல வேண்டும். அது எவ்வளவு காலம் என்பதை இப்போதே கூற இயலாது.
அடுத்த கட்டமாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சிறுமிகள் இருவரது மண்டை ஓட்டையும் மூடுவார்கள். இதன் பின்னர் அவர்களது தோல் திசுக்களை நோய்த் தொற்று இல்லாமல் பாதுகாக்க வேண்டும். எனவே கிருஷ்ணாவும், திரிஷ்ணாவும் இன்னும் சில நாட்கள் கோமா நிலையில் வைக்கப்படுவார்கள்.
அறுவை சிகிச்சையின்போது சிறுமிகளின் மனோ ரீதியான நிலைமை மேம்பட்டு இருந்தது. அதேபோல், அவர்களுடைய உடல் நலமும் மேம்பட வேண்டும். எல்லாம் நல்லபடியாக நடப்பதற்கான முயற்சிகளில் நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இது முடிந்த பின்பே அறுவை சிகிச்சை முழுமையாக முடிந்ததாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இந்த குழந்தைகள் விரைவில் குணமடைய நாம் இறைவனை பிரார்த்திப்போம்.